நம்ப முடியவில்லை... சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்த மாதவன் இப்போது தயாரிப்பாளர் ஆகிவிட்டார். அந்த லவ்வர் பாய் இமேஜ் இன்னமும்தான் இருக்கிறது. இளம் பெண்கள் பலரது ஏக்கப் பெருமூச்சுகளுக்கு இன்னமும் மாதவன் உரிமையாளர்தான். ஆனால் மாதவன் மனதால் மிகவும் முதிர்ந்து இருக்கிறார்.மாதவன் தயாரிப்பாளர்... நம்ப முடியவில்லையே...?
வாழ்க்கையில் நம்ப முடியாதது எது தெரியுமா? நிஜம்தான். யதார்த்தம்தான். சில நேரம் கற்பனையை மிஞ்சுகிற அளவுக்கு வாழ்க்கை இருக்கும். சொன்னால் கூட நம்ப முடியாது. நேர்ல - நிஜத்துல சந்திச்சால்தான் தெரியும். உலகத்துலயே ஆபத்தான ஏன் இன்ட்ரஸ்டிங்கான ஏரியா எது தெரியுமா... நம்ம லைஃப்தான். மத்தவங்க சொல்றபோது எனக்கு நம்ப முடியலை.. நானே பார்க்கிறப்போ நம்ப வேண்டியிருக்கு.
தத்துவமாக உதிர்க்கிறார். சரளமாகக் கொட்டுகின்றன வார்த்தைகள்.
எதை வைத்து இப்படியெல்லாம் சொல்கிறீர்கள்...?
நான் தயாரிப்பாளர் ஆனதை நம்ப முடியலைன்னு நீங்க சொல்லலையா... இது நீங்க எதிர்பார்க்கலை அல்லவா... மாதவன்னா துறுதுறு விளையாட்டுப் பையனா நினைச்சிருந்தீங்க இல்லையா?
சில டைம் லைஃப் நம்மை எங்கெங்கோ இழுத்துட்டுப் போகும். அதன் போக்கில் அதை ஏத்துக்கறது ஒரு சிலருக்குப் பிடிக்கும். அதை எதிர்த்து நின்று மூக்குடை படுறது சிலருக்கு வழக்கம். நான் லைஃப்பை அதன் போக்கில் ஏத்துக்கற டைப். ஏன்ன லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்னு நம்புறவன் நான். வாழ்க்கை அழகானதுதான். இப்ப நினைச்சாலும் நம்ப முடியலை. ஆச்சரியமா இருக்கு. அலைபாயுதே டைம்ல சென்னைக்கு வந்தபோது எனக்குத் தெரிஞ்ச ஒரே பெயர் - ஒரே மனிதர் மணிரத்னம். வேறு எதுவுமே தெரியாது. ஒரே படம்தான் முடிச்சேன். பத்து படங்களில் நடிச்ச பாப்புலாரிடியும் பரபரப்பும் கிடைச்சது. தமிழ்நாட்டு மக்கள் எல்லாருக்குமே நான் பரிச்சயமாய்ட்டேன். இதுதான் சினிமா மேஜிக். இதன் பின்னணியில் இருந்தது மணிரத்னம்கிற ஸ்கூல். அதை நான் மறக்கமாட்டேன். நான் யாருன்னு என்னை அறிமுகப்படுத்த நினைக்கிறப்போ ஓ உங்களைத் தெரியுமேன்னு என்னோட விசிடிங் கார்டை காட்டினால் எப்படி இருக்கும்? அதுதான் என் விஷயத்தில் நடந்தது. இந்த சந்தோஷத்தில் ஏழு வருஷம் ஓடிப்போச்சு. மறுபடியும் புறப்பட்ட இடத்துக்கே வர்றேன். நான் ஒரு ரீமேக் படத்துல நடிச்சேன். நிஷிகாந்த் காமத் இயக்கின மராத்திப் படம். டோம்பிவிலி ஃபாஸ்ட் படம்தான் தமிழில் எவனோ ஒருவன். படம் முடிச்சி போட்டுப் பார்த்ததும் அந்தப் படத்துக்கு முழு உரிமை கொண்டாடணும்கிற ஆசை வந்திச்சு. உடனே விலை பேசி வாங்கிட்டேன். ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு. நான் இதுக்காகத்தான் இத்தனை நாள் காத்துக்கிட்டிருந்த மாதிரி இருந்துச்சு. அதனால்தான் சந்தோஷமா நானே தயாரிப்பு உரிமையை வாங்கியிருக்கேன்"
நடிகர்கள் பலரும் தயாரிப்பாளராகி இருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் நீங்களும் சேர்ந்து விட்டீர்கள் அல்லவா...?
தயவு செஞ்சு மொத்தமான பட்டியலில் என்னைச் சேர்த்துடாதீங்க. ஏன்னா வெறும் கமர்ஷியல் லாபத்துக்காக படம் பண்றது வேறு... கமர்ஷியல் மட்டுமல்ல மனத்திருப்திக்காகவும் படம் வேணும்னு நினைக்கிறவங்க சில பேர்தான். அந்த வகையில் கமல் சார் இருக்கார். இப்போ பிரகாஷ்ராஜ் சேர்ந்து இருக்கார். இந்தப் பட்டியலில் மாதவனையும் சேர்த்துக்குங்க. அப்படிப்பட்ட ஒரு தயாரிப்பாளரா இருக்கத்தான் நான் விரும்பறேன். நல்லதா ஒரு படம் கொடுத்தா கிடைக்கிற திருப்தியே தனி. அதுல ரிஸ்க் இருக்கலாம். பரவாயில்லை. நல்ல விஷயத்துக்கு ரிஸ்க் எடுக்கலாம். தப்பில்லை".
சரி எவனோ ஒருவன் படத்தில் ஏதோ ஒரு விஷயம் இருக்குமே அதைச் சொல்வீர்களா?
இந்தப் படம் இதுவரை 27 சர்வதேச விழாக்களில் கலந்துக்கிட்டிருக்கு. பரிசும் வாங்கியிருக்கு. அப்படிப்பட்ட படத்தைத்தான் எவனோ ஒருவன்னு பண்ணியிருக்கோம். மராத்தியில் பெரிய ஹிட். சிறந்த மராத்திப் படத்துக்கான விருதையும் இந்த டோம்பிவிலி ஃபாஸ்ட் பெற்றுள்ளது.
தமிழில் அதைக் கொண்டு வந்தபோது சில புதுமைகள் செய்யப் போறோம். படம் டிசம்பரில் வெளியிடத் திட்டம். அதற்கு முன் உலகெங்கும் சில நாடுகளில் சில நகரங்களில் சிறப்புக் காட்சிகள் நடத்த ஏற்பாடு செய்திருக்கோம்.
எந்தெந்த வெளிநாடுகளில் காட்சிகள் நடத்தப் போகிறீர்கள்?
அமெரிக்கா, கனடா, மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா இப்படி பல நாடுகளில் திரையிட இருக்கோம். இங்கெல்லாம் இந்தியப் படங்கள் பெரிய வரவேற்பைப் பெற்று வருவது சந்தோஷமான விஷயம். காலமாற்றத்தில் இது ஒரு ஆரோக்கியமான விஷயம். அங்கெல்லாம் வசிக்கும் இந்திய மக்களுக்கு நமது படங்கள் மீது அதிக ஆர்வம் உள்ளது. அதனால்தான் எச்.எஸ்.பி.சி., சாந்தூர் போன்ற பெரிய நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்ய முன் வந்துள்ளன".
எவனோ ஒருவனின் கதை என்ன?
ஒரு முறை அப்துல் கலாம் பேசியிருந்தார். நம் நாட்ல ஏன் யாரும் சட்டத்தை மதிக்கிறதில்லை. ஏன் யாரும் டிராபிக் ரூல்ஸை பாலோ பண்றதில்லை. வரம்பு மீறி போறதை சாதாரணமாக எடுத்துக்கறாங்க.. இதுக்குக் காரணம் அறியாமை அல்ல அலட்சியம்தான். இதே நம் நாட்டுக்காரங்க சிங்கப்பூர், துபாய் மாதிரி நாடுகளுக்குப் போனா அப்படி நடந்துக்கறாங்களா? ரோட்ல குப்பை போட்டால் அபராதம்னு சட்டம் கடுமையா இருக்கிறதால அங்கே எல்லாம் பயந்து நடந்துக்கறாங்க. அதே ஆள் இங்கே வந்தால் அதே கட்டுப்பாட்டுடன் நடக்கிறதில்லை. நம் நாடு அவ்வளவு ஸ்ட்ரிக்டா இங்கே இருக்க மாட்டாங்கன்னு அலட்சியம். இந்த மனோபாவம் மாறணும்னு சொன்னார். இந்தப் படத்தின் ஹீரோ நியாயம் - நேர்மை, சட்டம், விதிகள் எல்லாத்தையும் சரியா பின்பற்றும் குடிமகன். இதுதான் நம் கடமைன்னு அப்பாவித்தனமா நம்புறவன் இந்த ஸ்ரீமகாதேவன். எல்லாரும் ரூல்ஸை மீறும்போது இவன் மடம் கஷ்டப்பட்டு செயல்படுத்துறான். நேர் வழியிலேயே வாழப் பழகிய இவனுக்கும் மத்தவங்களுக்கும் மோதல் வருது. ஸ்ரீதர் வெடிச்சு எழறான். இது எல்லா க்ளாசுக்கும் ஏற்ற மாதிரியான படம். ஸ்ரீதரின் கோபத்துக்குப் பிறகு மூணு நாள் நடக்கிற கதைதான் படம். இந்த எவனோ ஒருவனை நம்மில் ஒருவனா ஏத்துப்பாங்க. ஏன்னா அந்த எவனோ ஒருவன் உங்களுக்குள் உறங்கிட்டிருக்கிற ஒருவன்தான்.
நீளமான விளக்கம் தருகிறார்.
சமீபத்திய சந்தோஷம்...?
மாதவனுக்கு பழைய க்ரேஸ் இருக்கா.. பரபரப்பு போய்ட்டுதா? இது பல பேருக்கு வர்ற கேள்வி. ஏன் எனக்கும் கூட வந்திருக்கு. ஆனா இருக்கா இல்லையான்னு நான் சொல்ல மாட்டேன். நீங்களே சொல்லுங்க. எனக்கு நிறைய மெயில்ஸ் வரும். லெட்டர்ஸ் வரும். லவ் லெட்டர்ஸ் நிறைய வரும். அதுல இன்ட்ரஸ்டிங்கானதை படிச்சுக் காட ரசிக்கிறது சிரிக்கிறது என் ஒய்ப் சரிதா தான். ரீசன்டா ஒரு விடியில எனிதிங் ஃபார் மாதவன்னு புரோகிராம். அப்போ பொண்ணுங்க என் மேல வச்சிருக்கிற கிரேஸைப் பார்த்து எனக்கே என் மேல பொறாமை வருது. லவ் லெட்டர்ஸ் வர்றபோது வெட்கத்தை விட்டு பொண்ணுங்க பேசுறபோது மேடி உன்கிட்ட அப்படி என்னதான் இருக்குன்னு சரிதா கிண்டல் - கேலி பண்ணுவாங்க.
இன்னொரு விஷயம் சொல்லியே ஆகணும். என் ஒய்ஃப் எனக்கு தோழி. அதாவது சகி மட்டுமல்ல.. விமர்சகியும் கூட.. என் படங்களைப் பற்றி கடுமையா விமர்சனம் பண்றவங்க. அவங்களுக்கே பிடிச்ச படம் எவனோ ஒருவன் வெரிகுட்னாங்க. இதுதான் சரிதா கிட்டே வாங்கின பெரிய பாராட்டு. அதுக்கு முன்னாடியெல்லாம் உனக்கெல்லாம் நடிப்பு வருமான்னு வெறுப்பேறிய ஆள் இப்படிப் பாராட்ட தி பெஸ்ட்னு சொன்னது விசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்கின மாதிரி சந்தோஷமா இருந்திச்சு.
பூரிப்புடன் சொல்கிறார் மாதவன்.