Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் ஒரு சினிமா விசுவாசி - பிரகாஷ்ராஜ்

Advertiesment
நான் ஒரு சினிமா விசுவாசி - பிரகாஷ்ராஜ்

Webdunia

, ஞாயிறு, 16 செப்டம்பர் 2007 (16:04 IST)
webdunia photoWD
சினிமாவை தொழிலாகப் பார்ப்பவர்கள் நடுவே சினிமாவை வாழ்க்கையாகப் பார்க்கிறவர் பிரகாஷ்ராஜ். தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருக்கும் இவர் 'கால்ஷீட்' கொடுப்பதிலும் 'பாக்கெட்'டை நிரப்புவதிலும் குறியாக இருக்கலாம். ஆனால் அவர் அப்படிப்பட்டவரல்ல. ஒரு தயாரிப்பாளர் ஆகி வித்தியாசமான முயற்சிகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். இந்த முயற்சி நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய தயாரிப்பு நிறுவனங்களே செய்யாத ஒன்று.

இனி பிரகாஷ்ராஜுடன்...!

தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் ஆக உங்களைத் தூண்டியது எது?

சினிமாதான். சினிமா மீது எனக்குள்ள ஆசை, காதல், மோகம்... வெறி... இன்னும் என்னவெல்லாம் இருக்கிறதோ... அதெல்லாம். ஏன் இப்படிச் சொல்றேன்னா நான் அந்த அளவுக்கு சினிமாவை நேசிக்கிறேன். சாதாரண ஆளா இருந்த என்னை இந்த அளவுக்கு பிரபலமாக்கி பெயர், புகழ் எல்லாம் வாங்கி என்னை உயர்த்தி வச்சிருக்கிறது இந்த சினிமாதானே? எனக்கு இவ்வளவு பண்ணியிருக்கிற சினிமாவுக்கு நன்றி காட்ட வேண்டாமா? விசுவாசமா இருக்க வேண்டாமா? அதற்குத்தான் நான் தயாரிப்பாளராகி இருக்கிறேன். எல்லாத்துக்கும் பின்னணியில் இருக்கிறது இதுதான்... நான் ஒரு சினிமா விசுவாசி. அதுவும் நல்ல சினிமாவுக்கு... இதைத்தான் நான் சொல்ல விரும்புறேன்.

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தும் சினிமாவுக்கு நன்றி செலுத்தலாம். தயாரிப்பாளர் என்பது ரிஸ்க் இல்லையா?

முன்னாடியே சொன்ன மாதிரி... இதுக்குக் காரணம் சினிமாவை நான் வெறித்தனமா நேசிக்கிறதுதான். கேரக்டர் நிறைய நடிக்கலாம். நாம பேரு வாங்கிட்டுப் போய்டலாம். பாக்கெட்டையும் நிரப்பிக்கலாம். ஆனா ஒரு முழுப் படத்தையும் நாமே கொடுத்தால்... அதுவும் நல்ல படமா இருந்தால் அந்த சந்தோஷமே தனி. அந்த திருப்தி அலாதியானது இல்லையா? தயாரிப்பாளர்ங்கிறது சோதனைகளை பிரச்சினைகளை சந்திக்கிறதில்லையா? அப்போ வருத்தப்படவா செய்றோம். பிடிச்சவங்களுக்காக தாங்கிக்கறோம் இல்லையா? அதுபோலத்தான். நாலுபேர் பாராட்டுகிறமாதிரி ஒரு நல்ல படம் கொடுத்தா அது பேசப்படறபோது வலியெல்லாம் மறந்து போயிடும். எவ்வளவோ பேர் திறமைசாலிங்க வெளியே இருக்காங்க. அவங்களுக்கு சரியான இடம் கிடைக்காம தவிச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கு வாய்ப்பு கொடுத்து தூக்கிவிட பலபேருக்கு தைரியம் வர்றதில்லை. ஏன்னா வழக்கமான சிந்தனையோட இருக்கிற இளைஞர்களில்லை அவங்க... கொஞ்சம் மசாலா பாணி மாறி யோசிக்கிறவங்க. அவங்களுக்கு வாய்ப்பு தர்றதில எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?

ஒரு தயாரிப்பாளராக எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறீர்கள்?

எதையும் புரிஞ்சுக்கறது சுலபம். புரிய வைக்கிறது சிரமம். ஒரு படத்துல ஒரு காட்சி வருதுன்னு வச்சிக்குவோம். அதைப் பார்த்துட்டு சுலபமா கமெண்ட் அடிக்கலாம். அதை எடுக்க அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு யாருக்கும் புரியாது. அதைப் பற்றி தெரிஞ்சுக்க விரும்புறதும் இல்லை. நான் ஏழெட்டு ஆண்டுகளில் ஏழு படங்கள் தயாரிச்சிருக்கேன். இதில் என்ன லாபம்...? போடுகிற காசு செலவழிக்கிற நேரம் அர்த்தமுள்ளதா இருக்கணும் அதுதான் என் ஆசை. பெரிதாக லாபம் பார்த்து பணம் சம்பாதிக்கிறது மட்டும் போதும்னு நான் நினைக்கலை. ஆனால் ரசிக்கிற மாதிரி - நான் ரசிக்கிறமாதிரி சினிமாவை மக்களுக்குத் தர்ற சுகம் தனியானது.

இதுவரை உருவாக்கிய படங்களின் மூலம் புரிந்து கொண்ட அனுபவம்?

டூயட் மூவிஸ் படங்களுக்கு ஒரு அடையாளம், அங்கீகாரம் கிடைச்சிருக்கு. எங்க கம்பெனி தயாரிக்கும் படங்கள் மோசமா இருக்காது. மலிவா இருக்காது. ரசனையை மதிக்கிற மாதிரி ரசிகர்களை கெளரப்படுத்துற மாதிரி இருக்கும். ரசிகர்கள் உயர்வானவர்கள்னு மதிக்கிறபடி இருக்கும். இப்படி ஒரு அபிப்ராயத்தை சம்பாதிச்சிருக்கோம். இது பெரிய விருதுகளைவிட பெருமையான விஷயம். இதுவரை செய்ததில் பெரும்பாலான படங்களுக்கு நல்ல வரவேற்பும் மரியாதையும் கிடைச்சிருக்கு. இதுக்கான விலை உழைப்பு, போராட்டங்கள், கஷ்டங்கள், வலிகள் எல்லாம் ஏராளம். அது என்னோடு போகட்டும். பலன் மட்டும் ரசிகர்களைச் சேரட்டும். தமிழ் சினிமாவை உலகத்தரத்துக்குக் கொண்டு போகும் முயற்சியில் முன்னாடி நிற்கும் தயாரிப்பாளரா நான் இருக்க ஆசைப்படறேன். இதைக் கர்வமா சொல்லலை. இது என் ஆசை. நான் இந்த சினிமாவில் இன்றும் கற்று வருபவன். ஆனாலும் நிறைய அனுபவம் இருக்கு. என்னைப் போல பலரும் இந்தத் தொழிலை தொழிலா நினைக்காமல் வாழ்க்கையா நினைக்கிறவங்க இருக்கிறாங்க. அந்த புரிதலை தேடலை வாழ்க்கையை பதிவு செய்யும் இடமா சினிமாவைப் பயன்படுத்தும் சுதந்திரம் இருக்கே... அதுதான் எனக்கு பிடிச்ச விஷயம். நானே தயாரிப்பாளர் ஆனால்தான் இந்த சுதந்திரம் - சந்தோஷம் சாத்தியப்படும். இது ஒரு காஸ்ட்லியான ஆசை. இதுவரை பண்ணிய படங்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே இந்தத் தொழிலில்லை என்பதை நிரூபிச்சிருக்கு. இதை அகங்காரமா சொல்லலை. தம்பட்டம் அடிச்சி மகிழ்ச்சியாகவும் சொல்லலை. மன திருப்தியோட சொல்ல முடியும். பல படங்கள் வசூல் ரீதியா சந்தோஷப்படுத்தலை. 'மொழி' சந்தோஷம் திருப்தி ரெண்டையும் வாங்கிக் கொடுத்திருக்கு. அந்த துணிச்சலில் இப்போ மூணு படங்கள் பண்றோம்.

இப்போது தயாரிக்கும் மூன்று படங்கள் பற்றி...?

உலக அளவில் வெற்றி பெற்ற படங்களை எடுத்துப் பார்த்தால்... ஒரிஜினாலிடியுடன்... வாழ்க்கையைப் பதிவு செய்த படங்கள்தான் ஜெயிச்சிருக்கு. இடையிடையே சில வணிக ரீதியான படங்கள் ஓடியிருக்கலாம். ஆனால் பேசப்பட்டவை என்றால் அசல் தன்மை உள்ள படங்கள்தான். அப்படி ஒரிஜினாலிடியுடன் இருக்கிறதால்தான் இந்த மூணு படங்களையும் தேர்வு பண்ணி எடுக்கிறோம்.

'வெள்ளித்திரை' இதுவரை ராதாமோகன் படங்களுக்கு வசனம் எழுதிய விஜி இயக்குகிறார். திரையுலகப் பின்னணியில் உள்ள கதை. 70 சதவீதம் முடிச்சாச்சு. அடுத்ததா இந்தோனேஷியாவுக்கு படப்பிடிப்புக்குப் போகிறோம். பிருதிவிராஜ், கோபிகா, நான் நடிக்கும் படம்.

அடுத்து ராதாமோகன் இயக்கும் 'அபியும் நானும்' ஒரு அழகான கதை. வித்யாசாகர் இசை. விரைவில் தொடங்க இருக்கோம்.

'மயிலு'ன்னு இன்னொரு படம். ஸ்டில் போட்டோகிராபர் ஜீவன் சொன்ன கதை பிடிச்சு... இயக்குனராக்கியிருகோம். மதுரை மண் மணம் கமழும் கதை. இளையராஜா இசை அமைக்கிறார். இன்னும் ஆறு மாதத்தில் அழகான மூணு படங்கள் தர இருக்கோம்.

ஏழெட்டு ஆண்டுகளா ஏழு படங்கள்தான் நான் தன்னந்தனி ஆளா நின்னதால முடிஞ்சிருக்கு. இப்போ எங்க கூட 'மோசர்பேர்' நிறுவனம் கைகோர்த்து இருக்காங்க. அதனாலதான் ஒரே நேரத்துல மூணு படங்கள் கொடுக்கிற தைரியம் வந்திருக்கு. எனக்கும் 'மோசர்பேர்' தனஞ்செயனுக்கும் நல்ல புரிதல் இருக்கு. அதனால நல்ல படங்கள் தர்ற விருப்பம் நிறைவேறியிருக்கு. இதுவரை சிடி... டிஸ்க் தயாரிப்பில் பெரிய அள்வில் வெற்றி பெற்ற அவங்க இப்போ சினிமாவுக்கு வந்திருக்காங்க. இந்தியில் படம் பண்றாங்க. தமிழில் டூயட் மூவிஸ் கூட சேர்ந்திருக்காங்க. சினிமாவை வெறும் வியாபாரமா பார்க்காம தரமும் திருப்தியும் உள்ள தொழிலா நினைக்கிறாங்க. அதுதான் எங்க ரெண்டு பேரையும் இணைச்சிருக்கு. சினிமாத் தொழில் கார்ப்பரேட் மயமாகி வர்றது நல்ல மாற்றம். நல்ல பலன்கள் இதனால் வரப்போகுது.

Share this Story:

Follow Webdunia tamil