புதிதாகக் கட்சி தொடங்கியிருக்கும் சரத்குமாரிடம் கேட்க நிறைய கேள்விகள் உள்ளன. எதிர்கொள்ள அவருக்கு நேரமில்லை. இருப்பினும் சிலவற்றுக்கு இங்கே பதிலளிக்கிறார். ஏற்கனவே இங்கே நிறைய கட்சிகள் இருக்கும்போது நீங்களும் ஓர் அரசியல் கட்சி தொடங்கியுள்ளது ஏன்?ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. போக்கும் இருக்கிறது. ஆனால் கட்சிகள் தங்களையே பார்க்கின்றன. மக்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எங்கள் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மக்களைப் பற்றிக் கவலைப்படுகிற கட்சி. மற்றவர்கள் செய்யாத பலவற்றை நாங்கள் செய்ய இருக்கிறோம். இது கட்சி ஆரம்பிக்கும் எல்லாரும் சொல்வதுதானே...?
இப்படி வழக்கமான என்கிற வட்டத்துக்குள் எங்களை அடக்கிவிடவேண்டாம். எங்கள் கட்சி ஒரு வித்தியாசமான கட்சியாக இருக்க விரும்புகிறது. பொதுவாக ஒரு கட்சி தொடங்கும்போது யாருக்காவது பாதிப்பு ஏற்படும் என்று அதை யாரும் வரவேற்பது கிடையாது. எங்கள் கட்சி தொடக்க விழாவுக்கு முதல்வர் கலைஞர் வாழ்த்து அனுப்பியிருக்கிறார். அது மட்டுமல்ல தொல். திருமாவளவன், திருநாவுக்கரசர் போன்ற தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இது ஒரு நல்ல அறிகுறி. இது மாதிரி வேறு யாருக்காவது அனுபவம் இருக்கிறதா? அரசியலில் ஆரோக்கியமான சூழ்நிலை இங்கு இல்லை. ஒரு பக்கம் விரும்பினாலும் மறுபக்கத்தில் விரும்புவது இல்லை. எதிர்க்கட்சி என்றால் எதிரிக் கட்சியாக இருக்கிறார்கள். நாங்கள் அப்படியெல்லாம் இல்லை. எல்லாருடனும் நல்ல எண்ணத்துடன் நல்லிணக்கத்துடன் செயல்படுவோம். இது எது மாதிரியான கட்சியென்றால் ஒரு முன்மாதிரியான புதுமாதிரியான கட்சியாக இருக்கும் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம்.
கொள்கைகளில் என்ன வேறுபாடு...?
கட்சியின் கொள்கை என்கிறபோது நெருங்கிக் கேட்டால் எல்லாம் ஒரே மாதிரி இருக்கும். ஒரே கொள்கைக்கு ஏன் இத்தனை கட்சிகள் என்று மக்கள் கேட்கமாட்டார்களா? எங்கள் கட்சியின் கொள்கை என்றால் அதில் வித்தியாசமான அணுகுமுறை இருக்கும். உதாரணத்துக்கு இடஒதுக்கீடு என்கிறபோது எல்லாக் கட்சிகளும் அது உணர்ச்சிகரமான விஷயம் என்று வாயே திறப்பதில்லை. நாங்கள் இடஒதுக்கீடு விஷயத்தில் ஜாதி தவிர ஏழ்மை மக்களையும் பாருங்கள் என்கிறோம். இந்தத் துணிவு பல கட்சிகளிடம் இல்லை. இப்படி பல வகையில் நாங்கள் வேறுபட்டு நிற்கிறோம்.
இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கட்சி என்கிறார்களே...?
இது ஒரு நாடார் கட்சியா என்கிறார்கள். அப்படிச் சொல்ல முடியாது. இதில் சாதி வேறுபாடு கிடையாது. எல்லா சமூகத்து மக்களும் உறுப்பினராக இருக்கிறார்கள். பொறுப்பிலும் இருக்கிறார்கள். காமராஜர் என்கிற மாபெரும் தலைவரைத் தந்தது இந்த சமூகம். காமராஜர் வந்த நாடார் சமூகத்தில் நான் பிறந்ததில் பெருமைப்படுகிறேன். இன்றும் எல்லாருடைய கனவாக இருப்பது காமராஜர் ஆட்சி என்பதுதான். அது அமைய எங்கள் கட்சி பாடுபடும். அதுவும் உண்மையாகப் பாடுபடும். அந்த மாபெரும் தலைவரின் புகழ் பரப்பி அவர் கொள்கையின் வழிநின்று மக்கள் பணியாற்றுவதில் பெருமைப்படுவோம்.
அரசியல் கட்சித் தலைவர் - நடிகர் சங்கத் தலைவர் எப்படி இரண்டிலும் செயல்பட இருக்கிறீர்கள்?
நடிகர்கள் அரசியல் கட்சியில் இருக்கலாம். ஆனால் நடிகர் சங்கத்தில் அரசியல் இருக்கக்கூடாது என்பதில் நாங்கள் ஒற்றுமையாக இருந்து காட்டிக் சாதித்து இருக்கிறோம். அதை என்றும் காப்பாற்றிக் காட்டுவோம். ஏற்கனவே தலைவராக இருந்த விஜயகாந்தும் கட்சி தொடங்கி இருக்கிறார். நீங்களும் அவர் போல - அவருக்குப் போட்டியா என்றெல்லாம் கேட்கிறார்கள். அவர்களுக்கு என் பதில் இதுதான். மக்கள் பணியாற்றுவதில் எங்களுக்குள் போட்டி இருக்கும். பொறாமை இருக்காது. மக்கள் பணியாற்றுவதில் போட்டி இருப்பது தவறில்லை.
திரைப்பட நடிகராக இனி எப்படி நீங்கள் பயணம் செய்யப் போகிறீர்கள்?
எல்லாக் கட்சியிலும் என் ரசிகர்கள் இருக்கிறார்கள். என் ரசிகர்கள் என் மேல் அபிமானம் உள்ளவர்கள். என் அரசியல் செயல்பாடுகள் திரைப்பட நடிகராக என் வாழ்க்கையை பாதிப்பதில்லை. அப்படித்தான் என் ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்போது 'நம்நாடு', 'வைத்தீஸ்வரன்', மலையாளப் படம் கே.எஸ்.ரவிகுமார் படம் இப்படி பயணம் தொடர்கிறது. நடிப்பு என் தொழில் அதை நிறுத்தமாட்டேன்.