ஒன்றின் மீது ஆசை வந்துவிட்டாலே அதை அடையும் திறமை வந்து விட்டது என்று அர்த்தம். இந்த வெளிநாட்டுப் பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ பிடிச்சிருக்கு இயக்குநர் கனகுக்குப் பொருந்தும்.தூத்துக்குடியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது மேடை நாடகங்கள் அரங்கேற்றிய அனுபவம்... சினிமா ஆசை துளிர்க்க வைத்தது. அந்த ஆசையின் பயணம் வெங்கடேஷ், லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநர் அனுபவமாக மாறி திறமையை சேகரித்துக் கொடுத்திருக்கிறது.உதவி இயக்குநராக இருந்த கனகு, கூல் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் பிடிச்சிருக்கு படத்தின் இயக்குநர். அவரிடம் அவரது சொந்த கதையும், படக் கதைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.இனி...உங்கள் சொந்த வாழ்க்கைப் பற்றி?
எனக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி. அப்பா இல்லை. அம்மா, ஒரே அண்ணன். இதுதான் குடும்பம். இயக்குநர் வெங்கடேஷ் எனது கல்லூரி தோழர். அப்போது கிரேஸி ஆர்ட் குருப்ஸ் என்கிற பெயரில் நாடகக் குழு ஆரம்பித்து நடத்தினோம். வெங்கடேஷ்தான் இயக்குநர். பிறகு நான் எம்.காம் படித்தேன். வெங்கடேஷ் சென்னை வந்துவிட்டார். அவர் இயக்குநரானதும் என்னை அழைத்துக் கொண்டார். மாலை நேரக் கல்லூரி விரிவுரையாளர் வேலையை விட்டுவிட்டு சென்னை வந்தேன்.
உதவி இயக்குநராக பணியாற்றியது பற்றி?
நான் வெங்கடேசுடன் மகாபிரபு, செல்வா, நிலாவே வா, பூப்பறிக்க வருகிறோம் படங்களில் இணை இயக்குநராக வேலை பார்த்தேன். லிங்குசாமியிடம் ஆனந்தம் முதல் சமீபத்தில் வந்த பீமா படம் வரை வேலை. எனக்கு எல்லா வகையிலும் உதவியாக ஆதரவாக நின்று தோள் கொடுத்தவர் எனது நண்பர் வெங்கடேஷ். அதை என்னால் மறக்க முடியாது.
இரண்டு இயக்குநர்களிடம் பணியாற்றி நீங்கள் கற்ற பாடம்?
வெங்கடேஷிடம் கற்றது உழைப்பு. சுறுசுறுப்பு. அசர மாட்டார். ஒரு படம் எடுத்துவிட்டால் ஓயமாட்டார். உடனே அடுத்த படத்தில் இறங்கிவிடுவார். தேனி போல சுறுசுறுப்பு. இந்த உழைப்பு அவரிடம் நான் கற்றது. லிங்குசாமியிடம் கற்றது அவரது நிதானம். பொறுமை. பதற்றமில்லாத அணுகுமுறை. யூனிட்டே பரபரப்பாக இருந்தாலும் அவர் பதறாமல் நிதானமாக இருப்பார். எடுக்க வேண்டியதை சரியாக நிதானமாக எடுப்பார். இந்த நிதானம் தான் அவரிடம் கற்றது.
பிடிச்சிருக்கு பட வாய்ப்பு கிடைத்தது எப்படி?சொன்னால் நம்ப மாட்டார்கள். இது என்னைத் தேடி வந்த வாய்ப்பு. வாசனைத் திரவியங்களைவிட வியர்வைக்கு விலை அதிகம். இதை உணர்ந்தவன் நான். ஆம்... நான் கடுமையாக மாடு மாதிரி உழைப்பேன். இதை தெரிந்து கொண்டவர்தான் என் படத் தயாரிப்பாளர் சி. செண்பக குமார். கூப்பிட்டு அவர் கொடுத்த வாய்ப்பு இது. அவர் ஒரு என்.ஆர்.ஐ.சினிமாவில் இறங்குவது என்று முடிவு எடுத்தவுடன் என்னிடம் ஒரு படம் எடுக்க எவ்வளவு ஆகும் என்றார். நான் கூறியதும் முழுத் தொகையும் எடுத்து வைத்தார். படமெடுக்க இப்படி மொத்தமாகச் செலவாகாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் செலவாகும் என்றேன். இப்படி சினிமா பற்றி எதுவும் தெரியாமல் இருந்தும் என்னிடம் படத்தைக் கொடுத்து எந்த குறுக்கீடும் செய்யாமல் முழுக் சுதந்திரம் கொடுத்துள்ளார். அவரது இந்த அபார நம்பிக்கைதான் என் பயம்-பலம் எல்லாமே. அவர் கிடைத்தது ஒரு வரம். தவமில்லாமல் வரம் பெற்றவன் நான்.படத்தின் கதை பற்றி....?இது முழுக்க முழுக்க சைவப் படம்தான். குடும்பத்தினருடன் பார்க்கக் கூடிய மென்மையான காதல் கதை. காதலை சொல்லி நிறைய படங்கள் வந்திருக்கின்றன. மிகைப்படுத்தப்பட்ட செயற்கையான காதலையே பெரும்பாலும் படங்களில் காட்டுகிறார்கள். காதலின் இயல்பை யதார்த்தத்தை சொல்லும்படியாக பிடிச்சிருக்கு இருக்கும். காதல் தோன்றுவது அதை உரியவரிடம் கொண்டு சேர்ப்பது எல்லாமே இயல்பாக இருக்க வேண்டும். ஒரு பூ மலர்வது போல - விதை முளைப்பது போல - காற்று தவழ்வதைப் போல இயல்பான மென்மையான உணர மட்டுமே முடிகிற விஷயம் காதல். இதையே என் படத்தில் காட்டியிருக்கிறேன்.படத்தின் ஹைலைட்ஸ் என்ன?பிரம்மாண்டம் என்கிற கண்களை மிரட்டும் விஷயம் இருக்காது. பிரதானமாக இருக்க வேண்டிய மனதைத் தொடும் கதை இருக்கும். எளிமையான காதலை வலிமையான அழுத்தமான காட்சிகள் மூலம் சொல்லியிருக்கிறேன். ஆபாசம், இரட்டை அர்த்த வசனம், வெட்டு, குத்து, ரத்தம், அடிதடி எதுவும் இல்லாத படம். நெளியாமல், கூசாமல், முகம் சுழிக்காமல் குடும்பத்துடன் பார்க்கும்படியான ஒரு படமாக பிடிச்சிருக்கு இருக்கும். இதற்கு நான் கியாரண்டி.படத்தின் ஹைலைட்ஸ் என்றால் தயாரிப்பாளர் முதல் எல்லாருமே புதியவர்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள், எடிட்டர் சசிகுமார், ஆர்ட் டைரக்டர் விதேஷ், இசையமைப்பாளர் மனு ரமேஷ் எல்லாருமே புதியவர்கள். இதுவே ஹைலைட்ஸ்தான்.நடிகை-நடிகர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்தீர்கள்?
முருகா நாயகன் அசோக்தான் கதாநாயகன். இப்படத்தைப் பாருங்கள் அவரா இவர் என்று நினைக்குமளவுக்கு புது அவதாரம் எடுத்திருக்கிறார். நாயகி விசாகா தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். இவர் ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர்கள் தவிர கஞ்சா கருப்பு, சரண்யா, சம்பத் என 5 பேரை வைத்தே கதை நகரும். அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு பற்றி இயக்குநர் என்ற முறையில்?
படம் என்று முடிவான பிறகு உடனே தொடங்க வேண்டும் என்றார் தயாரிப்பாளர். நான் ஐந்து மாதங்கள் அவகாசம் கேட்டேன். எல்லாம் முறைப்படுத்திக் கொண்ட பின்தான் ஆரம்பித்தோம். தூத்துக்குடியில்தான் கதை இயங்கும். சென்னை, மதுரை, கும்பகோணம் என்ற மற்ற ஊர்களுக்கும் கதை நகரும். எனவே இந்த ஊர்களில் உள்ள பல பகுதிகளையும் ரசிகர் மனங்களைச் சென்றடையாத பல்வேறு உணர்வுகளையும் படம் பிடித்திருக்கிறோம். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெள்ளை மனத்தோடு படம் பார்க்க வாருங்கள். படம் பளிச்செனற மனதில் ஒட்டிக் கொள்ளும் என்கிற இயக்குநர் கனகுவின் ஆசைகள் நிறைவேறட்டும்.
கனவு மெய்ப்படட்டும்.