மாளவிகாவிடம் எந்தக் கேள்வி கேட்டாலும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு பதில் சொல்வார். ஆனாலும் திருமணத்திற்குப் பிறகு நடிப்பது பற்றி யாராவது கேட்டால் அந்த அழகிய முகம் மேலும் சிவந்துவிடும். ஒரு பிடி பிடித்துவிடுவார். அப்படி என்னதான் சொல்வார்?
"இங்கே எல்லாமே தப்பா புரிஞ்சுக்கறாங்க. கல்யாணம்னு சொல்லிட்டால் அத்தோட ஒரு பெண்ணோட வாழ்க்கை முடிஞ்சிட்டதா ஒரு அபிப்ராயம் இருக்கு. பல்வேறு தொழில்கள்ல மேரேஜுக்குப் பிறகு சாதிச்சவங்க எவ்வளவோ பேர் இருக்காங்க. எந்த வேலையா இருந்தாலும் கல்யாணத்துக்குப் பிறகு அப்படியே தொடர முடியுது. ஆனால் சினிமாவுல மட்டும் ஏன் அப்படி நினைக்கிறாங்கன்னு தெரியலை. கல்யாணமான நடிகை நடிச்சால் நாங்க பார்க்கமாட்டோம்னு ரசிகர்கள் சொல்றாங்களா? இல்லை திறமைதான் குறைஞ்சி போய்டுமா?"
சரி இதையெல்லாம் சினிமாக்காரர்களிடம் மாளவிகா சொல்வாரா?
"இந்த மாதிரி நினைக்கிறது இங்கேதான். இந்தியில் அப்படி இல்லை. கல்யாணத்துக்குப் பிறகும் கிரேஸோட இருக்கிற ஆர்ட்டிஸ்ட் உண்டு. இந்தியில் பிரபுதேவா 'போக்கிரி'யை டைரக்ட் பண்றார் இல்லையா? ரொம்ப சந்தோஷம். ஒரு பங்ஷன்ல அவரை மீட் பண்ணினேன். அப்போ அவர்கிட்ட கேட்டேன், என்னை நடிக்க கூப்பிடமாட்டீங்களான்னு. அப்போ அவர் சொன்னார், உங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சு... அதனால கூப்பிடலைன்னார். கல்யாணம் ஆனால் நடிக்கக்கூடாதா? நடிக்க முடியாதா? கல்யாணத்தை மறைக்கணுமா? அதை ஏன் மறைக்கணும். நான் என்ன கொலை பண்ணினேனா... கல்யாணத்துக்காக நடிக்கிறதை ஏன் விடணும். பெரிய பொறுப்பான வேலைல இருக்கிறவங்க கல்யாணம் ஆனா விட்டுடறாங்களா? கல்யாணம் ஆனா கிரேஸ் போய்டுமா? அப்படி நினைக்கிறது தப்பு. மாதுரி தீட்சித் மாதிரி இந்தியில் எவ்வளவுபேர் நடிக்கிறாங்களேன்னு கேட்டேன். நான் இந்த ஆங்கிள்ல யோசிக்கலைன்னு சொன்னார். இதுமாதிரி மைண்ட் செட்டாகியிருக்கு."
எப்போதோ நாயகியாக அறிமுகம் ஆன மாளவிகாவுக்கு காலம் கடந்துதான் புகழ் வந்தது என்று கூறலாமா?
"இது உண்மைதான். இதை ஏத்துக்க்றதுல எனக்கு தயக்கமில்லை. முதல் படமே பெரிய ஹீரோ படம். அஜீத்துடன் 'உன்னைத் தேடி'யில் அறிமுகமானேன். அந்த ஹீரோ இன்னைக்கு பெரிய அளவில் வளர்ந்துட்டார். அவர் கூட 'ஆனந்தப் பூங்காற்றே' படத்துல நடிச்சேன். 'கறுப்புதான் எனக்குப் புடிச்ச கலரு' பாட்டுதான் என்னை பிரபலமாக்கியது. பாட்டு பாப்புலர் ஆனதே நிறைய சான்ஸ் வரும்னு எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கலை. ஆனா எனக்கு ஒரு அழுத்தமான கேரக்டர் ஒண்ணு பல வருஷங்களுக்குப் பிறகு 'திருட்டுப் பயலே' படத்துல கிடைச்சுது. இப்படி ஒரு கேரக்டர் வர இவ்வளவு வருஷம் வெயிட் பண்ணணுமா? இதுல எனக்கு வருத்தம்தான். ஒரு நல்ல ரோல் கிடைக்க அவ்வளவு பொறுமை காட்ட வேண்டியிருக்கு. 'திருட்டுப்பயலே' ஹிட்டாச்சு. அதுக்கப்புறம் அதே ஜீவனுடன் நடிச்ச 'நான் அவனில்லை'யும் வெற்றிப்படம். இப்போ 'மச்சக்காரன்' படத்துல நடிக்கிறேன். எல்லாமே தாமதம்தான்."
ஒரு பாடலுக்கு மாளவிகா ஆடுவது தொடருமா?
"இதுல எனக்கு முழுசா உடன்பாடில்லை. இருந்தாலும் 'கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு', 'வாளமீனு' பாடல்கள் பெரிய ஹிட்டாச்சு. என்னை எல்லாரும் ரசிச்சாங்க. அதனால சில படங்களில் ஆட சம்மதிச்சேன். ஆனால் அது வெறும் செண்டிமெண்டுக்குன்னு தெரிஞ்சதும் எனக்கு மனசுக்கு கஷ்டமாயிடுச்சு. இங்கே திறமையை விட சக்சஸ்தான் முக்கியம். எந்த செண்டிமெண்ட்லயாவது படம் ஓடணும்னு நினைக்கிறாங்க. இது எனக்கு தாமதமாத்தான் புரிஞ்சுது."
மாளவிகா இரட்டை வேடத்தில் நடிக்கிறாரே... இது என்ன கலாட்டா?
"ஆமாம். இது கேலிக்குரிய விஷயமல்ல. 'கட்டுவிரியன்' படத்துல அம்மா-மகள்னு ரெண்டு வேடங்கள். அம்மான்னா பெரிய கிழவின்னு நினைச்சிடாதீங்க. ஒரு நாற்பது வயசு கேரக்டர். இது புது எக்ஸ்பீரியன்ஸ். கலைப்புலி சேகரன் டைரக்ட் பண்ற படம் இது. அவர் கதை சொல்றப்போ அந்தக் கேரக்டர் பற்றி சொன்னார். வேற ஆர்ட்டிஸ்ட் நடிக்கப் போறதா சொன்னார். அந்தக் கதையும் சரி கேரக்டரும் சரி ரொம்ப வித்தியாசமா இருந்ததால அது ரெண்டையும் நானே பண்றேன்னு சொன்னேன். அவரும் சம்மதிச்சிட்டார். ப்ளாஷ்பேக்ல அம்மா கேரக்டருக்கு ஒரு கெட்அப்... ஆக படத்துல எனக்கு மூணு கெட்அப். இது வித்தியாசமான அனுபவம்.
கதை, படங்கள் தேர்வு செய்வதில் மாளவிகாவின் கொள்கை எது?
"நான் கண்டிஷன் போடும் நடிகையல்ல. சினிமா ஒரு கமர்ஷியல் மீடியா. அதுல சக்சஸ்தான் முக்கியம். அதுக்கேற்றபடி படம் எடுக்கிறாங்க. நல்ல கேரக்டர்களை தயக்கமில்லாமல் ஏத்துப்பேன். அப்படிப் பண்ணமாட்டேன். இப்படிப் பண்ணமாட்டேன்னு கண்டிஷன் போடமாட்டேன். இப்போ 'மச்சக்காரன்', 'கட்டுவிரியன்'. தவிர 'சிங்கக்குட்டி' படத்துல விவேக்குடன் பாட்டு, ஆட்டம், காமெடி எல்லாம் பண்றேன். 'ஆறுபடை' படத்துல ஒரு பாட்டுக்கு ஆடறேன். நம்பிராஜனின் 'அதே நிலா'ங்கிற ஒரு படம். இப்படி தமிழ்ல போய்க்கிட்டிருக்கு. தெலுங்கு, மலையாளத்துலயும் ரெண்டு படம் இருக்கு."
திருமணம் ஆன பிறகு மாளவிகா உணர்வது என்ன?
"நான் நல்ல நடிகைன்னு பெயர் வாங்கக் கஷ்டப்படற மாதிரி நல்ல மனைவிங்கிற ஸ்தானத்தை அடையவும் விரும்பறேன். இதுவரை இருந்தது சினிமா ஷூட்டிங் வீடுன்னு பரபரப்பான உலகம். கணவர் வீடுன்னு இன்னொரு உலகம் எனக்குக் கிடைச்சிருக்கு. இதுவும் கூட ஒரு த்ரில்தான். எனக்கு அவ்வளவா சமைக்கத் தெரியாது. அன்புகாட்ட மட்டுமே தெரியும். அதுபோதாதா லைஃப் அமைதியா போக? என் கணவரும் நானும் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சு வச்சிருக்கோம். வாழ்க்கைக்கு முக்கியமான அது எங்ககிட்டே இருக்கு. மத்தது பற்றி ஏன் கவலைப்படணும்? ரீசன்டா பத்துநாள் சிங்கப்பூர் போய்ட்டு வந்தேன். அங்கே கலை நிகழ்ச்சியில் 'வாளமீன்', 'டோலு டோலு' பாடல்களுக்கு ஆடினேன். அப்பப்பா என்ன வரவேற்பு. ஆரவாரம். அந்த உற்சாகமான ஆரவாரம் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு. சந்தோஷமான அனுபவம். ரசிகர்கள் ஆதரவும் இருப்பது பெருமையா இருக்கு.