வியாபார சினிமாவில் கொஞ்சம் கலையையும் கலந்து தர கரிசனம் காட்டும் இயக்குனர் லிங்குசாமி. நான்கே படங்களில் நாடறிந்த இயக்குனராகிவிட்டவர். 'ஆனந்தம்', 'ரன்', 'ஜி', 'சண்டக்கோழி' யாவுமே ஒன்றுக்கொன்று மாறுபட்ட வடிவங்கள். இப்போது ஐந்தாவதாக 'பீமா'. முற்றிலும் வலுவான கூட்டணி அமைத்து களத்தில் இறங்கியுள்ளார். பீமா உருவாவதில் தாமதம் ஏற்பட்டது ஏன்?
அவசரப்பட்டு எடுக்காமல் ஆற அமர ஒரு படம் எடுக்கணும். நடிகர்கள் முதல் டெக்னீஷியன்ஸ் வரை தேர்ந்தெடுத்து பார்த்துப் பார்த்து ஒரு படம் பண்ணணும்னு நினைச்சேன். அதனால் கதை தயார் பண்ணவே நான் கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டேன். அதனால விக்ரம் கதைக்காகக் காத்திருந்தார். பிரகாஷ்ராஜுக்கு நல்ல கேரக்டர். ஆனால் அவர் நாங்க ஷுட்டிங் தொடங்கியபோது பிஸியா இருந்தார். இப்படி ஒவ்வொருத்தருக்கும் டைம் எடுத்துக்கிட்டோம். ஏ.எம். ரத்னம் சாரும் படம் பெரிய அளவில் வரணும்னு நினைச்சார். இந்தப் படத்துல பல பெஸ்ட் கலைஞர்களை பயன்படுத்தியிருக்கோம். அதனால பொறுத்திருந்து பொருத்தமானவங்களை தேர்வு செஞ்சோம். அதற்கு காலம் கொஞ்சம் தேவைப்பட்டது. ஆனால் சரியான கால அளவில் ஷுட்டிங் முடிச்சு படம் தயார் செஞ்சிருக்கோம்.
கால தாமதத்திற்கு பணப் பிரச்சினையும் ஒரு காரணம் என்று பேசப்படுதே?
பேசப்பட்டது. பேசினாங்க. கேள்விப்பட்டேன். ஏன் என்னிடமே சில பேர் கேட்டாங்க. அதுக்கெல்லாம் விளக்கம் சொல்லிக்க விரும்பலை. இந்தப் படத்துக்காக ஒரு பாடல் காட்சியை மறுபடியும் எடுத்தோம். சாதாரணமா அல்ல... பன்னிரண்டு லட்ச ரூபாய் செலவு செஞ்சி மறுபடியும் எடுத்தோம். இதுக்கெல்லாம் ஒரு தைரியம் வேணும். மன தைரியம் மட்டுமல்ல பண தைரியமும் வேணும். ரெண்டும் இருக்கிற தயாரிப்பாளர்தான் ஏ.எம். ரத்னம் என்று என்னால் உறுதியா சொல்ல முடியும். `பீமா' பற்றி நிறைய கமெண்ட்ஸ்கள் வந்தது. படம் அவ்வளவுதான். டிராப் ஆச்சு. படம் ரிலீஸ் ஆகாது. இப்படியெல்லாம் வந்திச்சு. இதையெல்லாம் பற்றி எதுவுமே கண்டுக்காமல் படத்தை பெரிய அளவில் உருவாக்கி முடிச்சிருக்கோம். தவறான அபிப்ராயங்கள் - பிரச்சாரங்கள் எல்லாத்துக்குமே இந்தப் படம்தான் பதிலா இருக்கும்.
இந்தப் படத்துக்கு எல்லாவற்றுக்குமே பெரிய ஆட்களாகத் தேடிப் போனது ஏன்?
படம் பெரிய அளவில் வரணும்னு தயாரிப்பாளர் விரும்பினார். அதுக்கு என்னென்ன வகையில் யார் யாரை செலக்ட் செய்யணுமோ அதை சரியா செய்துவிடலாம்னு நினைச்சோம். அதுக்கு சரியான - ரைட் பெர்சன்ஸ்... யார் யார்ன்னு பார்த்து செலக்ட் பண்ணி சேர்த்துக்கிட்டோம். நடிக்கிறவங்கள்ல இருந்து டெக்னீஷியன்ஸ் வரை இப்படியே செஞ்சோம். விக்ரம்... ஒரு வெறியுள்ள நடிகர். அதே போல பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி, ரகுவரன் இப்படி எல்லாருமே நடிப்பில் ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிவிடும்படி செஞ்சிருக்காங்க. கேமராமேன் ஆர்.டி. ராஜசேகர் இந்திப்பட வாய்ப்புகளையெல்லாம் மறுத்திட்டு `பீமா'வுக்கு வந்தவர். எடிட்டிங் ஆண்டனி, ஆர்ட் டைரக்டர் ராஜீவன், ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், வசனம் எஸ். ராமகிருஷ்ணன் என எல்லாருக்குமே இது ஒரு சவாலான சாதனையான படமா இருக்கும். பாடல்கள் பெரிய பலம். ஹாரிஸ் ஜெயராஜ் கலக்கியிருக்கிறார். ஹாரிஸ் - விக்ரம் காம்பினேஷன் 'அந்நியன்' வெற்றியை 'பீமா' மிஞ்சிவிடும். நா. முத்துக்குமார், பா. விஜய், தாமரை, யுகபாரதி எல்லாருமே வரிகளில் விளையாடியிருக்காங்க. இப்படி எல்லா வகையிலும் அவங்கவங்களுக்கு தனிப்பட்ட முறையில் திருப்திவர்ற மாதிரியும் கூட்டணியாக வெற்றி தர்ற வகையிலும் இப்படத்தின் வாய்ப்பு அமைஞ்சிருக்குன்னு சொல்லலாம்.
விக்ரமிடம் என்ன புதுமை காட்டியிருக்கிறீர்கள்?
அவர் இந்தக் கதையில் ஆரம்பத்திலிருந்தே ஆர்வமா இருந்தார். ரொம்ப ஈடுபாடு காட்டினார். கதை அவருக்குள் இறங்கிய பின்னாடி ஆளே மாறிட்டார். அதை விட்டு அவர் வெளியே வர முடியலை. எனக்கே ஒரு டானிக்கா உற்சாகமா - உந்துசக்தியா அவர் இருந்திருக்கிறார். நினைக்கிற நேரத்துல போன் பண்ணி பீமா பற்றிப் பேசுவார் - அது நள்ளிரவு ரெண்டு மணியாக் கூட இருக்கும். ஷுட்டிங்கோட போகமாட்டார். எடிட்டிங்கிலும் விடமாட்டார். அவ்வளவு ஆர்வம். அவர் ஏன் இவ்வளவு தூரம் ஜெயிச்சிருக்கார்னு இப்பத்தான் என்னால விளங்கிக்க முடியுது. இந்தப் படத்துக்கு அவரது கட்டுமஸ்தான உடம்பு முக்கியம். அதுக்காக அவர் ரொம்ப கஷ்டப்பட்டார். ஹாலிவுட் ஹீரோக்கள் அளவுக்கு மாற்றிக் காட்டினார். இந்தப் படத்தின் ஃபைட் காட்சிகள் பேசப்படும். அதில் நடிச்சிருக்கும் விக்ரம் பெரிய அளவில் பேசப்படுவார். அந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்திருக்கார். முன்னாடியே சொன்ன மாதிரி எல்லாருக்குமே பேசப்படும் படமா இது இருக்கும்.
ஐந்தாவது படத்திற்கு வந்துவிட்டீர்கள். ஒரு படத்தின் வெற்றிக்கு எது முக்கியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
படத்தில் ஏதோ ஒரு விஷயம் நல்லா இருந்தால் போதும். படம் வெற்றியடைந்துவிடும். அந்த ஒரு விஷயம் நூற்றுக்குநூறு சதவிகிதம் நேர்த்தியா - சின்சியரான உழைப்பா இருக்காணும். ஒரு பாட்டுக்கு - ஒரு ஃபைட்டுக்கு ஓடிய படங்கள்லாம் இருக்கு. அருமையான ஒரு காட்சிக்கு படம் ஓடியிருக்கு. நல்ல காமெடிக்கு படங்கள் வெற்றியடைஞ்சு இருக்கு. யாராவது ஒருத்தர் சின்சியரா உழைச்சாலே படம் ஹிட். அந்த ஒருத்தர் முக்கிய பங்கு வகிக்கிறவரா இருக்கணும். பயணம் போறோம்னா கார் டிரைவர் சரியானவரா இருந்தாலே பாதிப் பயணம் சக்சஸ் ஆன மாதிரித்தான். என் ஒவ்வொரு படத்திலும் வெற்றிக்கு ஒரு விஷயம் உதவி இருக்கு. 'ஆனந்தம்'னா மம்முட்டி சாரின் நடிப்பு. ஒரு நிஜமான அண்ணனா வாழ்ந்து காட்டினார். 'ரன்'னில் ஜீவா கேமரா, வித்யாசாகர் இசை, பீட்டர்ஹெய்ன் ஃபைட் பெரிய பலம். இப்படி ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விஷயம் இருந்திருக்கு. ஆனால் 'பீமா'வில் பல மடங்கு சிறப்புகள் இணைஞ்சிருக்கு. படம் வரட்டும் பாருங்க. நீங்களே ஏத்துக்குவீங்க.