Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்பா சொன்னால் தப்பாது - ஜெயம் ரவி

Advertiesment
அப்பா சொன்னால் தப்பாது - ஜெயம் ரவி

Webdunia

, சனி, 4 ஆகஸ்ட் 2007 (13:05 IST)
webdunia photoWD
தனக்கென தனியிடம் பெற்று சீரான வேகத்தில் பயணம் செய்து வருபவர் ஜெயம் ரவி. ஒரு சாக்லேட் பாயாக இளைஞிகள் மத்தியில் செல்வாக்குடன் வளர்ந்து வருகிறார். ஜெயம் ரவி மீது இன்னொரு இமேஜ் உண்டு. ரீமேக் ஹீரோ என்று பேசப்படுகிறவர். இப்போது கூட தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற 'பொம்மரிலு' தமிழில் உருவாகிறது. இவர்தான் நாயகன். அண்மையில் ஜெயம் ரவியைச் சந்தித்தபோது 'க்ளோஸ் அப்' புன்னகையுடன் பேச ஆரம்பித்தார்.

ரீமேக் படங்களில் நடிப்பதிலுள்ள வசதி என்ன? அசெளகர்யம் என்ன?

பலரும் நினைக்கிற மாதிரி இது சுலபமானது இல்லை. இதையும் புதுசாத்தானே எடுக்கிறோம். காட்சிகளை இம்ப்ரூவ் பண்றாங்க. நேட்டிவிட்டி மாற்றணும். அதே போல அந்தக் கேரக்டரை உள்வாங்கிட்டு நம்ம நேட்டிவிட்டிக்கு தகுந்த மாதிரி வெளிப்படுத்தணும். இதையும் தாண்டி அந்தப் படத்து ஹீரோ ஸ்டைலை காப்பியடிக்காம - இமிடேட் பண்ணாம அவர் பண்ணின மாதிரி இம்ப்ரஸ் பண்ணியாகணும். ப்ளஸ் என்னெனா கதை என்ன... சீன் என்னன்னு ஒரு தெளிவு நடிக்கிறதுக்கு முன்னாடியே வந்திடும். இது எப்படி வரும்கிற சந்தேகம் - பயம் எல்லாம் இருக்காது. நம்பிக்கையா இருக்கலாம். ஒரிஜினல் படத்தோட ஆர்ட்டிஸ்டுங்க நடிப்பை இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கலாம். இப்படி ரெண்டு பக்கமும் ப்ளஸ் மைனஸ் இருக்குன்னு சொல்லலாம்.

முந்தைய படங்களில் நடித்ததற்கும் 'பொம்மரிலு' ரீமேக்கில் நடிப்பதற்கும் என்ன வேறுபாடு உணர முடிகிறது?

என்னைப் பொறுத்தவரை ரீமேக் படங்களில் எனக்கு சக்ஸஸ்தான் கிடைச்சிருக்கு. காரணம் என் அண்ணன் ராஜா. தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னுதான் சொல்வாங்க. என்னைக் கேட்டால் அண்ணன் உடையான் படைக்கு அஞ்சான்னு சொல்வேன். அந்த அளவுக்கு என்னை உருவாக்குவதில் அண்ணனுக்கு பெரும்பங்கு உண்டு. அண்ணனின் தைரியத்தில் வளர்ந்தவன் நான். 'பொம்மரிலு' தெலுங்கு திரையுலகமே கொண்டாடிய படம். அது ஒரு மைல் கல்லுன்னே சொல்லலாம். அந்த அளவுக்கு பேசப்பட்ட படம். அதை ரீமேக் செய்றது சேலஞ்சிங்கான விஷயம். அந்த கலகலப்பு... அந்தக் கலவை ஒரு மேஜிக். அதைத் தமிழ்ல கொண்டு வர அண்ணன் ரொம்பவே கஷ்டப்பட்டு வர்றார். சாதாரணமா அதைக் கொண்டு வந்திட முடியாது. 'பொம்மரிலு' படம் பார்த்து நான் அசந்துட்டேன். அந்தத் தாக்கம் ரொம்ப நேரம் இருந்திச்சு. அதை எடுக்கிறதுக்கு நடிக்கிறதுக்கு டைரக்ட் பண்றதுக்கு பலபேர் விரும்பினாங்க. யார் யார் பேரெல்லாம் அடிபட்டுச்சு. அந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம். இது ஒரு அதிர்ஷ்டம்னு சொல்லலாம். நடிக்கிறப்போ கூட ஒரு த்ரில்லிங்கா ஃபீல் பண்றேன். ரீமேக் சாதாரண விஷயமில்லன்னு படம் பார்த்தால் புரியும். அந்த அளவுக்கு கஷ்டப்படுறோம்.

அப்பா தயாரிப்பாளர், அண்ணன் இயக்குநர் இந்த குடும்பக் கூட்டணி தொடர்வது பற்றி...?

இது சந்தோஷமான - அதிர்ஷ்டமான, பிடிச்ச ஒரு விஷயம். இது மாதிரி எல்லாருக்கும் அமைஞ்சிடாது. எல்லாருக்கும் வீடு, ஸ்கூல்னு ரெண்டு உலகம் இருக்கும். எனக்கு வீடு வீடாகவும் இருந்திருக்கு. ஸ்கூலாகவும் இருந்திருக்கு. அந்த அளவுக்கு எனக்கு வீட்ல சொல்லிக் கொடுத்தாங்க. பாசமும் படிப்பும் எனக்கு வீட்ல கிடைச்சது. என்னை நடிகனாக்க அப்பா பெரிய ரிஸ்க் எடுத்தார். அவரோட நம்பிக்கை எல்லாரையும் பிரமிக்க வச்சுது. அப்பா ஒரு ஆப்டிமிஸ்ட். எப்பவும் நல்லதே நினைப்பார். ரொம்பப் பிடிவாதமா நல்லதுதான் நடக்கும்னு நம்புவார். இது எங்களுக்கு ஆச்சரியமா இருக்கும். எப்படிப்பான்னு கேட்டால் அப்படித்தான்னு சொல்வார். அவர் எண்ணம் ஜெயிக்கும். தப்பாது. சின்ன வயசிலேயே அண்ணனுக்கு டெக்னிக்கல் சைடுதான் ஆர்வம். நாங்க பாட்டுப் பாடி ஆடிக்கிட்டு இருந்தால் அவர் அப்பாவோட மூவியா ஷோவுல பார்த்துக்கிட்டிருப்பார். நான் சின்ன வயசுல டான்ஸ் கத்துக்கிட்டேன். அண்ணனுக்கு அதில் அப்போ ஆர்வம் இல்லை. எப்பவும் அப்பா கூடவே இருக்கிறதுல அண்ணனுக்கு அலாதியான இஷ்டம்.

எடிட்டர் மோகன் மகன் என்கிற அறிமுகம் உங்களுக்கு எந்த அளவுக்கு உதவி இருக்கிறது?

ரொம்பவே உதவி இருக்கு. அதுக்கு முன்னாடி அப்பா பற்றி இன்னமும் கொஞ்சம் சொல்ல விரும்பறேன். அப்பா எப்பவுமே எதிர்மறையா யோசிக்காதவர். அதே மாதிரி திட்டமிட்டு தீர்க்க தரிசனமா செய்றவர். எல்லாருக்கும் வீடு மெயின்ரோட்லதான் இருக்கணும்னு விரும்புவாங்க. அதுதான் வசதின்னு சொல்வாங்க. ஆனா எங்க வீடு ஒரு முட்டுச்சந்துலதான் இருக்கு. ஏன் நம்ம வீடு மட்டும் இந்த மாதிரி தெருவுல இருக்குன்னு நினைச்சதுண்டு. இப்ப எங்க தெருவுக்குள் எந்த வெளி வாகனமும் வராது. என் அண்ணனின் குழந்தை எங்க தெருவுல விளையாடறாங்க. மெட்ராஸ்ல பெருகி இருக்கிற வாகனங்களில் இதுமாதிரி தெருவுல விளையாடறமாதிரி இருக்குமா. நிச்சயம் முடியாது. ஆனா எங்க தெருவுலமட்டும் டெட் எண்டா இருக்கிறதால முடியுது. இப்போ யோசிச்சுப் பார்க்கிறேன் அப்பா எவ்வளவு முன் யோசனையோட வீட்டைக் கட்டியிருக்கார்னு. என்னை நடிகனாக்கி தயாரிச்சது, பிறகு வேற டைரக்டர், வேற தயாரிப்பாளர்னு வெளிப் படங்களில் நடிக்க வச்சது. எல்லாமே அப்பாவோட படிப்படியான வழிகாட்டுதலில் நடந்திச்சு. இப்ப 'பொம்மரிலு'வை தமிழ்ல அப்பாவே தயாரிச்சு இருக்க முடியும். ஆனால் அவர் விரும்பலை. வெளியில நடிக்கட்டும்னு முடிவெடுத்தார். இந்த குடும்பக் கூட்டணிங்கிற வட்டத்தை விட்டும் அப்பாவே என்னை வெளியே நிற்கவச்சவர். அவரது எளிமைதான் அவரோட வலிமை.

Share this Story:

Follow Webdunia tamil