Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இசைக்கொரு பயிற்சிப் பள்ளி!- பரத்வாஜ்

இசைக்கொரு பயிற்சிப் பள்ளி!- பரத்வாஜ்

Webdunia

Webdunia
திரை இசையில் தனி முத்திரை பதித்திருக்கும் இசையமைப்பாளர் பரத்வாஜ், இப்போது ஒரு புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறார். "பரத்வாஜ் ஸ்கூல் ஆப் மியூசிக்" என்றொரு இசைப் பயிற்சிப் பள்ளியை தொடங்கியிருக்கிறார். இந்தப் புதிய துவக்கம் பற்றி பரத்வாஜிடம் பேசிய போது..

இசையமைப்பில் தீவிரமாக இருக்கும் உங்களுக்கு இசைப் பள்ளி தொடங்கும் எண்ணம் எப்படி வந்தது?

சினிமாவிலும் சரி தொலைக் காட்சித் துறையிலும் சரி வேறு கலை நிகழ்ச்சிகளானாலும் சரி இசையில் பங்கு முக்கியமானது. இசைத்துறை, வியாபாரமாக பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. பெருகி வரும் ஃப்.எம்., வானொலிகளே இதற்கு சாட்சி. இப்படி நாளுக்கு நாள் இசைக்கான தேவை வளர்ந்து வருகிறது. ஆனால் நவீன தொழில் நுட்பத்துடன் இசையைச் சொல்லிக் கொடுக்க யாரும் இல்லை.

ஏன் இசைக் கல்லூரி கூட இருக்கிறதே..?

இசையைச் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதை தனித்தனி வித்துவான்களும் சொல்லிக் கொடுக்கிறார்கள். அவர்களெல்லாம் பாரம்பரியமான இசையைச் சொல்லித் தருகிறார்கள். அதை மட்டும் வைத்துக் கொண்டு வணிக ரீதியில் வெற்றி பெற முடியுமா? இருபது வருஷமாக இசைப் பயிற்சி அனுபவம் உள்ள எத்தனையோ பேர் பெரிய அளவில் மேலே வர முடியவில்லை. சில நுட்பங்களை மட்டும் தெரிந்து கொண்டவர்கள் மேலே வரமுடிகிறது. அப்படி இன்றைய இசைக்கு ஏற்ற தொழில்நுட்பங்களை எங்கள் பள்ளி கற்றுக் கொடுக்கிறது. தவறும் கலையால் பெரிய வெற்றி சாத்தியப்படுவதில்லை. தொழில்நுட்பத்துடன் இணையும் போததான் வெற்றி அதிகரிக்கிறது.

இசைக்குத் தொழில்நுட்பம் எந்த அளவுக்குத் தேவைப்படுகிறது?

நான் இருபது வருஷமாக இசைத்துறையில் ஈடுபட்டு வருகிறேன். ஏறக்குறைய இந்தியாவில் உள்ள எல்லா பெரிய பாடகர்களையும் பாட வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இசைத் துறைக்கு கருவிகள் வாசிப்பவர்களிடம் எப்படி இங்கே வந்தீர்கள் என்றால் அப்பாவுக்கு சாப்பாடு கொண்டு வருவேன். வேடிக்கை பார்ப்பேன். அப்படியே ஆர்வம் வந்தது என்பார்கள். சில பேர் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டேன் என்பார்கள். ஆனாலும் பல பேரில் ஆதங்கம். எங்களுக்கு ஆர்வம் இருக்கிறது. ஈடுபாடு இருக்கிறது. சந்தேகங்களை தீர்க்க நெளிவு சுளிவுகளை சொல்லித் தர யாருமில்லை என்பதுதான். எனக்கும் கூட இதே அனுபவம் தான். முட்டி மோதி கற்றுக் கொண்டது தான் அதிகம். முன்பே சொன்ன மாதிரி பாரம்பரிய இசை தெரிந்தும் பல வருஷப் பயிற்சி அனுபவம் இருந்தும் மேலே வர முடியாமல் கஷ்டப்படும் பலரைப் பார்க்க முடிந்தது. அவர்களுக்கெல்லாம் இசையை நவீனப்படுத்திக் கையாளும் தொழில்நுட்பம் மட்டும் தெரிந்திருந்தால் எங்கோ போயிருப்பார்கள் என்று நினைப்பேன். இந்த விஷயங்கள் சொல்லித் தரப்பட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதை நாமே செய்தால் என் என்று தோன்றியது. அதன் விளைவு தான் இந்தப் பள்ளி. இன்றைக்கு இசைக்குப் பல்வேறு நிலைகளிலும் தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. தொழில்நுட்பம் சேராத இசை வணிக ரீதியில் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு என்று ஆகிவிட்டது. அந்த தேவையை பூர்த்தி செய்யவே இந்தப் பயிற்சி.


இங்கு என்ன மாதிரியான பயிற்சி தரப்படுகிறது?

இது ஒராண்டுக்கான டிப்ளமா கோர்ஸ். Diploma in Applied Music. நம் நாட்டில் பொழுது போக்குத் துறையில் இசை பெரும்பங்கு வகிக்கிறது. குறிப்பாக மெல்லிசைக்கு எல்லாத் துறையிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சினிமா, தொலைக்காட்சி, வானொலி, பொது நிகழ்ச்சி போன்ற எல்லாவற்றிலும் திரை சார்ந்த இசை, இசை சார்ந்த நிகழ்ச்சிகள் பிரபலமடைந்து வருகின்றன. தனிப்பட்ட இசை ஆல்பமும் வெளியிடுகிறார்கள். பாடகர்கள் நல்ல குரல்வளம் பெற்றிருந்தால் மட்டும் போதாது. அடிப்படையான மெல்லிசை நுட்பங்களைத் தெரிந்து கொள்வதற்கு சிறப்பான தொழில் முறையிலான பயிற்சி தேவைப்படுகிறது. அது இங்கே வழங்கப்படுகிறது. சினிமா, டிவி தொடர்கள், விளம்பரங்கள், இசை ஆல்பம் போன்ற பல்வேறு இசை வடிவங்களில் பணியாற்றிய என் அனுபவமும் மற்ற இசை வல்லுநர்களின் மேற்பார்வையும் இப்பயிற்சியில் பங்கு வகிக்கிறது. எனவே தான் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம் இப்படிப்பை அங்கீகாரம் கொடுத்து சிறப் பு செய்திருக்கிறது.

இப்பயிற்சியின் சிறப்பம்சங்கள் என்ன?

இசைக்கென நவீன சிறப்பு தொழில்நுட்பத்துடன் விஞ்ஞான பூர்வமான பயிற்சியாக இது அமையும். தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழக அங்கீகாரத்தால் இந்த பட்டயப் படிப்பின் மதிப்பு உயர்ந்துள்ளது. ஒரு முழுமையான ஒழுங்கான செயல் திட்டங்களுடன் இணைந்த பாடத் திட்டத்துக்கு மட்டுமே இப்படி பல்கலைக் கழக அங்கீகாரம் கிடைக்கும். தொலை நிலைக் கல்வி முறையில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நேரடிப் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர், ஈரோடு போன்ற 12 இடங்கள் மையமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அங்கெல்லாம் நவீன வசதிகளுடன் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் 24,000 ரூபாய்.

இதன் அடுத்த நிலையாக என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

இப்போது முழுக்க முழுக்க வாய்ப் பாட்டுப் பயிற்சி மட்டுமே அளிக்கப்படுகிறது. போகப் போக இசைக் கருவிகள் வாசிக்கவும் பயிற்சியளிக்க உத்தேசம் இருக்கிறது. தேவையையும் வசதியையும் பொறுத்து முடிவு செய்யப்படும். தமிழ் நாடு தவிர பிற மாநிலங்கள், சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகிளலும் மையங்கள் தொடங்கும் திட்டம் உள்ளது. வெறும் வாய்ப்பாட்டுப் பயிற்சியாக இல்லாமல் தகவல் தொடர்புத் திறன், இசைக் கோட்பாடு, இசைக் கலை வரலாறு என்று பல்வேறு அம்சங்கள் இணைந்த ஒரு முழுமையான பயிற்சியாக இது இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil