Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நானும் காதலிக்கிறேன் - நிலா

Advertiesment
நானும் காதலிக்கிறேன் - நிலா

Webdunia

Webdunia
அடுத்த சிம்ரன் என்று எதிர்பார்க்கப்பட்டவர் நிலா. மெலிந்த உடல்வாகு, கிறங்கடிக்கும் கவர்ச்சி என சிம்ரனின் ஜெராக்ஸ் மாதிரி வந்தார். ஆனால் அந்த அளவுக்கு உயரவில்லை. எஸ்ஜே சூர்யா அறிமுகம் என்கிற இமேஜ் இருந்தும் கவர்ச்சிப் பாதையும் இவருக்குக் கைகொடுக்கவில்லையோ... நம் சந்தேகத்தை நிலாவிடமே கேட்டோம்.

நிலா கவர்ச்சியாக நடிப்பவர் என்கிற எதிர்பார்ப்பு தவறா?

நான் ஒரு கிளாமர் கேர்ள்தான். இதை ஒப்புக் கொள்வதில் தவறில்லை. இதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. கிளாமரா தோன்றுவதும், அதை ரசிகர்கள் ஏத்துக்கறதும் எல்லாருக்கும் அமையுறதில்லை. என் விஷயத்தில் அது நடந்திருக்கிறது. இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தான். அதனால நிலா ஒரு கிளாமர் ஹீரோயின்னு தாரளமா சொல்லிக்குங்க.

பரபரப்பாக அறிமுகமானீர்கள். "அ. ஆ." படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது. பிறகு "ஜாம்பவான்", "லீ"... படங்கள். அதன் பிறகு... நிலாவை காணோமே ஏன்?

அந்தப் படங்களுக்குப் பிறகு எனக்கு சரியானபடி படங்கள் அமையலை. அதனால தெலுங்கு பக்கம் போய்ட்டேன். அங்கு நல்ல படங்கள். நல்ல சம்பளம். ஸோ... தெலுங்கில் ஹேப்பியா இருக்கேன். இடையில் தமிழ்ல சில பிடிச்ச மாதிரி அமைஞ்ச படங்கள்தான் "மருதமலை", "கில்லாடி." இப்போ இந்த இரண்டு தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறேன்.

தெலுங்கில் அநியாயத்துக்கு கவர்ச்சியாக நடிக்க வேண்டுமே?

ஆமாம். தமிழை விட தெலுங்கில் கொஞ்சம் அதிகமா கிளாமரை எதிர்பார்க்கிறாங்க. எனக்கு இதுல ஒண்ணும் பிரச்சனை இல்லை. ஏன்னா நான் முன்னாடி சொன்ன மாதிரி நான் ஒரு கிளாமர் கேர்ள்தானே. அதே சமயத்தில் தெலுங்கில் ஹோம்லியா நடிக்கிற மாதிரியும் கேரக்டர் வந்திச்சு. சொன்னா நம்பமாட்டீங்க.

தெலுங்குல "பங்காரம்"னு ஒரு படம். படம் முழுக்க சுடிதார்ல வருவேன். பக்கா ஹோம்லி கேரக்டர்.

அதில் புடவை கட்டி நடிக்கவில்லையா.. சுடிதார் தானா?

இப்படி கேட்கிறது எனக்கு ஆச்சரியமா இருக்கு. ஏன் சிரிப்பு கூட வருது. ஏன்னா புடவை கட்டுறதை ஹோம்லின்னு நினைக்கிறது இங்கே இருக்கு. புடவை ஒரு கிளாமர் காஸ்ட்யூம்னுதான் சொல்வேன்.

தமிழ், தெலுங்கு மொழிகளுக்கு பிறகு அடுத்தது இந்திப் பிரவேசம் தானே?

இந்தி எனக்கு சரியா வராது. தமிழ்ல வருஷத்துக்கு நாலு படம் கூட பண்ணலாம். ஏன்னா மூணு மாசத்துல தமிழ்ல ஒரு படம் முடிச்சிடுவாங்க. தெலுங்கு கூட பரவாயில்லை. ஆனா இந்தி கொடுமை. ஒரு படம் முடிக்க ஒரு வருஷம் ஆகும். அந்த அளவுக்கு நேரம் வீணாய்டும். நமக்கு அவ்வளவு டைம் வேஸ்ட் பண்ண முடியாது.

அர்ஜுன், பரத் இப்படி சீனியர், ஜுனியர் என்று பார்க்காமல் ஜோடியாக நடிக்கிறீர்களே...?

நான் இப்படி சீனியர், ஜுனியர் வித்தியாசம் பார்ப்பதில்லை. அறிமுகம் ஆகிறபோது எல்லாரும் புதுமுகம் தானே. நானும் ஒரு புதுமுகமாகத் தானே அறிமுகம் ஆனேன். அர்ஜுன் தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் தெரிஞ்ச முகம். நானும் ரெண்டு மொழிகளிலும் நடிக்கிறேன். அதனால அர்ஜுன் ஜோடியா "மருதமலை"யில் நடிக்கிறேன். பரத் கூட "கில்லாடி"யில் பண்றேன். பரத் வளர்ந்து வர்றவர். அவர் கூட நடிப்பதில் எனக்கு தயக்கமில்லை. அதனால நான் எந்த பாகுபாடும் பார்க்கறதில்லை.

நீங்கள் யாரையோ காதலிப்பதாக கிசுகிசு வருகிறதே...?

அது கிசுகிசுவா. நிஜம்னே வச்சிக்குங்களேன். நான் ஒருத்தரை விரும்பறேன். அவர் சினிமா சம்பந்தப்பட்டவரில்லை. என்னை நல்லா புரிஞ்சுக்கிட்டிருப்பவர். நல்ல நண்பர். பல விஷயங்களில் என்னை இம்ப்ரஸ் பண்ணிட்டார். எங்களுக்குள் பல விஷயங்கள் ஒண்ணா இருக்குது. இப்படி அமையுறது சுலபமில்லை.

அவர் பற்றிய விவரம் சொல்வீர்களா?

அவர் சினிமாக்காரரில்லை. அது மட்டுமே இப்போ சொல்ல முடியும். அவர் யார்... அவர் என்ன செய்றார் இதெல்லாம் இப்போ சொல்லமாட்டேன். கல்யாண டைம்ல சொல்வேன். கல்யாணம் எப்போன்னு கேட்பீங்க. அதுக்கு இன்னும் மூணு வருஷம் இருக்கு.

ஒரு நடிகை காதலிப்பது என்பது நடிக்கும் சினிமாத் தொழிலுக்கு இடையூறா இருக்காதா?

நான் என் காதலை மறைக்கலை. இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. நான் காதலிக்கிறதை மறுக்கலை. தைரியமா வெளியில் சொல்லிட்டு வர்றேன். மறைச்சால் தான் பிரச்சினை. அடுத்த மூணு வருஷத்துல மேரேஜ். அதனால எந்தக் குழப்பமும் இல்லை. என் கேரியர்ல சிக்கல் இருக்காது.

ஹீரோயின் நீங்கள். ஒரு பாட்டுக்கு ஆடுகிறீர்களே...?

இதில் தப்பில்லை. முழுப் படத்துக்குக் கொடுக்கிற சம்பளத்தில் பாதி, ஒரு பாட்டுக்கு தர்றாங்க. ஒரு பாட்டுக்கு ஆடினால் பாதிப்பட சம்பளம் தந்தால் ஆடுறதுல என்ன தப்பு? அதனால யார் படத்துக்கும் ஆடுவேன்னு நெனச்சிடாதீங்க. ட்ரீட்மெண்ட், அப்ரோச் நல்லா இருக்கணும். சிம்புவின் ப்ரண்ட்ஷிப்புக்காக "காளை"யில் ஆடினேன். ஆனா தனுஷுடன் ஆட "யாரடி நீ மோகினி" படத்துக்கு கூப்பிட்டாங்க நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்.

தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லையா?

நான் கல்யாணத்துக்குப் பிறகு நடிக்கமாட்டேன். எனக்கு பணம் மட்டுமே முக்கியமில்லை. சினிமாவில் கொஞ்ச காலம் நடிக்கலாம்னு தான் இங்கு வந்தேன். நிரந்தரமாக இங்கு இருக்கும் திட்டம் எனக்கு இல்லை. எனக்கு பிஸினஸ் பிடிக்கும். அப்பாவோட பிஸினஸ் இருக்கு. கல்யாணத்துக்குப் பிறகு அதை பார்த்துப்பேன்.

Share this Story:

Follow Webdunia tamil