ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒரு பாணியில் இசை இருக்கும். அதைக் கொண்டு வணிக ரீதியில் வெற்றி பெறுவது உண்டு. ஆனால் தினா வணிகப் பாணியே தன்பாணி என்று மன்மதராசாக்களாக குத்துப்பாட்டுக்களாகக் கொடுத்து குதூகலித்து வந்தார்கள்.
அதன் மூலம் வெற்றிகளை சேகரித்து வந்தார். அவர் போக்கில் இப்போது மாற்றம். மெலடிகளால் இதயங்களை வருடி வருகிறார். குறிப்பாக கருப்பசாமி குத்தகைதாரர், நீ நான் நிலா படங்கள் தினாவின் மெலடி கானாவைப் பறைசாற்றுகின்றன. அப்படங்களின் வெற்றியின் பின்னணியில் தினாவின் பங்களிப்பு இருப்பதை மறுக்க முடியாது.
இனி தினா
இனிமையான இசை வடிவமே என்றும் நீடித்து நிற்கும் என்று மெலடிக் கட்சியில் சேர்ந்து விட்டீர்களா?
எந்த இசையமைப்பாளருக்கும் மெலடி பிடிக்காமல் இருக்காது. மக்கள் மனதை மயக்கும்படி பாடல்களைப் போட வேண்டும். குறிப்பாக மெலடியி்ல் மெட்டமைக்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் இருக்கும். கமர்ஷியல் வெற்றி குவித்தவர்களுக்குக் கூட ஆத்ம திருப்தி கிடைப்பது அந்த மெலடி மெட்டுக்களில்தான். எவ்வளவோ ஹிட் பாடல்களைக் கொடுத்தவர்களைக் கேட்டால் கூட பிடித்த பாடல்கள் என்று வரும்போது மெலடியைத்தான் உதாரணமாகச் சொல்வார்கள். அந்த அளவுக்கு மெலடிக்கு மரியாதை உண்டு. நான் கமர்ஷியல் ஹிட் வேண்டும் என்று பல பாடல்கள் கொடுத்தாலும் எனக்கும் பெயர் சொல்லும்படி பாடல்கள் வேண்டாமா? விமர்சனங்களுக்கு இடமில்லாத இனிமையான பாடல்கள் ஒரு இசையமைப்பாளருக்குத் தரும் திருப்தியும் சந்தோஷமும் தனிதானோ? அப்படி ஒரு வாய்ப்பு கருப்பசாமி, நீ நான் நிலா படங்களில் வந்தது.
ஒரு படத்தில் இப்படிப்பட்ட இசை என்று எப்போது முடிவாகிறது?
ஓர் இசையமைப்பாளரின் பணியும், பயணமும் ஆற்றின் பயணத்தைப் போன்றது. ஆற்றுக்கு பாதை நேர்க்கோட்டில் இருக்காது. வளைந்து, நெளிந்து, தேங்கி, சுழித்து, மேலேறிச் சீறி, நுறை பொங்கி அது போகும். அதற்கு அது இலகுவாக இருக்கும். நோர்க்கோட்டுப் பாதையில் போகும் ஆறு பார்க்க அழகாகவா இருக்கும்? அதுபோலவே எங்களுக்கும் அதைகிற கதைகள் இயக்குநர்கள் சூழல்கள்தான் முடிவு செய்கின்றன எப்படிப்பட்ட இசையைத் தர வேண்டும் என்பதை.இப்போது தெரிகிறதா நாங்களும் ஒரு எடுப்பார் கைப்பிள்ளை என்பது.
இசையமைக்கச் சவாலாக அமைந்த சூழல் என்று ஏதாவது சொல்ல முடியுமா?
அண்மையில் வெளிவந்துள்ள படம் நீ நான் நிலா. அதில் ஒரு பாடல் வரும் காதல் செயய்யும் நண்பனே என்று தொடங்கும் பாடல் கதைப்படி ஒரு ஆவி அறிவுரை, ஆறுதல் கூறுவது போல இருக்கும். இதுவரை மனிதனுக்கு மனிதன் கருத்தையோ, மனித உணர்வுகளை கூறும்படிதான் படங்கள் வந்துள்ளன. இப்படி ஆவி பாடுவது என்பது புதுமையான சூழல். கொஞ்சம் சவாலான சூழலும் கூட . பாடலும் காட்சியும் ரசிக்கப்பட வேண்டும் என்று பயந்து பயந்து அமைத்த பாடல். இன்று பெரிய வெற்றி பெற்றிருப்பது திருப்தியாக இருக்கிறது.
ரசிப்பவர்களின் ரசனையை எப்படி கணிக்க முடிகிறது?
முதலில் நாம் ரசிகனாக இருக்க வேண்டும். பிறகுதான் படைப்பாளி. நல்ல ரசிகனாக இல்லாமல் யாரும் எதையும் படைக்க முடியாது. அதனால் எனக்கு முதலில் ஈடுபாடு ஏற்பட்டு ரசிக்க முடிகிற மெட்டைப் போட வேண்டும். எனக்கே பிடிக்காமல் போனால் யார் ரசிப்பார்கள். சில பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சில சுமாராகப் பிடிக்கும் என் பாடல்களைத்தான் சொல்கிறேன்.
அண்மையில் மலேசியா போய் வந்தேன். அங்கு என்னைச் சந்தித்த ரசிகர்கள் கூடிய கருத்து எனக்கு ஆச்சரியமூட்டியது. கமர்ஷியலாக வெற்றி பெற்ற படங்களை விட அதே படத்தில் நான் இசையமைத்த பிற பாடல்களையே தங்களுக்குப் பிடித்ததாகக் கூறினார்கள். அதற்கு வலுவான காரணத்தையும் எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் அந்த பாடலை ரசித்த காரணத்தைக் கேட்டபோது உண்மையிலேயே எனக்கு ஆச்சரியம். பிறகுதான் புரிந்தது. ரசனை என்பது ஒரு வட்டத்துக்குள் பூட்டி வைக்க முடியாத உணர்வு என்று. அந்த மலேசிய அனுபவம் ரசனை பற்றி எனக்கு வேறுபட்ட பார்வையை அறிந்து கொள்ள உதவியது. எனவே ரசனைகள் பலவிதம். அவற்றைக் கணிப்பது அத்தனை சுலபமல்ல என்று அறிந்து கொண்டேன்.
உங்களுக்கு சமீபத்தில் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம்?
சமீபகாலமாக சந்திக்கும் சந்தோஷம் என்று கூறினால் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் அன்பு. இப்போது இணையதளங்களின் வரவால் பல நாடுகளில் வாழும் தமிழ் ரசிகர்களின் நட்பு கிடைத்துள்ளது. அவர்கள் நம் மண்ணுடன் தொடர்பு கொள்ளும் போது காட்டும் பாசம், நிஜமான நேசம் எனக்கு நெகிழ்ச்சியூட்டுகிறது. அவர்கள் காட்டும் மகிழ்ச்சியின் நடுவே நாடுவிட்டு நாடு வந்து வசிக்கும் கவலையையும் உணர முடிகிறது.