"திருமகன்" மூலம் முழு நடிகராக முத்திரை பதித்து இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுவதில் மகிழ்ச்சியில் நனைந்து கொண்டிருக்கும் அவருடன் ஒரு சந்திப்பு.
நடிப்பு ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
அடிப்படையில் நான் ஒரு டைரக்டர் தான். ஆனால் எல்லா டைரக்டருக்குள் ஒரு நடிகன் இருக்கான். நடிக்கத் தெரியாதவங்க டைரக்டரா ஆக முடியாது. எனக்குள் இருந்த நடிகன் சூழ்நிலை நிர்ப்பந்தத்தால வெளியே வந்தான். அவனுக்கு அங்கீகாரம் கிடைச்சுது.
எஸ்.ஜே.சூர்யா நடிப்பது என்றால் அதில் காமநெடி அடிக்கும் என்கிற இமேஜ் உள்ளதே..?
இதில்ல உண்மையில்லை. "நியூ" கூட சப்ஜெக்ட் அப்படி. இது பெரிசுபடுத்தப்பட்ட பிரச்சாரம். "திருமகன்" அந்த இமேஜை முழுசா துடைச்சிடுச்சுன்னு சொல்லலாம். குடும்பத்தோட பார்க்கிற படமா இது இல்லையா?
ஒரு நடிகரா உங்களுக்கு நீங்கள் போடும் மார்க் என்ன?
பாஸ் மார்க் வாங்கிட்டதா நம்பறேன். அந்த அனுபவத்தை "திருமகன்" கொடுத்திருக்கு. என்கூட பெரிய அனுபவமுள்ள ராதாரவி சார், விஜயகுமார் சார் எல்லாம் நடிச்சிருந்தாங்க. அப்போ அவங்க என் நடிப்பு பற்றி நிறை குறையை சொன்னாங்க.
சில விஷயங்களைப் பாராட்டவும் செஞ்சாங்க. குறிப்பா ராதாரவி சார் நிறையவே ஊக்கப்படுத்தினார். எனக்கு நிறைய டிப்ஸூம் கொடுத்தார். நடிப்பு சொல்லிக் கொடுக்கிறது வேற நடிக்கிறது வேறங்கிறதை தெளிவுபடுத்தினார். அவர் எவ்வளவு அனுபவம் உள்ளவர். அவர் பாராட்டியதெல்லாம் மறக்க முடியாது. அதனால்தான் சொல்றேன் நான் பாஸ் மார்க் வாங்கிட்டேன்னு.
யாரை முன்னுதாரணமாகக் கொண்டு நடிப்பை வெளிப்படுத்துகிறீர்கள்?
கார்த்திக் சார் எனக்குப் பிடிச்ச நடிகர். அவர் நடிப்பில் யதார்த்தம் இருக்கும். தனி ஸ்டைலும் இருக்கும். அவர் என்னை ரொம்ப பாதிச்ச நடிகர். அவர் பாதிப்பு என் நடிப்பில் இருக்கலாம். அவரைப் போல யதார்த்த நடிப்பில் பெயரெடுக்க எனக்கு ஆசை.
"திருமகனில் யாருடைய நடிப்பைக் கண்டு வியந்தீர்கள்?
விஜயகுமார், ராதாரவி இவங்கள்லாம் பெரிய ஜாம்பவான்கள். எக்கச் சக்கமா அனுபவங்க அவங்களுக்கு உண்டு. அவங்க நடிப்பு என்னை ஆச்சரியப்படுத்தினதுன்னா அது அதிசயமில்லை. ஆனா மீரா ஜாஸ்மின் சின்னப் பொண்ணு. எவ்வளவு அற்புதமா நடிக்கிறாங்க. நானும் அவங்களும் நடிக்கிற காட்சியில் அவங்களை முன்னாடி நடிக்கவிட்டுட்டு பிறகு அதைப் பார்த்துட்டுத்தான் நான் நடிச்சேன். ஒண்ணா நடிக்கவிட்டால் என்னை அவங்க மிஞ்சிருவாங்களோன்னு பயம். அந்த அளவுக்கு திறமைசாலி. முகத்தைக் கோணலாக்காமல் சுளிக்காம சோகமான காட்சியில் நடிப்பார். வெறும் கண்களை வச்சே சோகத்தை பிரதிபலிக்க மீராவால் முடியுது. அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
"வாலி" படம் போன்று தொழில் நுட்பத்துடன் இணைந்த திரைக்கதை சொன்ன இயக்குநர் சூர்யா இனி வரமாட்டாரா?
நான் முன்னாடி சொன்ன மாதிரி அடிப்படையில் ஒரு டைரக்டர். இப்போ நடிகனாயிருக்கேன். இனி நடிப்பா டைரக்ஷனா.. எத்தனை படம் நடிப்பு எத்தனை படம் டைரக்ஷன்.. இந்த கணக்கெல்லாம் வச்சிக்கலை. அதைப் பற்றி எந்தத் திட்டமும் இல்லை. அதை டைம் தான் முடிவு பண்ணும். டைரக்ஷன் என்கிட்டே முன்னாடியே இருக்கிற தொழில். நடிப்பு பிறகு வந்தது. எதுல அங்கீகாரம் கிடைக்கிறதுன்னு பார்க்கலாம். ஆனா ஒண்ணு இந்தச் சூர்யா இவ்வளவுதான்னு யாரும் முடிவு கட்டிடாதீங்க.
நடிகரா ஆன பிறகு சுதந்திரம் போய்விடுமே..?
நான் என்னைக்கும் நானா இருக்க விரும்புறவன். இந்த சினிமா என்னை மாற்றிடக் கூடாதுன்னு நினைக்கிறவன். பிரபலமாகி.. அந்த பேம் நம் ப்ரைவசிக்கு என்னைக்கும் இடைஞ்சால ஆகக் கூடாதுன்னு தெளிவா இருக்கேன். சொன்னா நம்ப மாட்டீங்க. நான் சினிமாவுல டைரக்டரா ஆகிறதுக்கு முன்னாடி டூலீலர்ல போவேன். போறதுக்கு ஒண்ணும் இல்லைன்னா கார், டூலீலர்னு லிப்ட் கேட்டுட்டு போவேன். இப்பக் கூட நினைச்சா டூவீலர்ல சென்னைல சுத்தி வருவேன். என் சுதந்திரத்தை விட மாட்டேன். இன்னைக்கும் கார்ல லிப்ட் கேட்டு போவேன். ஒரு இடத்துல நிற்கிறது வெயிட் பண்ணி நேர்ததை வீணடிக்கிறது எனக்குப் பிடிக்காது. ஒடிக்கிட்டே இருக்கணும் இதுதான் என் பாலிசி.