குறுகிய காலத்தில் நம்பர் ஓன் இருக்கையை நெருங்கியிருப்பவர் அசின். இந்த மலையாளம் பெண் குட்டிதான் தமிழ் இளைஞன் கனவில் ஓடும் மான் குட்டி. ஆமாம்.. இன்றைய இளவட்டங்களின் இதயங்களில் ஒட்டியிருக்கும் பிசின் இந்த அசின் தான்.
முதல் வரிசை நாயகர்களுடன் ஜோடி, முதல் இடத்தை நோக்கிப் போட்டி... என்ன உணர்கிறார் அசின்?
"ரொம்ப சந்தோஷம் தான். ஆனா அதுவே கர்வமா மாறிடக் கூடாதுன்னு நினைக்கிறேன். இது ஒரே நாள்ல நடந்த விஷயமல்ல. படிப்படியா வளர்ந்து கிடைச்ச பெருமை."
இந்த 2007ன் திட்டம் என்று ஏதாவது அசினுக்கு உள்ளதா?
"2005ல் "உள்ளம் கேட்குமே", "கஜினி", "சிவகாசி", "மஜா" படங்கள்ல நடிச்சேன். 2006-ல் "வரலாறு" தெலுங்குல "அன்னாவரம்". இந்த வருஷம் தொடங்கின போது "போக்கிரி", "ஆழ்வார்" ரிலீஸாச்சு. இப்போ "தசாவதாரம்" படத்துல நடிக்கிறேன். இந்தப் பட்டியலைப் பார்த்தால் வருஷத்துக்கு இத்தனை படம் நடிக்கணும் இத்தனை படம் வரணும்கிற கணக்கு எனக்கில்லைங்கிறது புரியும். நான் எத்தனை படத்துல நடிக்கணும்கிறதை வர்ற கேரக்டர்கள் தான் முடிவு செய்யும். நானல்ல."
கதாநாயகனைத் தாண்டி அப்படி என்ன கதாநாயகிகளுக்கு பெரிய முக்கியத்துவம் தந்துவிடப் போகிறார்கள்? இது அசினுக்குத் தெரியாதா?
"மற்றவர்கள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நான் வெறுமனே வந்து போக முடியாது. நான் நடிச்ச "கஜினி", "சிவகாசி", "மஜா", "வரலாறு", "போக்கிரி", "ஆழ்வார்" படங்களைப் பார்த்தால் நான் வெறும் பொம்மை ஹீரோயின் இல்லைன்னு புரியும். "தசாவதாரம்" படத்தில் கூட எனக்கு நல்ல கேரக்டர் தான் படத்தில் ஹீரோவுக்கு என்னதான் முக்கியத்துவம் கொடுத்தாலும் என் பங்கு பேசப்படற மாதிரி அடையாளம் காட்டுற மாதிரி இருக்கும்கிறதை யாரும் மறுக்க முடியாது".
தசாவதாரத்தில் அசினுக்கு என்ன மாதிரியான பாத்திரம்?
""வரலாறு" படத்துக்குப் பிறகு கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷன்ல எனக்கு இரண்டாவது படம் இது. இது தமிழ்ல குறிப்பிட்டுச் சொல்ற படமா நிச்சயம் பேசப்படும். ரொம்ப நல்லா ஒர்க் போய்க்கிட்டிருக்கு. ரசிச்சு ரசிச்சு ஒர்க் பண்றாங்க. கமல் சார் கூட நடிக்கிறது புது அனுபவம். என் கேரக்டர் என்னன்னு சொல்லக் கூடாது. அதுக்க அனுமதி இல்லை."
சில கதாநாயகர்களுடன் மட்டும்தான் அசின் நடிப்பார் என்று பேசப்படுகிறதே..?
"நான் ஒரு படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடி கதை, கேரக்டர், கம்பெனி, டைரக்டர், ஹீரோன்னு ஐந்து விஷயங்களைப் பார்க்கிறேன். அதுல ஹீரோவை கடைசியில் தான் பார்ப்பேன். அதுக்கு முன்னாடி நாலு விஷயங்கள் இருக்கு. இதுதான் என் பாலிசி. அதனால இன்னாருடன் நடிப்பது வேண்டாம்னு எல்லாம் பேசப்படறது சுத்தப் பொய். அதில் உண்மையில்லை."
அசின் அதிகமாகச் சம்பளம் கேட்பதாகப் பேச்சு உள்ளதே.?
"சினிமாவைப் பொறுத்த வரை கொடுக்கப்படறதுதான் சம்பளம். கேட்டு வாங்குறதில்லை. தானா கொடுக்கப் படறது. அது அவங்களுக்கு இருக்கிற மார்க்கெட்டை வச்சித்தான் பேசப்படுது. சரிப்பட்டு வந்தால் நடிப்பேன். ஒப்பந்தமான பிறகு எந்தப் பிரச்சினையும் செஞ்சதில்லை. முதல்ல சொல்றதை கடைசி வரைக்கும் மாத்தாம காப்பாற்றுவேன். இது என்னை வச்சி படமெடுத்தவங்களுக்குத் தெரியும்."
இவ்வளவு உயர்ந்த பின்னும் விளம்பரங்களில் நடிப்பது சரியா அசின்?
"அதிலென்ன தப்பு? சினிமா இமேஜை வச்சி விளம்பரப் படங்கள் வாய்ப்பு வந்தது. சில விளம்பரங்கள் பாப்புலர் ஆகி சினிமா இமேஜுக்கு உதவியாவும் இருக்கு. சில விளம்பரங்களுக்கு அம்பாசிடரா இருக்கேன். இது பெருமையான விஷயம். சினிமாவும் விளம்பரமும் எனக்கு ரெண்டு கண்கள் மாதிரின்னு சொல்வேன்."
அசின், நயன், மீரா ஜாஸ்மின், மம்தா, நவ்யா, கோபிகா இப்படி மலையாள நாயகிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளதே?
"முன்பு ஒரு காலத்துல மும்பையிலிருந்து நிறைய பேர் வந்தாங்க. இப்போ கேரளாவிலிருந்து வர்றாங்க. இது சகஜமானது. ஒவ்வொரு காலக் கட்டத்துல இப்படி இருக்கும். சினிமாவுக்கு மொழி பேதம் கிடையாது. இங்கிருந்து மும்பை போய் பாப்புலர் ஆனவங்களும் இருக்காங்க."
த்ரிஷா, ஸ்ரேயா இவர்களில் யார் அசினுக்குப் போட்டி?
"எனக்கு யாரையும் போட்டியா நினைக்கிறது பிடிக்காது. எனக்கு நான்தான் போட்டி நான் நடிக்கிற படங்களை முடிவு பண்றது கதையும் கேரக்டரும் தான் தவிர வேற யாருமில்லை. வர்ற எல்லாப் படத்திலும் நானே நடிக்கவும் முடியாது இல்லையா? எனக்கு பொருந்துற கேரக்டர்ல மட்டும்தான் நான் நடிக்க முடியும்."
வெறும் கமர்ஷியல் ஹீரோயின் என்பது மட்டுமே அசினின் லட்சியமா?
"நல்ல கேரக்டரில் நடிக்கணும். நல்ல ஸ்கிரிப்டில் நடிக்கணும். அந்தப் படம் ஹிட்டாகணும். அதுதான் பெரிய சந்தோஷம். அதே படத்துக்கு விருது ஏதாவது கிடைச்சால் பெரியதான கூடுதல் சந்தோஷம். இது போதும் எனக்கு."
தொழில் ரீதியாக அசினின் வெற்றியின் பின்னணியில் இருப்பது என்ன?
"கேரக்டரை செலக்ட் பண்றது. அதுல நம்பிக்கையோட உழைக்கிறது. தன்னம்பிக்கை மட்டுமல்ல என்னோட உற்சாகமும் எனக்கு ப்ளஸ் பாயிண்ட். டெடிகேடிவா ஒர்க் பண்றது என் குணம். எப்போதும் ஆர்வம் குறையாமல் உற்சாகம் குறையாம பார்த்துக்குவேன். நான் உற்சாக மனுஷி. உழைக்க பயந்துட்டு வீணா புலம்பறது எனக்குப் பிடிக்காது. அந்த உற்சாகம் தான் என் வெற்றிக்குப் பின்னாடி இருக்கும் பெரிய பலம்."