Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் ஒளிமயமான எதிர்காலம்!

Advertiesment
ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் ஒளிமயமான எதிர்காலம்!

Webdunia

தமிழ்த் திரையில் குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளராகிவிட்டவர் ராம்ஜி. பி.சி.ஸ்ரீராமின் மாணவரான இவர் அண்மையில் பதித்துள்ள முத்திரை "பருத்திவீரன்". இப்படத்தின் நேர்த்தியிலும் கீர்த்தியிலும் ராம்ஜியின் ஒளிப்பதிவுக்கு கணிசமான பங்கு உண்டு. தமிழில் மட்டுமல்ல இந்தியிலும் பிஸியாக இருக்கும் ராம்ஜியுடன் ஒரு சந்திப்பு.

அமீருடன் மூன்று படங்கள்... அந்த அனுபவம் எப்படி?

"மௌனம் பேசியதே" நான் அமீருடன் இணைந்த முதல் படம். அது வெற்றி பெற்ற படம். அடுத்து "ராம்". நான் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்கிற மாதிரியான படம். ஆனால் படம் பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் "பருத்திவீரன்" பெயரையும் வெற்றியையும் தேடிக் கொள்ளப் போகிற படம். இப்படித்தான் "பருத்திவீரன்" தொடங்கும் போது இந்தப் படத்தில் பணியாற்ற நான் பயந்த போது அமீர் சொன்னார். அது இன்று நிஜமாகியிருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் "பருத்தி வீரன்" முதல் ஷெட்யூல் முடித்து திரும்பும் வரை இந்தத் தயக்கமும் பயமும் இருந்தது. இரண்டாவது ஷெட்யூலில் அது விலகிவிட்டது.

அப்படி ஏன் தயங்கினீர்கள்?

அமீர் எதையும் வித்தியாசமாகச் செய்கிறவர். அதை எந்த சமரசத்துக்கும் இடமில்லாமல் பிடிவாதத்துடன் செய்து முடிப்பவர். ஆனால் "பருத்தி வீரன்" பற்றிப் பேசும் போது இதை இயற்கையான ஒளியில் அவெய்லபிள் லைட்டில் மட்டுமே எடுப்பது என்பதில் உறுதியாக இருந்தார். பாரதிராஜா சினிமாவை கிராமத்துக்கு அழைத்துச் சென்றார். அதைத் தாண்டி கிராமத்துக்குள் செல்ல வேண்டும் நாம் என்றார். ஆனால்.. எனக்கு இது பயமாக இருந்தது. எப்படி இதைச் செய்யப் போகிறோம் என்று பிரமிப்பாக இருந்தது. காரணம் அமீர் சொன்னதும் என்னிடம் எதிர்பார்த்ததும் அப்படி இருந்தது. அதுதான் என்னைப் பயமுறுத்தியது. நேரடி அனுபவத்தில் அதை உணரவும் செய்தேன். முழுக்க முழுக்க சூரிய ஒளியில் எடுப்பது என்ற முடிவோடு சென்றதால், லைட்ஸ், ஜெனரேட்டர், ரிப்ளெக்டர் எதுவும் எடுத்துச் செல்லவில்லை.

இயற்கை ஒளியில் எடுப்பது எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியமாக இருந்தது?

நாங்கள் எதிர்பார்த்தது ஒன்று. நடந்தது ஒன்று. வெயில் என்று எதிர்பார்த்த அன்று வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. அது மாறும் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. படம் முழுக்க ஒரு வறண்ட உணர்வைத் தர வேண்டும். அதற்காக சூரிய ஒளியையும் புல் பூண்டு அற்ற வறண்டு போன ஒரு பகுதியையும் தேர்ந்தெடுத்தோம். ஆனால் எங்கள் நேரம் மழை பெய்து அந்த பகுதியே சேறாக மாறிவிட்டது. அது காய்ந்து சரியாகும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இப்படி பெர்பெக்ஷனுக்காக நிறைய நேரம் காத்திருந்து செய்தோம். 150 நாட்களும் சூரிய ஒளியில் எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும்.

அமீரின் பெர்பெக்ஷனுக்கு ஏதாவது உதாரணம் சொல்ல முடியுமா?

முழுப்படமும் அப்படி ஒரு நேர்த்தியோடுதான் எடுத்தார். ஒரு பொட்டல் வெளியில். சினிமா பற்றி தெரியாத ஆட்களை வைத்து கொளுத்தும் வெளியில் எடுத்தார். இப்படி 12 நாட்கள். சரியில்லை என்றால் ரீமேக் எடுக்க தயங்கவே மாட்டார். இந்த வெயிலில் இந்த ஆள் எங்களை இப்படிப் படுத்துகிறாரே என்று வந்தவர்கள் வருத்தப்பட்டனர். ப்ரியாமணியை பொன்வண்ணன் அறைகிற காட்சி முழு அழுத்தத்துடன் வர வேண்டும் என்று 12 முறை எடுத்தார். ப்ரியா மணியின் கன்னம் என்ன பாடு பட்டிருக்கும். அதில் என்ன பிரச்சினை என்றால் அறைய கை நெருங்கும் போது ப்ரியாமணி கண்ணை மூடி விடுவார். அப்படியென்றால் அனிச்சையாக அறை விழப் போகிறது என்று தெரிகிறது. அப்படியானால் யதார்த்தம் அடிபட்டு விடுகிறது அல்லவா? கண்ணை மூடாமல் அறை விழும்வரை விடமாட்டேன் என்று 12 டேக் வரை போனது. தியேட்டரில் படம் பார்க்கும் போது காட்சியை மக்கள் ரசிக்கும் போது லயிக்கும் போது கைதட்டல் ஒசையின் நடுவே அன்று கன்னத்தில் விழுந்த அறைகளின் ஒசையும் எனக்கு சேர்ந்தே கேட்கிறது. இது போன்று அமீரின் பெர்பெக்ஷன் பற்றி நிறைய சொல்லலாம். அன்று இப்படி நிறைய கஷ்டப்பட்டது இன்று ரசிக்கப்படும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

செயற்கை ஒளியமைப்பில் ஒளிப்பதிவு செய்து இயற்கையான ஒளியில் ஒளிப்பதிவு செய்து எது சுலபம்?

நிச்சயமாக இன்டோரில் செயற்கையான ஒளியில் செய்துதான் சுலபம். ஏனெனில் இன்டோரில் லைட்ஸ்-அதாவது ஒளி நம் கையில். ஆனால் அவுட்டோரில் இயற்கையின் கையில். திடீரென நன்றாக இருக்கும் வெயிலை மேகம் மறைத்துவிடும். ஒளி குறைந்துவிடும். இப்படி காலை 9 மணி முதல் 11 மணி வரை வெயில் ஒளி குறையும் போது மறுநாள் அதே நேரம் வரும் வரை காத்திருப்போம். இது "பருத்தி வீரன்" அனுபவம். எனவே அவுட்டோர் லைட்.. சூரிய ஒளியில் ஒளிப்பதிவு செய்வது சிரமம்.

மறக்க முடியாத பாராட்டு என்று எதைக் கூறுவீர்கள்?

தமிழக முதல்வர் கலைஞர் "பருத்தி வீரன்" படம் பார்த்துவிட்டுச் சொன்னது "இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் எல்லாம் வீட்டுக்குள் இருக்கிறார்கள். கேமராவை கூரை மீது வைத்து எடுத்த மாதிரி இருக்கிறது.." என்று. இது விருது கிடைத்த மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். இப்படத்தில் சில வித்தியாசங்களைச் செய்திருக்கிறோம். படத்தின் கதையில் வன்முறை, பிடிவாதம், மூர்க்கக்குணம் கொண்டவர்கள், அவர்கள் சார்ந்த காட்சிகள் இருப்பதால் அதைக் கூட்ட சிபியா டோனை தேர்ந்தெடுத்து. செம்மை மஞ்சள் கலந்த மண்ணின் நிறமாகக் காட்டியிருப்போம். இதைப் பலரும் பாராட்டினார்கள். வெறும் சிப்பியா கலர் என்றால் ஏதோ பீரியட் பிலிம் போன்ற தோற்றம் வந்து விடும் என்று நினைத்து கொஞ்சம் சிவப்பைச் சேர்த்தோம். பல வர்ண ஜாலங்களை பிலிமை மாஸ்டர் எடுத்து டூப் எடுத்து கெமிக்கல் உதவியால் மாற்றிக் காட்டியிருக்கிறோம். இது டி.ஐ. பண்ணாமல் செய்த படம். இது பற்றி பலரும் என்னிடம் சந்தேகம் கேட்டனர். இது முழுக்க கெமிக்கல் செய்த சாகசம் என்று சொல்ல வேண்டும்.

தமிழில் அறிமுகமாகிவிட்டு வெளிமொழிக்கு சென்றுவிடுவது ஏன்? அதிகம் சம்பாதிக்கவா?

அப்படியெல்லாம் இல்லை. இந்தியில் சங்கீத் சிவன் இயக்கத்தில் மூன்று படங்கள் முடித்து இப்போது நான்காவது செய்கிறேன். அவர் குடும்பத்துடன் மும்பை வந்துவிடு. இங்கேயே செட்டிலாகிவிடலாம் என்றார். அந்த அளவுக்கு எங்களுக்குள் நல்ல புரிதல் வந்துவிட்டது. வருமானமும் பிரச்சினை இல்லை. இருந்தாலும் தமிழ்ப் படங்களில் பணியாற்றும் திருப்தியும் கிடைக்கும் அங்கீகாரமும் வேறு எங்கும் கிடைக்காது. எனவே முடியாது என்று சொல்லிவிட்டேன். என்றும் தமிழை விட்டுவிட்டு என்னால் வர முடியாது என்று சொன்னேன். இப்போது தமிழில் "தமிழ். எம்.ஏ." படத்திலும் சங்கீத் சிவனின் "அத து" படத்திலும் ஒளிப்பதிவு செய்கிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil