Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிப்பு அலுப்பதில்லை!-ரகுவரன்

Advertiesment
நடிப்பு அலுப்பதில்லை!-ரகுவரன்

Webdunia

தமிழ்ச் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர் ரகுவரவன். தமிழக திரையுலகின் எந்த தட்ப வெப்பமும் இவரைப் பாதித்ததில்லை. வணிகம் வாய்ப்பு என்கிற குறுகிய வட்டம் இவரை ஆக்கிரமித்ததில்லை. படங்கள் எப்போதும் தன்னைத் தேடி வரும் தகுதியை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். சில நேரம் வரிசையாகப் படங்கள், சில நேரம் ஆள் காணாமல் போய்விடுகிறார். ஏனிப்படி?

இனி ரகுவரன்..!

"இப்போ "தீபாவளி", "பீமா", "சிவாஜி" இருக்கு. எனக்கு நடிப்பு என்னைக்குமே அலுக்கிறதில்லை. நான் எங்கெங்கு சுற்றினாலும் புறப்பட்ட இடத்துக்கு வந்தாகணும். அப்படி வந்து சேர்ற இடம் சினிமா தவிர எனக்கு வேறு இடம் இல்லை. எப்பவும் யாராவது கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க. நீங்கதான் இந்த ரோலைப் பண்ணணும்பாங்க. நான் வேளை நம்பனா கூட விடமாட்டாங்க."

விலகி ஓடுவதன் காரணம் சினிமா போரடிக்கிறதா?

"இல்லை. எனக்குப் பொருத்தமா இருந்தால் பிடிக்குது. வற்புறுத்தலால் என்னைக் கண்வினிஸபண்ண முடியாது. என்னைப் பொறுத்த வரைக்கும் ஒரு கேரக்டர் பிடிச்சதுன்னா அதை நேசிக்க ஆரம்பிச்சுடுவேன். என்னைக் கேட்டால் நடிக்கிறது நல்ல அனுபவம். ஒரு கட்டம் வரை எனக்கு நடிப்பு ஒரு அடையாளமா இருந்திச்சு. இப்ப இதுவே அனுபவமா ஆகியிருக்கு. மறுபடியும் சொல்றேன். சினிமா எனக்கு அலுக்கலை. போரடிக்கலை. நான் சினிமாவுல மூழ்கிக் கிடக்கிறேன். சில நேரம் வெளியே வர்றேன். இந்த உள்ளே வெளியே விளையாட்டு அப்பப்போ நடக்குது. அது எப்படின்னா மனசுக்கும் புத்திக்கும் நடக்கும் போட்டி."

புரிகிற மாதிரி சொல்லுங்களேன்..?

"அதாவது மனசு சொல்றதை புத்தி கேட்கும் போதெல்லாம் நான் தொலைஞ்சு போயிருக்கேன். புத்தி சொல்றதை மனசு கேட்கும் போதெல்லாம் நான் திரும்பி மீண்டும் வந்திருக்கேன். இது புத்திக்கும் மனசுக்கும் நடக்கிற போட்டி. இதில் ரகுவரன்-அதாவது நான் ஜெயிக்கிறதும் இல்லை. தோல்வி அடையுறதும் இல்லை."

எந்த அடிப்படையில் படங்களைத் தேர்வு செய்கிறீர்கள்?

"கதை சொல்றப்போ இதுல நாம் நடிக்கணும்னு தோணும். தோண வைக்கணும். சரிதான் நாமதான் இதைப் பண்ணணும்னு மனசுக்குள்ள விழுந்துரும். உடனே மானசீகமா எனக்குள் இருக்கிற நடிகன் ஷீட்டிங் ஸ்பாட்டுக்குப் போய்டுவான். நடிக்கவும் ஆரம்பிச்சிடுவான். அப்படி ஒரு அனுபவம் தான் இப்ப நடிக்கிற படங்கள்ல கிடைச்சுட்டிருக்கு."

இப்போது என்னென்ன படங்களில் எப்படி நடிக்கிறீர்கள்?

"பீமா" படத்துல என் கேரக்டர் பெயர் "பெரியவர்". அந்தப் பெரியவர்கிட்டே சவால் விடறவர் விக்ரம். "ரன்" லிங்குசாமி வேற இப்ப "பீமா"வுல பார்க்கிறவர் வேற. வளர்ந்திருக்கார். விக்ரமும் அப்படித்தான். முன்னால என்கூட "உல்லாசம்" பிரியட்ல விக்ரமைப் பார்த்தேன். அவர் இப்போ உயரமா பிரமாதமா வளர்ந்திருக்கார். அவருக்குள் நெருப்பு இருக்கு. அப்புறம் "சிவாஜி". ரஜினி சார்தான் ரகு தான் இதைச் செய்யணும்னு என்னைக் கூப்பிட்டார். ஷங்கர் நுணுக்கமா செதுக்கிறார். என் கேரக்டர் பற்றி ரஜினி, ஷங்கர் பேசலாம். நான் இவ்வளவுதான் பேசலாம். இவ்வளவுதான் பேசமுடியும்.

ரஜினி-ரகுவரன் நட்பு எப்படி உள்ளது? சிவாஜி அனுபவம் எப்படி?

"ரஜினி அபூர்வமான மனிதர். நீங்க உங்களுக்கே நேர்மையா இருக்கிறது பெரிய சவால். ரஜினி அந்த சவாலை ஜெயிச்ச மனிதர். பணம் புகழ் அதிகாரம் இதெல்லாம் அவரை ஒண்ணும் செய்யாமல் நிதானமா இருக்காரே அது பெரிய விஷயம். ரஜினியை ரெண்டு விதமா பார்த்தவன் அப்போ பரபரப்பா இருந்தவர் அவர். இன்னைக்கு பக்குவமா ஆகியிருக்கார். ஆழ்கடல் மாதிரி அமைதியான ரஜினி இப்போ இருக்கிறவர். நடிப்பு, சினிமா தவிர அவரையும் என்னையும் இணைக்கிற பாலமா ஆன்மீகம் இருக்கு. கடவுள், தியானம், வாழ்க்கையைப் பற்றி அவரோட பார்வை என்னை ஆச்சரியப்பட வைக்குது. எனக்கும் அவருக்கும் இடையில் சொல்லி விளக்க முடியாத அலைவரிசை இரந்துகிட்டே இருக்கும். அது பிறருக்கு புரிபடாது. நானும் அவரும் பீல்டுக்கு வந்து 25 வருஷம் ஆகுது. நான் இந்த வாழ்க்கைல நிறைய தவறவிட்டிருக்கேன். ஆனா ரஜினி எதையும் தவறவிடாமல் உழைக்கிறவர். அவரை ஜெயிக்க இங்கே ஆளில்லை."

நிறைய ஆன்மீகம், தத்துவம் என்று பேசுகிறீர்களே..?

"தனிமையில் மத்தவங்களைத் தேடுறேன். எனக்குள்ளேயும் என்னைத் தேடுறேன். சிலதை நினைச்சால் கனவு மாதிரி இருக்கு. இதெல்லாம் கூட நடந்துச்சான்னு ஆச்சரியமா இருக்கும். சத்தியமா நம்ப முடியாது. நினைவு மட்டும் நிஜம் போல நிக்குது. உலகத்தை சுற்றுப் புறத்தை உற்றுப் பார்த்துக் கத்துக்கறேன். தனிமை சிலரை கெட்டவங்களா மாத்திடும். ஆனா என்னை அழகா செதுக்கியிருக்கு, சோகம், துக்கம், விரக்தி, அயர்ச்சி எல்லாத்தையும் தூக்கி வீசக் கத்துக்கிட்டேன். என் உலகத்தை சந்தோஷமா மாத்திக்கிற வித்தையைக் கத்துக்கிட்டேன். என் அப்பா அம்மாவை நினைச்சால் கண்ணீர் உடையுது. இப்போ அவங்க கூடவே இருக்கேன். என் பையன் ரிஷி எப்பவும் எனக்கு அவன் ஞாபகம் தான். என் உலகத்தை உற்சாகமா அற்புதமாக்குறவன் ரிஷி. அப்புறம் என்னை அன்பால ஆசீர்வதிக்கிற, அரவணைச்சுக்கற சாய்பாபா இருக்கார். அந்த உற்சாகத்துலதான் உலகத்து மேல இருக்கிற என் அன்பை வெளிப்படுத்துற மாதிரி நானே பாட்டெழுதி இசை அமைச்சு ஒரு ஆல்பம் ரெடி பண்றேன். என் அனுபவங்களை புத்தகமா கூட எழுதுறேன். பார்க்கலாம்."

Share this Story:

Follow Webdunia tamil