Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் மாறிவிட்டேனா?-சேரன்

Advertiesment
நான் மாறிவிட்டேனா?-சேரன்

Webdunia

சினிமாவைத் தொழிலாகக் கருதி லாப நஷ்ட நோக்கத்தில் செயல்படுவோர் மத்தியில் சினிமாவை ஒரு தவமாகக் கருதுகிறவர் இயக்குநர் சேரன். கிடைக்கிற முன்பணத்தை எல்லாம் வாங்கிக் கொண்டு கால்ஷீட் தர முடியாமல் "போன்ஸை" உயர்த்திக் கொண்டு கால்ஷீட் தர முடியாமல் "போன்ஸ்" செய்ய முடியாமல் தவிப்பது சேரனுக்குப் பிடிக்காது. ஒரு படத்தில் பணிபுரிவது என்பது கடலில் முத்தெடுப்பது போன்றது அவருக்கு. ஆழமாக முக்குளித்து முத்தெடுத்து விட்டுத்தான் மேலே வருவார். இப்படித்தான் இப்போது "மாயக் கண்ணாடி"யில்ல மூழ்கிக் கிடக்கிறார் சேரன். படத்துக்கான எண்ணம் தோற்றம் என எல்லா வகையிலும் ஆள் மாறியிருக்கிறார்.

இனி அவருடன்..!

அது என்ன மாயக் கண்ணாடி..?

"கண்ணாடி இருக்கிறதை பிரதிபலிக்கிறது. அதாவது முன்னே இருக்கிற உருவம் அதில் பிம்பமாத் தெரியும். மாயக் கண்ணாடியில் பிம்பம் வேறு விதமாத் தெரியும். வாழ்க்கை பல பேருக்கு இன்னும் புரியாம இருக்கு. அதை புரிய வைக்கிற முயற்சிதான் இது. நகர மக்கள் வாழ்க்கையின் யதார்த்தம்-உணர்வுகளை படத்தில் காட்டியிருக்கேன். உயர்தட்டு மக்கள் வாழ்க்கை நடுத்தர மக்களை எப்படி பாதிக்குது. அவர்களைப் பார்த்து ஆசைப்பட்டு நிறைவேற முடியாம இவங்க தவிக்கிற தவிப்பு இழக்கிற நிம்மதி சந்திக்கிற மன உளைச்சல் சாகடிக்கிற சந்தோஷம் இதையெல்லாம் சொல்லியிருக்கேன் இப்ப புரியுதா... கண்ணாடியின் பிம்பத்தை நம்பலாம். மாயக் கண்ணாடியோட பிம்பத்தை நம்பக்கூடாது. அது நிஜமல்ல. பொய்ப் பிரதிபலிப்பு. அது மாதிரி யதார்த்தத்தை உணர வைக்கிற முயற்சிதான் இந்தப் படம்."

இந்தப் படத்துக்காக நவீனமான முடியலங்காரம், உடைகள் என்றும் வெளிநாட்டுப் படப்பிடிப்பு என்றும் ஆடம்பரமாக இருக்கிறீர்கள். இது கதாநாயகனாக நிலைக்க வேண்டும் என்பதற்காகவா?

"நீங்க சொல்ற காரணமெல்லாம் கிடையாது. கதைக்கு அந்த கேரக்டருக்குத் தேவைன்னு தோணிச்சு. அதனால்தான் இந்த செட் அப் பலரின் ஷீட்டிங் எல்லாமே. கதாபாத்திரம் எதைக் கேட்குதோ அதைத்தான் என் படங்களில் செய்றேன். இந்தப் படத்தின் நாயகன் குமார். அவன் நாம நடிகனா ஆனா வெளிநாட்டுல ஆடலாம் பாடலாம்னு கற்பனை பண்றான். இது இயல்பா எல்லாருக்கும் வர்ற கற்பனை, கனவு. அதைக் காட்டவே பாடல் காட்சிகளை வெளிநாட்டுல எடுத்திருக்கோம். மற்றபடி நான் ஒரு படைப்பாளின்னு சொல்லிக்கிறதுலதான் பெருமைப்படறேன். என் முக்கியமான முதன்மையான இலக்கு டைரக்ஷன்தான். அதனாலதான் இப்ப எனக்கு கிடைச்சிருக்கிற பெயரும் புகழும் வந்திருக்குன்னு உறுதியா நம்புறேன்."

உங்களுக்கு இருக்கும் வெற்றிக்கு எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி எண்ணிக்கையில் படங்கள் செய்வதில்லையே ஏன்?

"எனக்கு எண்ணிக்கை முக்கியமில்லை. மனதிருப்திதான் முக்கியம். யார் யாரோ எத்தனையோ படங்கள் பண்றாங்க. கமர்ஷியலா ஜெயிக்கிறாங்கன்னா அதைப் பற்றி நான் கவலைப்படறதில்லை. பொறாமைப் படறதில்லை. அது அவங்க வாழ்க்கைப் பாதை. அதுல அவங்க போறாங்க. கமர்ஷியல் படங்கள் ஜெயிக்கிறது எல்லாக் காலத்திலும் இருந்திருக்கு. அது அப்பப்போ அந்தந்த காலக் கட்டத்துல மட்டும் பேசப்பட்டிருக்கு. ஆனால் ஆழமான கதைகளுக்கு கிடைக்கிற வெற்றி காலம் கடந்தும் நிற்கும். என் படங்கள் எப்பவும் பேசப்படறதா இருக்கணும்னு நினைக்கிறேன்."

அப்படியானால் வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்கிற எண்ணம் இல்லையா?

"எனக்கு இருக்கிற இந்த வாழ்க்கையே போதும். திருப்தியா இருக்கு. இப்படித்தான் படம் எடுக்கணும். நம்ம படங்கள் பேசப்படணும்கிறதே என் விருப்பம், ஆசை எல்லாம். இந்தப் பாதையும் பயணமும் நான் தீர்மானிச்சது. இதுல பயணப்படறமுல போராட்டம் இருக்கலாம். தடைகள் இருக்கலாம். வலிகளும் இருக்கும். ஆனாலும் இதுதான் என் பாதை. இதுல போறதுதான் சுகமா இருக்கு. திருப்தியாவும் இருக்கு."


இப்போதெல்லாம் ஆக்ஷன் படங்களும் "ரீமேக்" படங்களும்தான் தமிழில் அதிகம் வருகின்றன. உங்களை மாதிரி ஆழமான கதைகளை விரும்பும் தீவிரவாதிகள் இப்போது இல்லாமல் போய்விட்டார்களே..?

"என்றைக்குமே தமிழ்ச் சினிமா நல்ல பெயரோடு தான் இருக்கு. இங்கிருந்து போன் நம் கலைஞர்கள், தீவிரமா சினிமாவை நேசிக்கிற போராளிகள் வெளிமொழிகளில் பிரகாசிக்கறாங்க. ஏன் இந்தியா எங்குமே கலக்குறாங்க. அந்தக் காலத்துல பீம்சிங், திருலோகசந்தர், பந்துலுன்னு இரந்தாங்க. பிறகு பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன்னு வந்தாங்க. இப்படி ஒவ்வொரு காலக்கட்டத்துல சினிமாப் போராளிகள் வந்திருக்காங்க. இன்னமும் கூட இப்படிப் பட்டவங்க வரலாம். ஆனா இப்ப உலகமே சுருங்கிப் போச்சு. உலக மயமாக்கல் புகுந்து கலக்குது. எல்லா விஷயங்களும் எல்லாருக்கும் என்கிற போக்கு இருக்கு. இதுக்கேத்த மாதிரி படமெடுக்கணும்கிற எண்ணம் எல்லாருக்கும் வந்திருக்கு. கமர்ஷியல் சினிமா, மசாலாப் படங்கள்னு இப்போ போகலாம். அதே சமயம் யதார்த்த சினிமா சிந்தனையும் இருக்கத்தான் செய்யுது. இயல்பான கதைகள் தேடுற நாட்டமும் இருக்குறதை மறுக்க முடியாது. தமிழ் சினிமா என்னைக்குமே தரங்கெட்டு தறிகெட்டு போய்விடாது."

சேரன் பற்றி வரும் கிசுகிசுக்கள் பற்றி..? அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது ஏன்?

"நான் சினிமாவுக்கு வந்தது சாதிக்கணும்கிற நோக்கத்துல. இதுமாதிரி அல்பமான குறுகிய நோக்கத்துல கிளப்பிவிடற கிசுகிசுக்களால என்னை இடையூறு செய்ய முடியாது. இதைப் பற்றி நான் கவலைப்பட்டால் நான் சாதாரணமானவன். இதற்கு விரிவா விளக்கம் கொடுத்து என் நேரத்தை வீணாக்கவும் விரும்பலை. வாழ்க்கைங்கிறதே எதிர்ப்புகள், தடைகள், முட்டுக்கட்டைகள் இதையெல்லாம் தாண்டி ஜெயிக்கிறதுலதான் இருக்கு. நான் யார்னு என் குடும்பத்தினருக்குத் தெரியும். அது போதும் எனக்கு."

"சர்ச்சைன்னு சொல்றாங்க. நான் சொல்றது சில நேரம் சர்ச்சையாகுது. நான் கிராமத்துல இருந்து வந்தவன். எனக்கு பூடகமா பேசத் தெரியாது. பொடி வச்சிப் பேசத் தெரியாது. மனசுல ஒண்ணு வச்சி பேசவும் தெரியாது. யதார்த்தமா இருக்கிறவன். பேசறவன் நான். அதனால நான் இயல்பா சொல்ற விஷயம் கூட குதர்க்கமா பார்க்கப்படுது. இதனால பல நேரம் மௌனமா இருக்க வேண்டி இருக்கு. நான் உணர்ச்சி மயமானவன். எனக்கு நடிக்கத் தெரியாது நிஜ வாழ்க்கைல. ஆனா அப்படி நடிக்கிறதுதான் இங்கே பல பேருக்குப் பிடிச்சிருக்கு. என்னால அப்படி நடிக்க முடியாது. பொய் பேசத் தெரியாது. அதுக்செல்லாம் திறமை வேணும். அந்தத் திறமையும் சாதுர்யமும் எனக்கில்லை."

தமிழக அரசின் படங்களுக்கான வரிவிலக்கு திரையரங்குக் கட்டணக் குறைப்பு பற்றி..?

"நல்ல விஷயம்தான். வரிவிலக்கு கொடுத்ததால பல படங்களுக்கு லாபம். இது ஆரோக்கியமான விஷயம். அதேபோல டிக்கெட் விலையை குறைச்சதும் நல்ல விஷயம்தான்."

வரிவிலக்கு, கட்டணக் குறைப்பு வந்துவிட்டன. சம்பளக் குறைப்பு மட்டும் வரவில்லையே..?

"இந்த சலுகைகளை எப்படி எல்லாருக்கும் பயன்படுற மாதிரி செய்றது? இதற்கு எல்லாரும் உட்கார்ந்து பேசணும். திறந்த மனசோடு ஈகோவுக்கு இடம் கொடுக்காம உட்கார்ந்து வெளிப்படையா பேசி முடிவெடுக்கணும். கஷ்டப்பட்டு படிச்சு முன்னேறியவங்க, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிச்சவங்களுக்கெல்லாம் என்ன சம்பளம் சினிமாவில இருக்கிறவங்களுக்கு எவ்வளவு சம்பளம்னு யோசிக்கணும். மக்கள் பணத்தால்தான் நமக்கு இவ்வளவு வசதிகள்னு தெரியணும். சிக்கனமா படமெடுக்கிறதைப் பற்றி கூடிப் பேசி முடிவெடுக்கணும். அடுத்த என் படத்துல சம்பளத்தைக் குறைச்சிட்டேன். சிக்கனமா படமெடுப்பேன். நான் மாறிட்டேன். அவ்வளவுதான்."


Share this Story:

Follow Webdunia tamil