உற்சாகமாக இருக்கிறார் விஜய். "போக்கிரி"யின் வெற்றி அவருக்கு கூடுதல் தெம்பை வழங்கியிருக்கிறது. ஆனாலும் வெற்றியை ஆரவாரம் செய்யாமல் அடக்கமாகவே வெளிப்படுத்துகிறார்.
அதுதான் விஜய்! இனி அவருடன் பேசுவோம்.
ஒருபடம் முடிந்ததும் உங்கள் அடுத்த பட அறிவிப்பு விரைவில் வந்துவிடும். "ஆதி"க்குப் பிறகு "போக்கிரி" அறிவிக்க ஏன் தாமதமானது?
சரியான கதை அமையாததுதான் காரணம். நிறைய கதைகள் கேட்டேன். ஏன் போன ஆண்டு ஆறேழு மாதங்கள் கதை கேட்டேன். அப்போது மகேஷ் பாபு நடித்த போக்கிரி தெலுங்குப் படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்தது.
எனக்கு ரொம்பவும் பொருத்தமான கதையாகப்பட்டது. அதைத் தமிழில் செய்யலாம் என்று முடிவெடுத்தோம்.
சமீபகாலமாக ரீமேக் படங்களில் ஆர்வம் காட்டுகிறீர்களே...?
கதை விஷயத்தில் இதைப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்பது என் கருத்து. எங்கு நல்ல கதை நமக்கு ஏற்ற மாதிரியான கதை இருக்கிறதோ, அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. ரீமேக் தமிழிலிருந்தும் வேறு மொழிகளுக்கு போகிறது. அதேபோல் தான் நமக்கும். போக்கிரியின் தேர்வும் அப்படித்தான். அது சரிதான் என்பதை பட வெற்றி காட்டுகிறது அல்லவா?
நான் ரீமேக் கதைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பதாக நினைப்பது தவறு. எனக்கேற்ற மாதிரி எங்கிருந்து கதை வந்தாலும் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. இப்போதைய "அழகிய தமிழ்மகன்" நேரடித் தமிழ்ப்படம் தான்.
பிரபுதேவாவுடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது? சுலபமாக இருந்தது என்று கூற முடியுமா...?
ரொம்ப கடினமாக இருந்தது. அவர் எளிதில் திருப்தியடையமாட்டார். அவரது பார்வை வித்தியாசமாக இருக்கும். அதுதான் சிரமமாகத் தெரியும் மற்றவர்களுக்கு. "போக்கிரி" அனுபவமும் அப்படித்தான். நடிக்கும் போது கஷ்டமாகத் தெரிந்தது. படம் முடித்து பார்த்தபோது பிடித்தது. வெற்றி பெற்ற போது எல்லாம் மறந்துவிட்டது. சந்தோஷம் மட்டுமே இருக்கிறது.
மீண்டும் பிரபுதேவாவுடன் இணைவீர்களா?
இப்போது அவரைப் புரிந்து கொண்டு விட்டேன். சரியானபடி அண்டர்ஸ்டான்டிங் வந்து விட்டது. மீண்டும் எங்கள் காம்பினேஷனுக்குப் பொருத்தமான வாய்ப்பு வந்தால் நிச்சயம் அவருடன் பணியாற்றத் தயாராக இருக்கிறேன். அவர்தான் தெலுங்கில் பிஸியாக இருக்கிறார்.
விஜய் என்றால் ஆக்ஷன் படங்கள் என்றாகி விட்டதே...?
அதிலென்ன தப்பு? எல்லாரும் ஆக்ஷன் ஹீரோவாக வேண்டும் என்று தானே விரும்புகிறார்கள். உலக அளவில் பிரபலமாக இருக்கும் ஹீரோக்கள் எல்லாரும் ஆக்ஷன் ஹீரோக்கள்தான். பெரிய அளவில் வெற்றி பெற்ற படங்களும் ஆக்ஷன் படங்கள்தான்.
இது குறுகிய வட்டம் இல்லையா?
சினிமாவில் நுழைந்தபோதே ஆக்ஷன் ஹீரோ ஆகவேண்டும் என்பதுதான் என் ஆசை. விரும்பிய இடத்துக்குத் தான் நான் இப்போது வந்திருக்கிறேன். ஆரம்பத்தில் நான் கண்ட கனவு இப்போதுதான் நிறைவேறி இருக்கிறது. இது குறுகிய வட்டம் என்று சொல்ல முடியாது. ஆக்ஷன் படங்களிலும் கதை இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன்.
அஜீத், சூர்யா போன்ற ஹீரோக்களின் படங்கள் தெலுங்கில் "டப்" செய்யப்பட்டு வெற்றி பெறுகின்றன... உங்கள் "அழகிய தமிழ்மகன்" டப் செய்யப்படுமா?
"அழகிய தமிழ்மகன்" நேரடி தமிழ்ப்படம். இது மட்டும் தான் எனக்குத் தெரியும். தெரியாத விஷயத்தைப் பற்றிக் கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியுமா?