Publish Date: Fri, 06 Feb 2009 (12:38 IST)
Updated Date: Fri, 06 Feb 2009 (12:36 IST)
சிங் இஸ் கிங் படத்துக்குப் பிறகு பாலிவுட்டின் கிங் அக்சய் குமார்தான். இவரது படத்துக்கு கோடிகளை செலவளிக்க தயாரிப்பாளர்கள் எப்போதும் தயார்.
சமீபத்தில் வெளியான இவரது சாந்தினி சவுக் டூ சைனா எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஓபனிங்கைப் பொறுத்தவரை கஜினி உள்பட எந்த இந்திப் படத்துக்கும் சளைக்கவில்லை. வெளிநாடுகளிலும் நல்ல வசூல்.
துரதிர்ஷ்டமாக படத்தின் வசூல் இரண்டாவது வாரத்தில் சடசடவென சரிந்தது. சிங் இஸ் கிங் வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் அதைவிட குறைவாகவே வசூலித்தது. இந்த சரிவு அக்சயின் இமேஜை கடுகளவும் பாதிக்கவில்லை.
மேலும், மும்பை தீவிரவாதிகளை வெறும் கத்தியை வைத்து எதிர்கொண்டு வீர மரணம் எய்திய மும்பை காவலர் துக்காராமின் குடும்பத்துக்கு ஐந்து லட்சம் நிதி கொடுத்து உதவியுள்ளார் அக்சய். அவரது இரு மகள்களின் படிப்பு செலவையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
மும்பை தீவிரவாத தாக்குதல் ஏற்படுத்திய பரபரப்பு ஓய்ந்த பிறகு இந்த உதவிகளை அவர் செய்திருப்பது அக்சய் மீதான மதிப்பை உயர்த்தியிருக்கிறது.