மும்பை: ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் அயல்நாட்டுப் படங்களின் பட்டியலில், ஹிந்தித் திரைப்படமான ‘தாரே ஜமீன் பர்’ இடம்பெற்றுள்ளது.81
வது ஆஸ்கார் விருது விழா அடுத்தாண்டு பிப்ரவரி 22ஆம் தேதி நடக்கிறது. இதில் சிறந்த அயல்நாட்டு படங்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்படும். இதற்காக இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டுள்ள அயல்நாட்டுப் படங்களில் பாலிவுட் நடிகர் அமீர்கான் இயக்கி நடித்த ‘தாரே ஜமீன் பர்’ படம் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் சார்பில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் படங்களை தேர்வு செய்வதற்கான இந்திய திரைப்பட கூட்டமைப்பின் கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. திரைப்பட தயாரிப்பாளர் சுனீல் தர்ஷன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் விருதுக்கு அனுப்பப்பட இருந்த 9 படங்களில் இருந்து, ‘தாரே ஜமீன் பர்’ படத்தை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
அமோல் குப்தா எழுதிய கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தாரே ஜமீன் பர் படம் கடந்த 2007இல் வெளியானது. இதில் சிறப்பாக நடித்த சிறுவன் தர்சிலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை சமீபத்தில் டெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் வழங்கினார்.
ஆஸ்கார் விருதுக்கு அமீர்கான் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது இது 2வது முறையாகும். கடந்த 2001இல் அமீர்கான் நடித்த ‘லகான்’ படம் சிறந்த அயல்நாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதின் இறுதிச்சுற்று வரை சென்றது நினைவில் கொள்ளத்தக்கது.