இணைய தளத்தில் தங்களுக்கென்று பிளாக் தொடங்குவது சினிமா நட்சத்திரங்கள் இடையில் பிரபலமாகி வருகிறது. ரசிகர்களுடன் நெருக்கத்தை உருவாக்க பிளாக்குகள் உதவுவதாக நடிகர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனாலும், பல நடிகர்கள் பிளாக்குகளை எழுதுவதோடு சரி. எதுவும் எழுதுவதில்லை. அமீர்கான் அப்படி அல்ல.
தனது நாய்க்கு ஷாரூக்கான் என்று பெயர் வைத்தது முதல் பல்வேறு விடயங்களை பிளாக் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். சச்சினுடன் ஐ.பி.எல். டுவென்டி 20 ஃபைனல் பார்த்த அனுபவம் சமீபத்திய பதிவு.
நல்லவேளையாக இதில் சர்ச்சைக்குரிய எதுவுமில்லை. பந்து வீச்சாளர் அது யாராக இருந்தாலும், அவர் எந்த மாதிரிப் பந்து வீசுவார் என சச்சின் கணித்துச் சொன்னது தன்னை பிரமிக்க வைத்தது என்று வியந்துள்ளார் அமீர்கான்.
போட்டி முடிந்ததும், ஒருமுறை தன்னுடன் படம் பார்க்க வரவேண்டும் என சச்சினுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அமீர்கான். கூடவே படம் பார்க்கும்போது அடுத்து என்ன காட்சி வரும் என்று சொல்லி உங்களை ஆச்சரியப்படுத்துகிறேன் என்றிருக்கிறார்.
சச்சின் அமீர்கானுடன் படம் பார்த்து, அந்த அனுபவத்தை எழுதினால் அதுவும் சுவாரசியமாகவே இருக்கும்.