'அபு கிரைப்' நினைவிருக்கிறதா? ஈராக்கில் உள்ள சிறைக்கூடம். அமைதியை தவழவிடப் போகிறேன் என்று அடாவடியாக ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா, ஈராக் கைதிகளை ஆட்டு மந்தைகளைப் போல் அடைத்து வைத்த இடம்தான் அபு கிரைப் சிறை.
இங்கு கைதிகள் நிர்வாணமாக்கப்பட்டு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதைக்குள்ளாவது பத்திரிகைகளில் படங்களாக வெளிவந்து, அமெரிக்காவின் அமைதி முகமூடியை கிழித்தது. ஐ.நா. இந்தச் செயல்களுக்கு கண்டன அறிக்கை வெளியிட்டது.
கைதிகள் மீது கட்டவிழ்க்கப்பட்ட இந்த நிகழ்வை ஆவணப் படமாக்கியிருக்கிறார் ஹாலிவுட் இயக்குனர் Errol Morris. சின்னச் சின்ன வீடியோக்களாவும், புகைப்படங்களாகவும், செய்திகளாகவும் வெளிவந்த 'அபு கிரைப்' வன்முறையை தொகுத்து இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் பெர்லினில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் இப்படம் இடம் பிடித்துள்ளது. பெர்லின் திரைப்பட விழா வரலாற்றில் ஒரு ஆவணப்படம் போட்டிப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை. படத்தைப் பார்த்த திரைப்பட விழா நிர்வாகிகளை படம் உலுக்கி விட்டதாம். இந்த வருட பெர்லின் திரைப்பட விழாவின் மையமாக இப்படம் இருக்கும் என்பது அவர்கள் கருத்து.