நான்காவது நார்வே தமிழ் திரைப்பட விழா
Publish Date: Fri, 25 Jan 2013 (19:33 IST)
Updated Date: Fri, 25 Jan 2013 (19:33 IST)
நார்வே தமிழ் திரைப்பட விழா கடந்த மூன்றாண்டுகளாக நடந்து வருகிறது. தமிழ் திரைத்துறையினருக்கு இது முக்கியமான திரைப்பட விழா. தமிழ் இயக்குனர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வதும் ரசிகர்களுடன் கலந்துரையாடுவதும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. நான்காவது நார்வே தமிழ் திரைப்பட விழா இந்த ஆண்டு நடக்கிறது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மதியம் ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் நடந்தது.இந்தமுறை சற்று விசேஷம். ஐரோப்பாவிலுள்ள லண்டன், ஆஸ்லோ, பெர்லின் ஆகிய நகரங்களில் இந்த விழா நடக்கிறது. முன்பு ஒரே நகரத்தில்தான் இந்த விழா நடந்து வந்தது.ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் திரையிட பதினைந்து படங்கள் தேர்வாகியுள்ளன. அவை...நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புதுமுகங்கள் தேவை, மோனி, சுந்தரபாண்டியன், நீர்ப்பறவை, வழக்கு எண், பீட்சா, ஒரு கல் ஒரு கண்ணாடி, கும்கி, ராட்டினம், சாட்டை. அட்டக்கத்தி. இவை தவிர கனடாவில் தயாரான சகாராப்பூக்கள், இலங்கையில் தயாரான இனி அவன், ஆஸ்திரேலியாவில் உருவான இனியவளே காத்திருப்பேன் ஆகிய படங்களும் திரையிடப்படுகின்றன.