விஜய்யின் ஐம்பதாவது படத்தை யார் இயக்குவது என்ற குழப்பம் தொடர்கிறது.
காதலுக்கு மரியாதை படத்தை தயாரித்த சங்கிலி முருகன், விஜய்யின் ஐம்பதாவது படத்தை தயாரிக்கிறார். இயக்குனர் எஸ்.பி. ராஜ்குமார் சொன்ன கதை பிடித்துப்போக, அதையே படமாக்குவது என முடிவு செய்துள்ளனர். கதை தயார், தயாரிப்பாளர் ரெடி! இயக்குனர்...?
விஜய்க்கு திருப்பாச்சி, சிவகாசி என இரண்டு வெற்றிப் படங்களைத் தந்த பேரரசிடம் ஐம்பதாவது படத்தை இயக்கித் தரும்படி கேட்கப்பட்டது. சிவகாசி வெற்றிக்குப் பிறகு திருப்பதி, தருமபுரி, திருவண்ணாமலை என மூன்று தொடர் தோல்விகள் கொடுத்தார் பேரரசு. இறுதியாக வெளியான பழனியும் பாதி கிணறே தாண்டியது.
இந்நிலையில், விஜய் படத்தை இயக்க ஒரு கோடி சம்பளம் கேட்டு திகைக்க வைத்துள்ளார் பேரரசு. முப்பது, நாற்பது லட்சங்களில் முடித்துவிடலாம் என்றிருந்தவர்களுக்கு அதிர்ச்சி!
கதை தயாராக இருப்பதால் தானே படத்தை இயக்கினால் என்ன என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் தூண்டில் போட்டிருக்கிறார். சமீபத்திய அவரது சினிமா ரிக்கார்டுகள் சரியில்லை என்பதால் ஒரு கோடியா, எஸ்.ஏ.சி.யா என்ற குழப்பத்தில் உள்ளது தயாரிப்பாளர் தரப்பு.