வைத்தீஸ்வரன், கூடல் நகர் என தொடர்ந்து தோல்விகளைத் சந்தித்த அண்ணாமலை பிலிம்ஸின் நம்பிக்கை நட்சத்திரம், வெடிகுண்டு முருகேசன்.
கருப்பசாமி குத்தகைதாரர் படத்தை இயக்கிய ஏ.ஜி. மூர்த்தியின் அடுத்த முழுநீள காமெடி சித்திரம். நகைச்சுவையில் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள் ஹீரோ பசுபதியும் இன்னொரு ஹீரோ வடிவேலுவும். போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் ஜோதிர்மயியே காமெடியில் பட்டாசு கொளுத்தியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பசுபதி மினி பஸ் டிரைவராக நடித்திருக்கிறார். பஸ்ஸிலேயே ஒரு பாடல் இருக்கிறது. கிராமியம் கமழும் அந்தப் பாடல் 2009-ன் டாப் டென்னில் நிச்சயம் இடம்பிடிக்கும். அப்படியொரு இசை. உபயம் தினா.
படம் நன்றாக வந்திருப்பதால் அண்ணாமலை பிலிம்ஸே சொந்தமாக படத்தை வெளியிடுகிறது. பூஜையின் போதே படத்தின் வெளிநாட்டு உரிமையை போட்டி போட்டு வாங்கியது குறிப்பிட வேண்டிய விஷயம்.
இரட்டை அர்த்தம், ஆபாசம் தவிர்த்த நகைச்சுவை என்பதால் சிரித்துக் கொண்டே சேதாரமில்லாமல் யூ சான்றிதழ் அளித்திருக்கிறது தணிக்கைக் குழு. இம்மாதம் திரைக்கு வருகிறது, வெடிகுண்டு முருகேசன்!