திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் நேற்று சென்னை பிலிம் சேம்பரில் தொடர்முழக்க போராட்டம் நடந்தது. தமிழ் இன உணர்வுள்ள அமைப்புகள், மாணவர் அமைப்புகள், வழக்குரைஞர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினர் இந்தப் போராட்டத்தில் பெரும் திரளென கலந்து கொண்டனர்.
உணர்ச்சி கொந்தளிப்பு என்பார்களே... அதனை நேற்று பிலிம் சேம்பரில் கண்கூடாக பார்க்க முடிந்தது. தமிழ் சினிமாவின் அனைத்து இயக்குனர்களும் இந்தப் போராட்டத்துக்கு திரண்டு வந்திருந்தனர். இனவுணர்வுள்ள நடிகர்கள் சத்யராஜ், வடிவேலு, கஞ்சா கருப்பு, நடிகைகள் ரோகிணி, புவனேஸ்வரி, பாடலாசிரியர்கள் புலமைபித்தன், தாமரை, சினேகன் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், பெப்ஸி தொழிலாளர்கள்,நிர்வாகிகள் என அந்தப் பகுதியே தமிழின உணர்வாளர்களால் நிரம்பியிருந்தது.
கூட்டத்தில் பேசிய சத்யராஜ், ஈழம் ஏதோ நாடல்ல, நம்நாடு என்றார். தமிழனை வாழவிடு, தமிழன் வாழ்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடு, இல்லையேல் எங்களை தனியாக விடு என்று ஆவேசப்பட்டார் இயக்குனர் சேரன்.
இலங்கையில் யுத்தத்தை நிறுத்துவற்குப் பதிலாக கொல்லைப்புறம் வழியாக ஆயுதங்கள் கொடுத்து இந்தியா தமிழர்களை அழிக்கிறது என்று குற்றம்சாட்டிய பாரதிராஜா, இது மன்னிக்க முடியாத துரோகம் என்றார்.
போர் நிறுத்தத்தை ஏற்படுத்தாமல் மன்மோகன் சிங்கோ, சோனியாவோ, பிரணாப் முகர்ஜியோ தமிழகத்துக்கு வரக்கூடாது. மீறி வந்தால் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், ஓட்டுக் கேட்டு வருகிறவர்களை எல்லா வழிகளிலும் துரத்தியடிப்பது, காங்கிரஸின் தமிழக தலைவர்கள் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சிதம்பரம் ஆகிய தமிழின துரோகிகள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு எதிராக திரையுலகினர் பிரச்சாரம் செய்வது ஆகிய தீர்மானங்கள் நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
தனக்கு மத்திய அரசு தந்த பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புவதாக தெரிவித்தார் பாரதிராஜா. அதனை உடைத்து எறியுங்கள் என கூட்டத்தினர் ஆவேசப்பட்டனர். உடைத்தால் அந்த செய்தி இருட்டடிப்பு செய்யப்படும், அதனால் திருப்பி அனுப்புங்கள் என்று இயக்குனர் அமீர் கூறியதைத் தொடர்ந்து விருதை திருப்பி அனுப்புவதென முடிவு செய்தனர்.
நேற்று திரையுலகமும், பொதுமக்களும் திரண்டு நடத்திய இந்த தொடர்முழக்க போரட்டத்தையொட்டி சில சம்பவங்கள்…
ஒட்டு மொத்த தமிழகமும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும், போரை இந்தியாதான் நடத்திக் கொண்டிருக்கிறது என குமுறிக் கொண்டிருந்த நேரத்தில், தமிழகத்தில் ஈழப் பிரச்சனை பற்றி பொதுமக்கள் யாரும் கவலைப்படவில்லை, பிரபாகரனும், விடுதலைப்புலிகளும் தீவிரவாதிகள் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் என ஆங்கில தொலைக்காட்சியில் உளறிக் கொண்டிருந்தார் இந்து ராம்.
நடிகர்களின் நாய் காணாமல் போனாலே நாலு காலத்தில் செய்தி வெளியிடும் பத்திரிகைகள், உணர்ச்சி கொந்தளிப்பான இந்த போராட்டத்தைப் பற்றி செய்தியே வெளியிடவில்லை. வெறிச்சோடிய வீதிகளை படம் பிடித்த தொலைக்காட்சி கேமராக்கள், இந்தக் கூட்டத்தின் பக்கம் திரும்பக்கூட இல்லை.
தமிழின துரோகிகளை நேற்றைய நிகழ்வு படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. தமிழினமே உஷார்.