Publish Date: Tue, 03 Feb 2009 (16:06 IST)
Updated Date: Tue, 03 Feb 2009 (16:05 IST)
அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு என தொடர்ந்து மூன்று சுமார் படங்கள். அடுத்தப் படமாவது ஹிட்டாகுமா என்ற நிச்சயமில்லை. தன்னை காப்பாற்றவே வழியில்லாதபோது, அரசியலுக்கு வந்து தாய் நாட்டை காப்பாற்றுவார் விஜய் என ஊர் ஊராக சொல்லி வருகிறார் விஜயின் தந்தை, எஸ்.ஏ. சந்திரசேகரன்.
விஜயின் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை இவர்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறார். விஜய் படம் வெளியாகும் அன்று திரையரங்குகளில் வைக்கப்படும் பேனரில் தொடங்கி, படப்பெட்டியை சாரட் வண்டியில் ஊர்வலமாக எடுத்துவரும் சடங்கு வரை அனைத்தின் பின்புலமும் இவர்தான்.
தனக்கு அரசியல் தெரியாது, அரசியலுக்கு வரமாட்டேன் என்று தனயன் ஒருபுறம் சொல்லிக் கொண்டிருக்க, விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார், சுயநலமில்லாத அவரைப் போன்ற இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என உசுப்பேற்றி வருகிறார், தந்தை.
தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எஸ்.ஏ.சி. தனது இந்த கருத்தை மீண்டும் தெளிவாக எடுத்துரைத்தார். அதாவது, விஜய் அரசியல் பற்றி படித்து, அரசியலில் நுழைந்து, ஊழல் அரசியல்வாதிகளுக்கு மாற்றாக நல்லாட்சி தருவார். உபயம், அவரது ரசிகர்கள்.
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் கீறி வைகுண்டம் போவார்களாம். தமிழா, உன் நிலைமை ரொம்ப கேவலமாக இருக்கேப்பா.