சன்னுக்குப் போட்டியாக படத்தயாரிப்பில் இறங்க கலைஞர் தொலைக்காட்சியே யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் தைரியமாக அந்த வேலையில் காலடி வைத்திருக்கிறது, ராஜ் டிவி.
முதல் தயாரிப்பான காதல்னா சும்மா இல்ல முதலுக்கு மோசமில்லாமல் ஓடுவதில் ராஜுக்கு பரம திருப்தி. அடுத்தடுத்து ஐந்து படங்களை தயாரிக்க திட்மிட்டுள்ளவர்கள், பிறருடன் கைகோர்த்து படங்களை தயாரிப்பதிலும் முனைப்பு காட்டுகின்றனர். அப்படி கூட்டுத் தயாரிப்பில் உருவாகிவரும் படம், குதிரை.
ராஜ் டிவி, நாசரின் மனைவி கமலா நாசருடன் இணைந்து குதிரையை தயாரிக்கிறது. இந்தப் பரிசோதனை ஓட்டத்தில் இன்னொரு பரிசோதனையாக இயக்குனர் ரமணாவை நாயகனாக்கியிருக்கிறார்கள். சுள்ளானில் ஒரு நிமிடம் இடுப்பை அசைத்ததுக்கே பெண்டு கழன்று போச்சு, நடிப்பு நமக்கு சரிப்பட்டு வராது என்று அந்த திசைக்கு கும்பிடு போட்டுச் சென்ற ரமணா எப்படி இதற்கு ஒத்துக்கொண்டார்?
காரணம், கதை. ரா. ராஜசேகர் சொன்ன கதை தனக்கு ஒத்துப் போகும் என்று கருதியதால் நாயகனாக நடிக்க சம்மதித்தேன் என்று கூறனார் ரமணா. தாழ்வு மனப்பானமை கொண்டவராக இதில் வழக்கமான ஹீரோயிஸம் எதுவுமில்லாத வேடமாம் இவருக்கு. ஜோடியாக மலையாள வரவான தர்ஷினி நடிக்கிறார்.
படத்தில் முக்கியமான வேடம் ஏற்றிருப்பது, பிரகாஷ்ராஜ்.