மகன் ஹீரோவாக அறிமுகமான சக்கரக்கட்டி அவ்வளவாக இனிக்காததால் அடுத்தப் படமான புதிய வார்ப்புகளை இழைத்து இழைத்து உருவாக்கி வருகிறார் பாக்யராஜ்.
புதிய வார்ப்புகள் பாக்யராஜ் அறிமுகமான படத்தின் பெயர். அதையே தனது மகன் சாந்தனுவை வைத்து இயக்கும் படத்துக்கும் வைத்துள்ளார். இந்தப் பெயரை அவர் மாற்றக்கூடும் என்கிறார்கள்.
சில மாதங்கள் முன் நடந்த விழா ஒன்றில், விமர்சகரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான தியோடர் பாஸ்கரன் பேசும் போது, பழைய படங்களின் பெயர்களை புதிய படங்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதே மேடையில் அவருக்குப் பிறகு பேசிய பாக்யராஜ், தனது மகனை வைத்து இயக்கும் படத்துக்கு புதிய வார்ப்புகள் என பழைய படத்தின் தலைப்பை வைத்திருப்பதாகவும், தியோடர் பாஸ்கரனின் பேச்சை கேட்ட பிறகு அதனை மாற்றத் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போது படத்தின் பெயரை மாற்றலாமா என யோசித்து வருகிறார் பாக்யராஜ். படத்தின் பெயர் பழமையின் வீச்சத்துடன் இருப்பதுதான் பாக்யராஜின் யோசனைக்கு காரணமாம்.