பாலிவுட்டில் சென்ற வருடம் மெகா பட்ஜெட் படங்கள் பல மண்ணைக் கவ்வியபோது, மினிமம் பட்ஜெட்டில் தயாரான படங்கள் லாபம் சம்பாதித்துக் கொடுத்தன.
ராக் ஆன், லாஸ்ட் லியர், கோஸ்லா கா கோஸ்லா, தி வெனெஸ்டே… என சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் படங்களில் நீரஜ் பாண்டேயின் தி வெனெஸ்டே விமர்சகர்களின் பெருத்த வரவேற்பை பெற்றது.
மும்பை குண்டு வெடிப்பை பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை வாங்க கமல்ஹாசன் ஆர்வம் காட்டுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நஸ்ருதீன் ஷா நடித்த வேடத்தில் கமலும், போலீஸ் கமினராக அனுபம் கெர் நடித்த வேடத்தில் மம்முட்டியும் நடிக்கயிருப்பதாக மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது ஒருபுறம் இருக்க, தி வெனெஸ்டே திரைப்படத்தின் தமிழ் ரீ-மேக்கில் பசுபதி நடிப்பதாக சில வாரங்கள் முன் செய்திகள் வெளியாயின. இந்தியில் தி வெனெஸ்டே படத்தை தயாரித்த யு டிவி நிறுவனம் இதனை மறுத்தது.
இந்தியில் தயாரித்த படங்களை தமிழில் ரீ-மேக் செய்யும் எண்ணம் இருப்பதாகவும், ஆனால் தி வெனெஸ்டே படத்தின் தமிழ் ரீ-மேக்கில் பசுபதி நடிப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்றும் யு டிவி நிர்வாகி தெரிவித்தார்.
கமல் தி வெனெஸ்டே ரீ-மேக்கில் நடிப்பது குறித்து இதுவரை யு டிவி தரப்பில் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.