மூன்று வருடங்களாக நான் கடவுள் படத்தின் மீது படிந்திருந்த எதிர்மறை விமர்சனங்களை துடைத்து எறிந்ததுடன், 2009 ஆம் ஆண்டின் புத்துணர்ச்சியூட்டும் விழாவாக அமைந்தது, நேற்று நடந்த நான் கடவுள் படத்தின் இசை வெளியீட்டு விழா.
படத்தின் ட்ரெய்லர் ஏற்படுத்திய பிரமிப்பு மாறாமலே அனைவரும் பேசினர். பாலாவால் தனது சினிமா வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தை மீண்டுமொருமுறை நினைவுகூர்ந்தார் சூர்யா. படத்தின் ட்ரெய்லர் பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை, ஏனென்றால் பாலாவின் படத்தில் வித்தியாசம் இல்லாவிட்டால்தான் ஆச்சரியம் என்றார், விக்ரம்.
பொதுவாக விழாக்களை தவிர்க்கும் மணிரத்னம், இந்த விழாவில் கலந்து கொண்டதுடன், மனம் திறந்து பாலாவை பாராட்டியது எதிர்பாராத நிகழ்வு. “நான் பாலாவின் ரசிகனாக இங்கு வந்திருக்கிறேன். பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாக்யராஜ் என்ற வரிசையில் அடுத்து பாலாதான். பாலா வந்த பிறகு தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை பார்க்க முடிகிறது. இதனை தொடர்ந்து செய்யுங்கள்” என்று பாராட்டினார்.
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பார்கள். பாலா சேதுவில் பதினாறடி பாய்ந்தார். நந்தாவில் முப்பத்தியிரண்டு அடி, பிதாமகனில் அறுபத்துநான்கு அடி, நான் கடவுளில் நூற்று இருபத்தியெட்டு அடி என்று நினைப்பீர்கள். ஆனால் அது கிடையாது. நூற்று இருபத்தியெட்டுடன் பல சைபர்களை சேர்க்க வேண்டியிருக்கும் என தனது சிஷ்யனை வாழ்த்தினார், பாலுமகேந்திரா.
விழாவுக்கு வந்த விஐபி-களை மேடையில் அமரவைத்து பார்வையாளர்களுடன் அமர்ந்து கொண்டார், பாலா. அவருடன் பார்வையாளர்கள் வரிசையில் காணப்பட்ட இன்னொருவர் படத்தின் வசனகர்த்தா, எழுத்தாளர் ஜெயமோகன்.
வருடத்தின் முதல்நாள் அனைவருக்கும் புத்துணர்ச்சியூட்டிய நிகழ்வாக பாலாவின் நான் கடவுள் இசை வெளியூட்டு விழா அமைந்ததை மறுப்பதற்கில்லை.