அறை எண் 305-ல் கடவுள் படத்துக்குப் பிறகு இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தாமிரா இயக்கத்தில் ரெட்டைச்சுழி என்ற படத்தையும், ஷங்கரின் உதவியாளர் அறிவழகன் இயக்கும் 'ஈரம்' என்ற படத்தையும் தயாரித்து வருகிறது.
இதில் ஈரம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சிந்து. அவர் தமிழுக்கு வந்த காரணமே பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகி நிலையான இடத்தைப் பிடிப்பதற்காகத்தான்.
அப்படி வந்த அவரின் எண்ணத்தில் இப்படி 'அக்ரிமெண்ட்' மண் விழுமென்று நினைக்கவில்லை என்று புலம்பி மூக்கை சிந்தி வருகிறார் சிந்து. அதாவது, ஈரம் படம் முடியும் வரை வேறு எந்தப் படங்களிலும் நடிக்கக்கூடாது. படம் பற்றி பேட்டி கொடுப்பது, கதை பற்றி வெளியே சொல்வது கூடாது என்று கண்டிஷன் போட்டிருப்பதுதான்.
இப்படி நெஞ்சில் கொஞ்சம் கூட ஈரமில்லாமல் கண்டிஷன் போடுகிறாரே என்று தோழிகளிடமெல்லாம் வருத்தத்தை போனில் பகிர்ந்து வருகிறார் ஈரம் பட நாயகி.