மிஷ்கின் இயக்கும் படம் என்றால் அவர்தான் பிரதானமாகத் தெரியவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். எத்தனை பெரிய நடிகர்-நடிகை நடித்தாலும் இது மிஷ்கின் படம் என்று சொல்ல வேண்டும் என்பதைத்தான் விரும்புவார். அவர் தற்போது இயக்கத்தோடு நடித்துக் கொண்டிருக்கும் படம் நந்தலாலா.
இதில் மனநலம் குன்றிய கேரக்டரில் நடிக்கிறார் மிஷ்கின். அஷ்வத் என்ற சிறுவன் முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுக்க நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று அவரை அணுக, கதை கேட்டு அவரும் ஒப்புக்கொண்டார்.
அதன்படி, படத்தின் பின்னணி இசைக்காக ஹங்கேரி இசைக் கலைஞர்கள் சிலரை இசை ஞானி அழைக்க, அதுவே சினிமா வட்டாரத்தில் பேசப்படும் செய்தியாக பரபரப்பானது. மிஷ்கின் இளையராஜாவிடம் பட்ஜெட் அதுஇது என்று ஏதேதோ சொல்லியும் அவர் கேட்கவில்லையாம்.
தற்போது ஹங்கேரியிலிருந்து இசைக் கலைஞர்களை அழைத்து வந்ததால் ராஜாவின் பெயரே எங்கும் அடிபட, இது இளையராஜா படம் என்று எங்கே பெயரெடுத்துவிடுமோ என்ற கலக்கத்தில் இருக்கிறார் இயக்குனர்.