இயக்குனர்கள் சங்கத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் உறுப்பினராக வேண்டும், இல்லையேல் ஜனவரி 1ஆம் தேதி முதல் அவர்கள் படங்களை இயக்க முடியாது என்று தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா, பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இயக்குனர்கள் சங்க தேர்தலில், பாரதிராஜா அணி வெற்றிபெற்றுள்ளது என்று மற்றவர்கள் கூறினாலும், வாக்களித்தவர்கள் அனைவருமே ஓரணி என்பதுதான் உண்மை. சங்க உறுப்பினர்கள் அனைவருக்குமே பொதுவாக இருந்து இந்த சங்கத்துக்கு நலன் பயக்கும் செயல்களை செய்யவேண்டும் என விரும்புகிறோம். எனவேதான் இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்து இருக்கிறோம்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் உறுப்பினர் அல்லாதவர்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழ் திரைப்படங்களில் இயக்குனர்கள், இணை, துணை, உதவி இயக்குனர்களாக பணிபுரிய இயலாது. சங்க உறுப்பினர்களுடன் மட்டுமே திரைப்பட தொழிலாளர்கள் பணிபுரிவார்கள்.
எனவே தற்போது உறுப்பினர் அல்லாமல் பணிபுரிந்து கொண்டிருக்கும் இயக்குனர், இணை, துணை, உதவி இயக்குனர்கள் 31.12.2008க்குள் உறுப்பினராக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
அடுத்ததாக, தமிழ் திரைப்படத்துறை ஆயிரங்களில் தொடங்கி, லட்சங்களில் வளர்ந்து, கோடிகளை எட்டி, தற்போது 100 கோடியையும் தாண்டும் நிலை வந்துள்ளபோதும், சில இணை, துணை, உதவி இயக்குனர்களுக்கு சம்பளம் வராமல் நின்றுவிடுகிறது.
இந்த குறையை நீக்குவதற்காக எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான சென்ற இயக்குனர் சங்க நிர்வாகமும், ராம.நாராயணன் தலைமையிலான தற்போதைய தயாரிப்பாளர் சங்க நிர்வாகமும் இணைந்து இணை, துணை, உதவி இயக்குனர்களுக்கு 'சங்கம் வழி சம்பளம்' என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை வருகிற தைத்திங்கள் முதல் (14.1.2009) அமல்படுத்துவது என்று தீர்மானித்துள்ளோம் என்று இருவரும் கூறியுள்ளனர்.