மூக்கு விடைக்கும் கோபத்தில் இருக்கிறார்கள் தோழர்கள். காஞ்சீவரம் படத்தில் கம்யூனிஸ்டுகளை கொச்சைப்படுத்துவதுபோல் காட்சிகள் இருப்பதாக வரும் தகவல்கள்தான் தோழர்களை கொதிப்படைய வைத்துள்ளது. அப்படி என்னதான் இருக்கிறது படத்தில்?
சுதந்திரத்துக்கு முற்பட்ட காஞ்சீவரம் பட்டு நெசவாளர்களின் கஷ்டத்தை சொல்கிறது ப்ரியதர்ஷனின் படம். பட்டு நெசவாளராக வரும் பிரகாஷ்ராஜ், தனது திருமணத்தின்போது மனைவிக்கு பட்டுச் சேலை அளிப்பேன் என்று கூறுகிறார். ஆனால் அவரது ஆசை நிறைவேறாமல் போகிறது. தனது மகளின் திருமணத்திற்காவது பட்டுச் சேலை அளிப்பேன் என்று கூறுகிறார் பிரகாஷ்ராஜ். அதற்காக பட்டு நெய்யும்போது நூல்களை வாய்க்குள் மறைத்து வீட்டிற்கு எடுத்து செல்கிறார்.
இதனிடையில் கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்களிடையே மாற்றத்தை கொண்டு வருகின்றனர். அடிப்படை உரிமைகளுக்காக போராட்டங்கள் நடத்துகின்றனர். மறுபுறம் பிரகாஷ்ராஜின் மகளுக்கு அவரது நண்பர் மகனுடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. கருத்து வேறுபாடு காரணமாக பிரகாஷ்ராஜும் அவரது நண்பரும் சண்டையிடும்போது பிரகாஷ்ராஜ் வாய்க்குள் மறைத்து பட்டு நூல் எடுத்து செல்வது அம்பலமாகிறது. இதன் காரணமாக அவரது மகளின் திருமணம் தடைபடுவதுடன் திருடன் என்று கூறி அவரை சிறையில் தள்ளுகின்றனர். வாத நோயால் மகள் கஷ்டப்பட, அதை பார்க்க சகிக்காத பிரகாஷ்ராஜ் பரோலில் வெளியே வரும்போது மகளுக்கு தனது கையால் விஷம் கொடுத்து கொலை செய்கிறார்.
கம்யூனிஸ்டாக வரும் பிரகாஷ்ராஜ் சுயநலவாதியாகவும், அவரது இடதுசாரி நண்பர்களை இரக்கமற்றவர்களாகவும் ப்ரியதர்ஷன் சித்தரித்திருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள் தோழர்கள். நெசவாளர்களோ, விவசாயிகளோ... அவர்களின் உரிமைகளுக்காக முதலில் போராடியவர்கள் இடதுசாரிகள். அந்த வரலாற்றை ப்ரியதர்ஷன் கொச்சைப்படுத்தியிருக்கிறார் என்பதே படம் பார்த்தவர்களின் ஆதங்கம்.
படம் திரையரங்குகளுக்கு வரும்போது எதிர்ப்பு இன்னும் வலுப்படும் என்கிறார்கள்.