கோவைதான் ரஜினியின் தலைவலி. அவரின் தீவிர ரசிகர்களும், தலைவலி ரசிகர்களும் இங்குதான் உள்ளனர். ரஜினி கட்சி ஆரம்பிக்காததால் அவர் பெயரில் தாங்களே கட்சி ஆரம்பித்த அவசரக்கார ரசிகர்களும் இங்குள்ளவர்கள்தான்.
இப்போதைய பிரச்சனையின் மையம் ரஜினி மன்ற தலைவர் சத்யநாராயணா. சத்யநாராயணாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று சென்ற வாரம் அவருக்கு ஓய்வு கொடுத்து மன்ற பொறுப்புகளை தனது நண்பர் சுதாகரிடம் ஒப்படைத்தார், ரஜினி. இந்த மாற்றம் சத்யநாராயணாவுக்கு உடல்நிலை சரியாகும் வரைதான் என்றும் கூறப்பட்டது.
ஆனால், சில ரசிகர்களால் அதனை ஜீரணிக்க முடியவில்லை. ரஜினி பிஸியாக இருந்த நேரங்களில் எங்களை அரவணைத்து சென்றதுடன், மன்றத்தினரை ஒரு குடும்பமாக எண்ண வைத்தவர் சத்யநாராயணா. அவரை மீண்டும் மன்றத் தலைவராக நியமிக்க வேண்டும். இல்லையென்றால் கோவையில் இயங்கிவரும் அனைத்து ரஜினி மன்றங்களையும் கலைப்பதுடன், தமிழ்நாட்டில் எந்திரன் ஓடாதபடி செய்வோம் என கோவை மாவட்ட ரசிகர்கள் சிலர் எச்சரித்துள்ளனர்.
இந்த எச்சரிக்கை பிசுபிசுத்துவிடும் என்றாலும் பூசாரிக்கு ஆதரவாக சாமியை பகைத்துக் கொள்ளும் இந்த அதிசயம் ரஜினியை கவலைப்பட வைத்துள்ளதாம்.