நிஷா புயலின் சீற்றத்துக்கு சென்னையே முடங்கி வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஏவிஎம் ஸ்டுடியோவிலிருந்து உற்சாகமாக பாடல் கசிந்து வந்தது.
பட படவென விரியுது சிறகு
திசையெங்கும் பறக்குது மனசு...
அடாது மழையில் விடாது பாடல் ஒலிக்க, உள்ளே எட்டிப் பார்த்தோம். புகைப்படம் படத்தின் ஷூட்டிங். கலர்ஃபுல் அரங்கில் தீனா மாஸ்டர் சொல்லிக் கொடுக்க, பாடலுக்கேற்ப இடையை அசைத்துக் கொண்டிருந்தார்கள், அந்த ஏழு பேர். நந்தா, அம்ஷத், ஹரித், சிவம், மிருநாயினி, ப்ரியா மற்றும் யாமினி. புகைப்படத்தின் நாயகன், நாயகிகள்.
செல்வராகவனிடம் 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை படங்களில் பணிபுரிந்த ராஜேஷ் லிங்கம் புகைப்படத்தின் இயக்குனர்.
''நான் வேறு தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்பதைப் பார்த்து, எனது நண்பர் மணிகண்டன், வேறு ஆட்களிடம் ஏன் வாய்ப்பு கேட்கிறாய் என்று அவரே இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்தார்.'' புகைப்படத்தின் சிறப்பம்சமே இந்த நட்புக்கு மரியாதைதான் என்றார் ராஜேஷ் லிங்கம் நெகிழ்ச்சியுடன்.
பாடலுக்கான அரங்கை பல நாட்கள் இரவு பகலாக உழைத்து உருவாக்கியிருந்தார் கலை இயக்குனர் ஆரோக்கியராஜ். காஸ்ட்லியான அரங்கு. நமது எண்ணத்தைப் புரிந்து கொண்ட ராஜேஷ்லிங்கம், ''நட்புக்காக இதுவரை ஒன்றரை கோடி செலவழித்துள்ளார் மணிகண்டன்'' என்றார்.
விடைபெறும் போது, படமாகிக் கொண்டிருந்தது என்ன பாடல் என்று கேட்டோம். நட்பின் பெருமையைச் சொல்லும் பாடல் என்றார் அவர்.
பொருத்தமான பாடல்!