இயக்குனர் ஜெகன்நாத் எனது கதையை திருடிவிட்டார் என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் கூறியிருக்கிறார் ஒருவர்.
புதிய கீதை, கோடம்பாக்கம் படங்களை இயக்கிய ஜெகன்நாத்துக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது, அவர் மூன்றாவதாக இயக்கிய ராமன் தேடிய சீதை. சேரன் ஹீரோவாக நடித்த இப்படம் வசூல் ரீதியாக சுமார் என்றாலும் நல்ல படம் என்ற பாராட்டை விமர்சகர்களிடம் பெற்றது.
சேரன் தனக்கு பெண் தேடி அலைவதுதான் படத்தின் கதை. இது தான் எழுதிய கதை என விருதுநகரை சேர்ந்த நாகவேல் என்ற இளைஞர் புகார் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினரான நாகவேல் தயாரிப்பாளர் ஒருவரிடம் பொண்ணு பார்க்கிறோம்க என்ற கதையை கூறியிருக்கிறார். கதை நன்றாக இருப்பதாகச் சொன்ன தயாரிப்பாளர் பிறகு கதை பற்றி ஏதும் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் ஜெகன்நாத் எடுத்த ராமன் தேடிய சீதை படம் தனது பொண்ணு பார்க்கிறோம்க கதையை ஒத்திருப்பதை கண்டு நாகவேல் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுபற்றி அவர் உடனே எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
பொண்ணு பார்க்கிறோம்க கதையின் சீல் வைத்த பிரதி நாகவேலிடம் இருக்கிறது. அதை படித்துப் பார்த்தபின், ராமன் தேடிய சீதை கதையை அது ஒத்திருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்தாளர்கள் சங்கம் உறுதியளித்துள்ளது.