Publish Date: Wed, 07 Jan 2009 (21:41 IST)
Updated Date: Thu, 20 Nov 2008 (00:57 IST)
சர்வம் படத்தில் நடித்துவரும் ஆர்யா அடுத்து கிரீடம் விஜய் இயக்கும் பீரியட் படத்தில் நடிக்கிறார். சுதந்திரத்துக்கு முந்தைய சென்னை பட்டணத்தை மையமாக வைத்து தயாராக இருக்கிறது இப்படம்.
சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களை தயாரித்த கல்பாத்தி எஸ் அகோரம் இந்தப் படத்தை தயாரிக்கிறார். ஆர்யாவின் ஜோடி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. அனேகமாக அவர் வெளிநாட்டு நடிகையாக இருக்கக் கூடும் என்கிறார்கள்.
இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். நாற்பதுகளில் சென்னை பட்டணம் எப்படி இருந்ததோ அதனை அப்படியே மறு உருவாக்கம் செய்ய இருக்கிறார், கலை இயக்குனர் செந்தில்குமார். இதற்காக பிரமாண்டமான அரங்குகள் போடப்படுகிறது.
ஆர்யா நடித்த அறிந்தும் அறியாமலும், பட்டியல், ஓரம்போ மற்றும் தற்போது நடித்துவரும் சர்வம் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நீரவ்ஷா இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.
படங்களில் நடித்துக் கொண்டே தயாரிப்பிலும் இறங்க திட்டமிட்டுள்ளார் ஆர்யா. நண்பர்களுடன் இவர் ஆரம்பித்திருக்கும் படநிறுவனத்துக்கு தி ஷோ பீப்பிள் என பெயர் வைத்துள்ளார்.
பாலுமகேந்திரா, பாலா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுரேஷ், தி ஷோ பீப்பிளின் முதல் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளாராம் ஆர்யா.