மர்மயோகி படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறதே தவிர கைவிடப்படவில்லை என்றார் படத்தை தயாரிக்கும் பிரமிட் சாய்மீராவின் தலைவர் சுவாமிநாதன்.
குசேலன் பிரச்சனை தொடர்பாக நிருபர்களை சந்தித்த அவர், குசேலனால் பிரமிட் சாய்மீராவுக்கு 30 கோடி நஷ்டம் என்றும், விநியோகஸ்தர்களின் நலனை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர்கள் அளித்த 5 கோடியுடன் ஒன்றரை கோடி ருபாய் சேர்த்து விநியோகஸ்தர்களுக்கு அளித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்; மர்மயோகி கைவிடப்படவில்லை, படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றார். உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால் வெளிநாட்டு சினிமா வர்த்தகம் 40 சதவீதம் வரை குறைந்துள்ளது.
அமெரிக்காவில் 12 டாலருக்கு விற்பனையான டிக்கெட் இப்போது 4 டாலருக்கு இறங்கிவிட்டது. இதன்காரணமாக படத்தின் வர்த்தகம் குறித்து யோசிக்க வேண்டியுள்ளது. அதனால்தான் மர்மயோகி படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, ஆனால் கண்டிப்பாக படம் வெளிவரும் என்று விளக்கமளித்தார்.
இந்திப் படங்களை வாங்கி விநியோகிப்பதையும் பிரமிட் சாய்மீரா நிறுத்தி வைத்துள்ளது.