இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்த சீமானும், அமீரும் பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி போலீஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
சீமான், அமீர், பாரதிராஜா, சேரன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் இல்லாவிடில் அவர்களின் உருவப் பொம்மைகளை எரிப்போம் என முன்னதாக காங்கிரசார் மிரட்டல் விடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்தே சீமானும், அமீரும் கைது செய்யப்பட்டனர்.
கைது நடவடிக்கை குறித்து ஏற்கனவே போலீஸார் அவர்களிடம் தெரிவித்திருந்ததால் சீமானும், அமீரும் கைது செய்ய வசதியாக தங்களது வீட்டிலேயே காத்திருந்தனர்.
எனது சகோதரனுக்கு ஆதரவு குரல் கொடுத்தது தவறு என்றால் அதனை நான் தொடர்ந்து செய்வேன் என்று கைதுக்கு முன் தெரிவித்தார் சீமான்.
பாரதிராஜா மற்றும் சேரன் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
400 தமிழக மீனவர்களின் சாவுக்கு காரணமான பாசிச இலங்கை அரசுக்கு எதிராக சுண்டுவிரல்கூட அசைக்காத அரசியல் கட்சிகள் சொந்த சகோதரனுக்கு குரல் கொடுத்த கலைஞர்களை கைது செய்ய மிரட்டல் விடுவதும் அதனை இந்த அரசு கட்டளையாக நினைத்து உடனடியாக கைது செய்வதும் உலக தமிழர்கள் அனைவரின் உள்ளங்களிலும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலையுலகமும் இந்த கைதால் கொந்தளித்துப் போயுள்ளது. மிரட்டல் அரசியலுக்கு எதிராக அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பு.