"தங்ககாசு மோசடி நிறுவனத்துடன், எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை'' என்று நடிகை ரம்யாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த 'கோல்டு குவெஸ்ட்' தங்க நாணய மோசடி வழக்கில் நடிகை ரம்யாகிருஷ்ணனுக்கு தொடர்பு உள்ளதா? என்று காவல்துறையினர் விசாரித்து வருவதாக தகவல் வெளியானது.
இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகை ரம்யாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தங்ககாசு மோசடி வழக்கில் என்னை தொடர்புபடுத்தி வெளியான தகவல் தவறானது. அந்த தகவல் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதோடு மட்டுமல்லாமல், என் குடும்பத்தினர் மனதையும் பெரிதும் பாதிப்படைய வைத்துள்ளது.
இதுபோன்ற வதந்திகளை கண்டு கலங்காத, தைரியமான பெண்ணாக நான் இருந்தாலும், இந்த அவதூறான தகவல் என் மனதை மிகவும் காயப்படுத்தி உள்ளது. எனக்கும், அந்த தகவலில் குறிப்பிட்டுள்ளதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த 25 வருடங்களாக கலைத்துறையில் நான் கஷ்டப்பட்டு தக்க வைத்துள்ள நல்ல பெயரை இன்றுவரை காப்பாற்றி வருகிறேன். நான், கணவர், குழந்தைகளுடன் ஐதராபாத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். மோசடி செய்து பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை'' என்று ரம்யாகிருஷ்ணன் கூறியுள்ளார்.