அபியும் நானும் படத்தின் இசை வெளியீட்டு விழா கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. பல்வேறு விடை தெரியாத கேள்விளுக்கு பதில் அளிப்பதாக இருந்தது இந்த விழா.
சன் பிக்சர்ஸின் காதலில் விழுந்தேன் படத்தை மதுரையில் திரையிட விடாமல் அழகிரி பெயரில் சிலர் மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இன்று ஆடியோ வெளியீட்டு விழாவில் அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசினார் முதல்வர்.
மணிரத்னத்தின் இருவர் படம் வெளிவந்த போது சிலர் படத்தை தடை செய்ய சொன்னதாகவும் தான் அதற்கு மறுத்ததாகவும் தெரிவித்தார் முதல்வர். இருவரை மட்டுமல்ல எந்த படத்தையும் தடை செய்யும் எண்ணம் தனக்கில்லை என்று அவர் சொன்ன போது புரிந்தவர்கள் முகத்தில் புன்னகை.
இரண்டு நாள் முன்பு அபியும் நானும் படத்தைப் பார்த்த கனிமொழி, படத்தில் கணவன் மனைவியை அடிக்கும் காட்சியை தவிர்த்திருக்கலாம் அல்லது குடும்ப வன்முறை சட்டப்படி தவறு என்று கார்டாவது காண்பித்திருக்கலாம் என்று விழாவில் குறிப்பிட்டு பேச, மேடையிலேயே அதற்கு பதிலளித்தார் பிரகாஷ்ராஜ். குறிப்பட்ட காட்சி வரும்போது கார்ட் போடுவதாக அவர் உறுதியளித்தார்.
பிரகாஷ்ராஜ் தனது மனைவி குழந்தைகளுடன் விழாவில் கலந்து கொண்டார். தனது மனைவியை அவர் விவாகரத்து செய்யப் போகிறார் என்ற ஹாஸ்யங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருந்தது அவரது வருகை.
விழாவில் இயக்குனர் ராதாமோகன், த்ரிஷா, ஐஸ்வர்யா, அமீர், பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.