Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் குடித்தேனா? - குமுறிக் கொட்டிய சிம்பு!

Advertiesment
நான் குடித்தேனா? - குமுறிக் கொட்டிய சிம்பு!
பிஞ்சிலே கனிந்தவர் சிம்பு. கல்லடிபடுவது இயற்கை. ஆனால் இந்தமுறை கண்ணீர் விடும் அளவுக்கு அவரை காயப்படுத்திவிட்டன பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகள். கேள்விக்கே இடமின்றி அவர் குமுறிக் கொட்டிய பேட்டியிலிருந்து...

என்னைப் பற்றி பத்திரிக்கையில் அவதூறான செய்திகள் வருகின்றன. செப்டம்பர் 3 தேதி முதல் 14 ஆ‌ம் தேதி வரை இலங்கையில் நடந்த சிலம்பாட்டம் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன்.

10ம் தேதி என் அம்மா போன் செய்து மாண்டியா காரை காணவில்லை, டிரைவர் இன்னும் வரவில்லை என்றார். அன்று என் தம்பி குறளரசன் மாண்டியா காரை எடுத்துக்கொண்டு அண்ணா சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிட சென்றிருக்கிறான். ஹோட்டலை விட்டு திரும்புகையில் காரை காணவில்லை. வீட்டுக்கு தகவல் சொல்லியிருக்கிறான்.

மறுநாளும் காரை காணாததால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதற்கான FIR போட்ட ஆதாரங்களும் இருக்கின்றன. சம்பவம் நடந்த அன்று நான் இலங்கையில் இருந்தேன். அதற்கான பாஸ்போர்ட், விசா ஆதாரங்களும் என்னிடம் உள்ளது.

உண்மை இப்படியிருக்க, சம்பவ தினத்தன்று நான் குடித்துவிட்டு தம்பியுடன் தள்ளாடியபடி காரை தேடியதாகவும், என் அம்மா கார் கிடைத்துவிட்டது வீட்டிற்கு வாருங்கள் என்று கண்டித்ததாகவும் செய்திகள் வந்தன. இது என்னையும் என் குடும்பத்தினரையும் காயப்படுத்தியுள்ளது.

என்னைப் பற்றி எத்தனையோ கிசுகிசுக்கள் எழுதியிருக்கிறார்கள். அதெல்லாம் மறந்துவிட்டது. அனாலும் என்னை குறிவைத்தே தவறான செய்தி வெளியிடுவது ஏன் என்று தெரியவில்லை. அப்பா மறுப்பு சொன்ன பிறகும் என்னை தவறாக சித்தரிக்கிறார்கள்.

ஏற்கனவே ஒரு நடிகையுடன் இணைத்துப் பேசினார்கள். இப்போது என்னுடைய கேரக்டரையே இழிவுபடுத்தியிருக்கிறார்கள். நான் இதுவரை குடித்ததே இல்லை. ஆனால், குடித்துவிட்டு தகராறு செய்தேன் என்கிறார்கள்.

என்னைப் பற்றிய கிசுகிசுக்களை படித்து மனம் மரத்துவிட்டது. ஆனால் என் தம்பி சின்னப் பையன். அவன் குடித்திருந்ததாக எழுதியிருப்பதை படித்துவிட்டு தினம் அழுகிறான். ஏன் என்னைப் பற்றி இப்படி எழுதுகிறார்கள்? நான் என்ன தவறு செய்தேன்?

நான் மதுவை கையால் தொட்டது கூட கிடையாது. என் கேரக்டரை பாழ்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே யாரோ இப்படியான தவறான தகவல்களை பரப்புகிறார்கள். தயவு செய்து என்னை குறிவைப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil