ஒரு வழியாக குசேலன் தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.
குசேலனை அதிக விலை கொடுத்து வாங்கிய திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் அறிவித்த 35 சதவீத நஷ்டஈடு போதாது, எழுது சதவீதம் வேண்டும் என போர்க்கொடி தூக்கினர். இல்லையென்றால் பாலசந்தரின் கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ், சாய்மீரா மற்றும் ஐங்கரன் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என அறிவித்தனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம. நாராயணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்ட முடிவில் ராம. நாராயணனும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அண்ணாமலை இருவரும் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டனர்.
தண்ணீருக்குள் இருக்கும் மீனுக்கு விலை பேச முடியுமா? சுறாவுக்கு வலை வீசினால் அயிரை சிக்கலாம். அயிலை என்று நினைத்து வீசிய வலையில் சுறா சிக்கலாம். சினிமா வியாபாரமும் அப்படிதான் என்று அறிக்கையில் ஒத்துக் கொண்டவர்கள், குசேலன் பிரச்சனை முடிவுக்கு வந்ததாகவும், யார் மீதும் தடையில்லை, அப்படி பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகளில் உண்மையில்லை என்று தெரிவித்தனர்.
தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் முத்தமிழ் போல் இணைந்து செயல்படுவோம் எனவும் அறிக்கையில் உறுதியளித்துள்ளனர்.