சிரிப்புத் தலைப்பில் கொஞ்சம் சீரியஸ் படம். ஆர்.ஸ்ரீனிவாஸ் இயக்கும் கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க படத்தின் கதையை ஒரு வரியில் சொல்வதென்றால் இப்படித்தான் சொல்ல வேண்டும்.
சாதிக்க நினைக்கும் நவ்தீப்பிற்கு சரமாரியாகத் தடைகள். துவண்டுபோகும் அவருக்குத் தூண்டுகோளாக வருகிறாள் ஒருத்தி. அஞ்சு நிமிட மாண்டேஜ் பாடலில் நினைத்ததை முடிப்பார் நவ்தீப் என்றுதானே எண்ணத் தோன்றும்? அதுதான் இல்லை.
உதவி செய்ய வந்தவளே ஒரு கட்டத்தில் உபத்திரவமாக மாறுகிறாள். பிறகு நடந்தது என்ன? நவ்தீப் தடைகளைத் தகர்த்தாரா? நினைத்ததை முடித்தாரா என்பதை சிரிப்பு கலந்து சீரியஸாகச் சொல்லியிருக்கிறார் ஸ்ரீனிவாஸ்.
நவ்தீப்பிற்கு ஜோடியாக ஏக்தா கோசல் என்ற மும்பை ஏஞ்சல் நடிக்கிறது. இவர்களுடன் வடிவுக்கரசி, செந்தில், சிசர் மனோகர் ஆகியோரும் உண்டு. இசை மணி சர்மா.
முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்து இரண்டாவது கட்டத்திற்குத் தயாராகி வருகிறது கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க.