புதுமுகங்களை வைத்து படம் இயக்கிய இயக்குனரோ, தயாரிப்பாளர்களோ... யாராவது புது முகங்களை வைத்து படம் இயக்குவதாக சொன்னால் அவர்கள் கையைப் பிடித்துக்கொண்டு கதறுகிறார்கள்.
காரணம் நல்ல கதை இருந்தும் புதுமுகம் என்றால் தியேட்டருக்குள் யாரும் வருவதே இல்லை, அதனால் பல லட்சம் நஷ்டம் என்கிறார்கள்.
அவர்களிடம் புதுமுகங்கள் நடித்த 'சுப்ரமணியபுரம்' ஓடவில்லையா? இதற்குமுன் 'சித்திரம் பேசுதடி' ஓடவில்லையா? புதுமுகங்களை வைத்து எடுத்த எத்தனையோ படங்கள் அன்றும் இன்றும் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன என்று சில தைரியமான தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.
அப்படி ஒரு தயாரிப்பாளர்தான் ஹீரோ - ஹீரோயின் என புதுமுகங்களையே வைத்து 'உதிரம்' என்ற படத்தை தயாரிக்க உள்ளார்.
'சிலந்தி' படத்தின் இயக்குனர் ஆதியின் உதவியாளர் ராஜுகோபி இயக்குகிறார். வித்தியாசமான காதல் கதையான உதிரத்தில் மூன்று இளம் நாயகர்களும், இரண்டு இளம் நாயகிகளும் நடிக்க உள்ளனர்.
'நல்ல கதையை தெளிவுடன் எடுத்தால் எப்படி சார் ஓடாமல் இருக்கும். கண்டிப்பாக 'உதிரம்' மிகப்பெரிய வெற்றிப் படமாகக் கொடுக்க உதிரம் சிந்தி உழைக்கிறேன்' என்கிறார் இப்பட இயக்குனர்.