சூப்பர் ஸ்டார் படம் என்றாலே பிரம்மாண்டமான படம் என்பதும், அதற்கான ஆர்ப்பாட்டங்களும் குறைந்தபாடில்லை. அப்படி வெளியான படங்களில் தற்போது அவரின் இரண்டு படங்கள் வசூலில் தோற்றுள்ளன என்பது மறைக்க முடியாத உண்மை. ஒன்று ஷங்கர் இயக்க, ஏவி.எம் தயாரித்த 'சிவாஜி' படம். இரண்டாவது படம் தற்போது வெளியான 'குலேசன்' இதன் தயாரிப்பாளர் இயக்குனர் பாலசந்தர்.
ரஜினி படம் ஆரம்பிக்கத் தொடங்கியவுடன், பத்திரிகையும், டி.வி. மீடியாவும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடத் தொடங்கி விடுகின்றன. அதுமட்டுமில்லாமல் இல்லாததை இருப்பதாக தன் கற்பனைக்கு ஏற்றவாரு அத்தனை கோடி செலவு, அங்கே செட், இங்கே பாடல் காட்சி என்றெல்லாம் எழுதுவதைத் தாண்டி, அப்படத்தில் முதல் ரஜினி ஸ்டில்லை வெளியிடவும் போட்டி போடுகின்றன.
இப்படி எழுதி எழுதியே படத்தை எதிர்பார்க்க வைப்பதோடு செய்கிற பட்ஜெட்டையும் விநியோகஸ்தர்கள் தலையில் கட்டி விடுகின்றனர் தயாரிப்பாளர்கள்.
அதன் விளைவாக போட்ட அசலைக் கூட ’குசேலன்' வசூலிக்கவில்லை எனவும், நஷ்டஈடாக சில லகரங்களைக் கேட்டு போர்க்கொடி தூக்க இருக்கின்றனர் சில விநியோகஸ்தர்கள்.
ரஜினியின் சொந்த படமான 'பாபா' படத் தோல்விக்காக நஷ்டஈடு வழங்கியது போல் குசேலனுக்கு ரஜினி கொடுப்பார் என்று காத்துக் கொண்டு இருக்கின்றனர்.