Publish Date: Mon, 11 Aug 2008 (16:49 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:42 IST)
அட்வான்ஸ் வாங்கிவிட்டு தயாரிப்பாளர்களை அலையவிடும் நடிகைகள் மத்தியில் இப்படி ஒருவரா? ஸ்ரேயாவை அண்ணாந்து பார்த்து வியக்கிறது கோடம்பாக்கம்.
விஷயம் இதுதான். பொல்லாதவன் படத்தை தயாரித்த கதிரேசனுக்கு மீண்டும் ஒரு படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தார் தனுஷ். வெற்றிமாறனே இதற்கும் இயக்குனர். ஸ்ரேயாவுக்கு செழுமையான ஒரு தொகையை அட்வான்ஸாக கொடுத்து வைத்தார் கதிரேசன்.
சொன்னபடி கதிரேசன் ஏப்ரலில் படப்பிடிப்பை தொடங்க வேண்டும். ஆனால், தொடங்கவில்லை. ஸ்ரேயாவின் கால்ஷீட் வீணானது ஒருபக்கம் இருக்க, ஏற்கனவே ஒப்புக்கொண்ட இரு படங்களை முடித்துவிட்டே கதிரேசன் படத்தில் நடிக்க வேண்டும் என தனுஷுக்கு நிபந்தனை விதித்தது தயாரிப்பாளர்கள் சங்கம்.
இதனை அறிந்த ஸ்ரேயா, அட்வான்ஸை திருப்பிக் கொடுக்க முன்வந்தார். ஸ்ரேயாவை எப்படியும் நடிக்க வைப்பது என்ற முடிவில் இருந்த கதிரேசன் இதோ அதோ என அட்வான்ஸை வாங்காமல் இழுத்தடிக்க, 'செக்'கை கவரில் போட்டு கவரிங் லெட்டருடன் நடிகர் சங்கத்துக்கே அனுப்பினார் ஸ்ரேயா. எனது கால்ஷீட்டை பயன்படுத்தாமல் வீணடித்ததால் அந்தப் படத்தில் நடிக்க முடியாது என்பது கவரிங் லெட்டரின் சுருக்கம்.
அட்வான்ஸ் கிடைத்தால் சுருட்டிக் கொண்டு ஓடுகிறவர்கள் மத்தியில் இப்படியொரு நடிகையா? ஆச்சரியப்படுகிறார்கள் திரையுலகினர்.