நேற்று வரை கட்டுமஸ்தான நடிகர் என்றால் அது சரத்குமார். இன்று ஜுனியர் நடிகர்கள் சிக்ஸ் அப்ஸ் உடம்புடன் பார்ப்பவர்களை மிரட்டுகிறார்கள். நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்யும் சரத்குமாரையும் தொற்றிக் கொண்டுள்ளது சிக்ஸ் அப்ஸ் மோகம்.
பார்க்க 'கிண்'ணென்று உடம்பிருந்தாலும், சட்டையைக் கழற்றினால் சரத்திடம் 'கட்'ஸை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். வயிறைப் பார்த்தால் குறைக்க வேண்டிய கதை ஏராளம் இருப்பது தெரியும்.
அதையெல்லாம் கரைத்து சிக்ஸ் அப்ஸில் தோன்ற முயற்சி எடுத்து வருகிறார் சரத். இவர் தயாரித்து நடிக்கும் 1977 படத்தில் இவருக்கு அப்பா மகன் என்று இரண்டு வேடங்கள். மொத்தம் ஆறு கெட்டப்புகள். ஹாலிவுட்டில் இருந்தெல்லாம் ஸ்டண்ட் மாஸ்டர்களை வரவழைக்கிறார்கள்.
பதினைந்து கோடி பட்ஜெட்டில் தயாராகும் படத்தில் பழனி படிக்கட்டாக கட்ஸ் தெரிய நடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார் சரத்.
கட்சி தொடங்கியவரால் 'கட்ஸ்' வரவழைக்க முடியாதா என்ன. சரத் சார்... முயற்சி திருவினையாக்கும்!