கன்னடர்களிடம் ரஜினி மன்னிப்பு கேட்டது தமிழ்த் திரையுலகிலும் புயலைக் கிளப்பியுள்ளது. ஒகேனக்கல் உண்ணாவிரதமேடையில் ரஜினியை பகிரங்கமாக விமர்சித்த சத்யராஜ், இந்த மன்னிப்பை ரஜினியின் திடீர் பல்டி என்று வர்ணித்துள்ளார்.
ரஜினி மன்னிப்பு கேட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும், ஒட்டுமொத்த தமிழர்களையும் அவர் அவமதித்துவிட்டார், தமிழர்களை இளிச்சவாயர்களாக ரஜினி நினைக்கிறாரா என காட்டமான வார்த்தைகளில் விளாசியிருக்கிறார் சத்யராஜ்.
விஜய டி.ஆர். விடுத்துள்ள அறிக்கையில், ரஜினி ஹீரோவாக நினைத்து ஜீரோவாகிவிட்டார், என கிண்டல் செய்துள்ளார்.
ஒகேனக்கல் பிரச்சனையில் கன்னடர்களிடம் பாடம் கற்றுக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார் ரஜினி. இதற்கு என்ன பொருள், உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டது தவறு என்கிறாரா? தண்ணீரக்காக தவிக்கும் மக்களுக்காக பேசியது தவறு என்கிறாரா? அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கிய தமிழக மக்களுக்கு ரஜினி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சரத்குமார்.
ரஜினியை கண்டித்திருக்கும் சத்யராஜ், டி.ஆர். இருவருமே, தங்களுக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டிருந்தால், கர்நாடகாவில் அந்தப் படம் ஓடாவிட்டால் எவ்வளவு நஷ்டம் அடைந்திருக்குமோ அதனை தங்களது சம்பளத்தில் விட்டுக் கொடுத்திருப்போம் என்று கூறியுள்ளார்.
இந்த எதிர்ப்புகளுக்கிடையில் ரஜினியை ஆதரித்து பேசியிருக்கிறார் குஷ்பு. அவரது நிலைமையில் இருந்து என்ன பேச வேண்டுமோ, செய்ய வேண்டுமோ அதனை செய்துள்ளார் ரஜினி என்று கூறியுள்ளார் குஷ்பு.
இந்த விவாதம் இன்னும் தொடரும் என்பதாகவே தெரிகிறது.