Publish Date: Thu, 31 Jul 2008 (16:50 IST)
Updated Date: Thu, 31 Jul 2008 (16:43 IST)
குசேலன் எப்படி வந்திருக்கிறது? படத்தை ரசித்து முதல் விமர்சனத்தை முன்வைத்துள்ளார் பாலசந்தர். ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகும் குசேலனின் பிரிமியர் ஷோ, சென்னை போர் பிரேம் திரையரங்கில் நடந்தது. ரஜினி தனது மனைவி லதா, மகள் செளந்தர்யாவுடன் கலந்து கொண்டார்.
படத்தின் தயாரிப்பாளர் பாலசந்தர், இயக்குனர் பி. வாசு, படத்தை வாங்கிய பிரமிட் சாய்மீராவின் நிர்வாக இயக்குனர் சாமிநாதன், போர் பிரேம் திரையரங்கின் உரிமையாளரும், இயக்குனருமான பிரியதர்ஷனின் மனைவி லிசி ஆகியோரும் ரஜினியுடன் படம் பார்த்தனர்.
படத்தை பார்த்த பாலசந்தர் இது வழக்கமான ரஜினி படம் இல்லை என்றார் நெகிழ்ச்சியுடன். சூப்பர் ஸ்டாராக இருப்பவருக்கும், அவரது ஏழை நண்பருக்கும் உள்ள மனிதாபிமானமே குசேலன் என்றவர், வழக்கம் போல் சண்டையில் முடியவில்லை, ஆனால் படம் பார்த்து வருகிறவர்கள் கண்கலங்கியபடிதான் வருவார்கள் என்றார்.
படத்தின் இறுதி 20 நிமிடங்கள் சிறப்பாக இருப்பதாகவும், கிளைமாக்ஸில் ரஜினி தன்னை கண்கலங்க வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பாலசந்தரின் விமர்சனம் குசேலன் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.